Health

கர்ப்பக் காலத்தில் அசதி நிலை எதனால் ஏற்படுகிறது?

By  | 

கர்ப்பக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப்படும்வரை, வாந்தி யும் மயக்கமும் ஏற்படும்.

கரு, கருப்பையில் தங்கி வளர ஆரம்பித்ததுமே வாந்தியும் மயக்கமும் தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும்.

எதையும் சாப்பிடப் பிடிக்காது.  கமகமக்குதே என்று சொல்ல வைக்கும் பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். தொட்டதற்கெல்லாம் வாந்தி வரும்.

அதற்காக வயிற்றை சும்மா காய விடக்கூடாது. அடிக்கடி பழச்சாறு வகைகளை குடிக்கவேண்டும். வாய்க்கு என்ன பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடவேண்டும்.

இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் வாந்தியும் மயக்கமும் உள்ள காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது.

வைத்தியர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். ‘எதற்கும் அடங்க மாட்டேன்’ என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், வைத்தியரை நாடவும்.

இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே வைத்தியரைப் பார்க்கவேண்டும்.  அடிக்கடி தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர வாய்ப்பிருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, வாந்தியும் மயக்கமும் எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *