Articles

மக்களால் நான் மக்களுக்காகவே நான் 05: ஆங்கில திரைப்படத்தால் ஆத்திரமுற்ற ஜெயா!

By  | 

1961ஆம் ஆண்டு…

அந்த ஆண்டில் எடுக்கப்பட்ட கன்னட திரைப்படமொன்றில் சந்தியாவும் நடித்திருந்தார். அதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு ஜெயாவுக்கும் கிடைத்தது.

‘ஸ்ரீ ஷைல மகாத்மே’ என்ற அந்த பக்தித் திரைப்படத்தில் பார்வதி வேடமேற்று ஜெ நடித்திருந்தார். அப்போது ஜெயாவுக்கு 13 வயது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோரே அந்தப் படத்தின் பிரதான நடிகர்கள்.

பாடசாலை விடுமுறையின் போது மட்டுமே படப்பிடிப்புக்கு ஜெயா செல்வார். குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் படிப்புக்கு மத்தியில் நடிப்பெதற்கு என்ற எண்ணம் ஜெயாவுக்கும் அவரது தாய்க்கும் இருந்தது. என்றாலும் தொடர்ந்து வாயப்புகள் வர ஆரம்பித்தன. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வந்த வாய்ப்புகளை இருவராலும் புறந்தள்ள முடியவில்லை.

தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களில் ஜெயாவின் நடிப்பையும் ஆங்கில மொழித் திறமையையும் கண்ட பார்த்தசாரதியும் நடிகர் சோவும் அதே ஆண்டில் தயாரிக்கப்பட்டு வந்த ஆங்கில திரைப்படத்துக்கு ஜெயாவையே சிபாரிசு செய்தனர்.

அதன்படி ஜெயாவின் குடும்பத்தாருக்கு பழக்கமான ஒருவர் தனது நண்பருடன் ஜெயாவின் வீட்டுக்கு சென்றிருந்தார். ஐரோப்பிய பட கம்பனி ஒன்றின் கூட்டுறவில் இந்திய பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஆவணப்படம் ஒன்றை எடுக்க தனது நண்பர் திட்டமிட்டுள்ளதாக உடன் அழைத்து வந்தவரை அந்த நபர் சந்தியாவுக்கு அறிமுகம் செய்தார்.

சந்தியாவின் வீட்டுக்கு குடும்ப நண்பருடன் அழைத்து வரப்பட்டவர், முன்னாள் இந்திய நாட்டு ஜனாதிபதியான திரு வி.வி. கிரியின் மகனான திரு. சங்கர் கிரி. ‘tea houses of august moon’ என்ற ஆங்கில நாடகத்தில் ஜெயாவின் ஆங்கில புலமையை கண்டு கவரப்பட்ட சங்கர் கிரி, தான் எடுக்கப்போகும் ஆங்கிலப் படத்தில் ஜெயாவை நடிக்க வைக்க சந்தியாவிடம் அனுமதி கேட்டார்.

ஜெயாவின் தாய் இதற்கு சம்மதிக்க தயங்கினார். தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதால்  நடிப்பு எங்கே படிப்பை கெடுத்துவிடுமோ என்று சந்தியா பயந்தார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மட்டும் நடிக்க வந்தால் போதும் என்று கிரி கூறியதால் நடிக்க அனுப்புவதாக அரை மனதுடன் சந்தியா தெரிவித்தார். தாய் உறுதியளித்ததால் ஜெயாவும் நடிப்பதற்கு மறுக்கவில்லை. படப்பிடிப்பு வேலைகளும் நிகழ்ந்தன.

குறுகிய காலத்தில் ஆவணப்படமாக எடுக்க ஆரம்பித்து, பின் படப்பிடிப்பு முடியாமல் நீண்டுகொண்டே சென்று முழு நீள திரைப்படமானது. குறுகிய காலத்துக்கு மட்டும்தானே என்று கணக்கிட்டு வந்த ஜெயா, படம் முடிவுக்கு வராததையிட்டு சளிப்படைந்தார்.

விடுமுறை நாட்களில் மட்டுமே நடிப்பது என்ற நிலை மாறி கிழமை நாட்களிலும் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இதனால் பாடசாலைக்கு கிரமமாக செல்ல முடியாது போனது. படிப்பதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்தது. பரீட்சை நாட்களிலும் பாடசாலைக்கு சமுகமளிக்க ஜெயாவால் முடியவில்லை. ஆரம்பத்தில் ஜெயாவுக்குரிய செலவுகளை படக்குழு ஏற்றாலும் பின்னர் படப்பிடிப்புக்கு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு, நகை மற்றும் ஆடைகளுக்கான செலவு, உணவுக்கான செலவு என அனைத்தையும் தனது சொந்த செலவில் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மனதளவில் வேதனையும் அளவில்லாத கோபமும் ஆத்திரமும் கொண்டார் ஜெயா.

தனது வேண்டுகோளுக்கிணங்க நடிக்கச் சென்ற மகளின் ஆத்திரம் நியாயமானது என எண்ணிய சந்தியா, ஜெயாவை சமாதானப்படுத்தினார். படப்பிடிப்பை பாதியிலே நிறுத்த முடியாததால் முழுதையும் நடித்துக் கொடுத்துவிட்டு, சிறிது நாட்கள் ஓய்வெடுத்து, பின் மீண்டும் கல்வியை தொடருமாறு தாய் ஆறுதலாக பேசியதால் அந்தத் திரைப்படத்தில் நடித்து முடித்தார். அப்படி கோபம், கவலை, சங்கடங்களுக்கு மத்தியில் ஜெ நடித்து வெளியான ஆங்கில திரைப்படம் தான் த எபிஸில் ‘the epistle’ (லிகிதம்).

ஆங்கில திரைப்படத்தில் நடித்த அனுபவம் ஜெயாவுக்கு அவ்வளவாக திருப்தியளிக்காததால் சில நாட்கள் நடிப்பு, படப்பிடிப்பு என்ற பேச்சையே யாரும் எடுக்கவில்லை. என்னதான் சினிமாவை இவர் விட்டாலும் இவரை சினிமா விடாது காலத்தால் தொடர்ந்தே வந்தது.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *