Articles

மக்களால் நான் மக்களுக்காகவே நான் 6: கன்னட காவியத்தின் கதாநாயகி!

By  | 

சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி ஓடும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் வருகின்ற வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று தட்டிக் கழித்து, பின்னர் பிறரின் வேண்டுகோளின் படி ஒப்புக் கொண்டு நடித்து வந்தவர் ஜெயா.

கன்னட நடிகர் கிஷோர் குமார் நடித்த மேன் மனுஷி என்ற கன்னட திரைப்படத்தில் ஜெயா குமாரி ஜெயலலிதாவாக நடித்திருந்தார். எனினும் அவரது பெயர் தலைப்பில் இடப்படவில்லை. அந்தப் படம் 1961ஆம் ஆண்டில் வெளியானது.

1962ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மன்மொளஜ் என்ற திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் ஜெ நடித்திருந்தார். அதன் பின்னர் 1963ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழிப் படங்களான ‘கான்ஸ்டபிள் கூத்ரு’, ‘மஞ்சி ரோஜீலு ஒஸ்தாயி’ ஆகியவற்றிலும் கௌரவ வேடம் கிடைத்தது.

அக்காலப்பகுதியில் ஜெயாவின் தாய் சந்தியா வேதாந்தம் ராகவைய்யா என்ற இயக்குநரின் ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னட திரைப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படத்தில் சந்தியாவுக்கு மாமியார் வேடம் கிடைத்தது. படத்தின் கதாநாயகன் பழம்பெரும் நடிகர் கல்யாண்குமார். அந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரமான ஒரு பால்ய விதவை. அதில் நடிக்க தகுந்த முகப் பொலிவுள்ள நடிகை அதுவரை கிடைக்கவில்லை. அதனால் கவர்ச்சிகரமான ஓர் இளம் நடிகையை தயாரிப்பாளர்கள் தேடி வந்தனர். இறுதியில் நடிகை கிடைக்காததால் கதாநாயகி தோன்றும் காட்சிகளை தவிர்த்து ஏனைய காட்சிகளை படக்குழுவினர் படப்பிடிப்பு செய்தனர்.

அத்தருணத்தில் ஒரு நாள் கால்ஷீட் வாங்குவதற்காக சந்தியாவை தேடி அவரது வீட்டுக்கு தயாரிப்பாளர்கள் சிலர் சென்றனர். அங்கு ஜெயாவை சந்தித்த தயாரிப்பாளர்கள் “நாங்கள் தேடிய கதாநாயகி இதோ இங்குதான் உள்ளார்” என்று திருப்திபட்டுக் கொண்டனர். “இந்தப் படத்திற்கு கதாநாயகியாக ஜெயாவை ஒப்பந்தம் செய்துகொள்ளலாமா?” என சந்தியாவிடம் கேட்க அவர் மறுத்துவிட்டார்.

அப்படியே 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் அதே தயாரிப்பாளர்கள் சந்தியாவிடம் வந்து ஜெயாவை அனுப்புமாறு கேட்டுள்ளனர். அதே படத்தில் தானும் நடித்திருப்பதால் தயாரிப்பாளர்களை ஒரேயடியாக மறுத்துப் பேசவும் சந்தியாவுக்கு மனம் வரவில்லை. நீண்ட நேரம் கழித்து சிந்தித்து முடிவெடுத்தார். “அம்முவின் படிப்பு கெடக் கூடாது. அவளுக்கு கோடை விடுமுறை வரும் வரை காத்திருப்பீர்களா?” என்று வெறும் வாய் வார்த்தையாக சந்தியா கேட்க “சரி… காத்திருக்கிறோம்” என்று வந்தவர்கள் கூறிச் சென்றனர்.

தற்சமயம் அவர்களை ஏதோ சொல்லி சமாளித்து அனுப்பிவிட்டதாக சந்தியா எண்ணினார். 3 மாதங்கள் கடந்த பின்னர் ஜெயாவுக்கு பாடசாலை விடுமுறை வந்தது. மீண்டும் அதே தயாரிப்பாளர்கள் சந்தியாவை நாடினர். “விடுமுறையில் மகளை நடிக்க வைக்க அனுப்புவதாக கூறினீர்களே… இந்த முறை மாத்திரம் அனுப்புங்கள்…” என்றனர்.

ஏற்கெனவே இரண்டு முறை தன்னை நாடி வந்தவர்களை இனியும் சமாளிக்க முடியாமல் சந்தியா, ஜெயாவிடமே நேரடியாக விருப்பத்தை கேட்டார்.

அதற்கு “நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று ஜெ கூறிவிட்டார். விடுமுறை நாட்கள் தானே என சந்தியாவும் படப்பிடிப்புக்கு மகளை அனுப்பினார்.

நன்ன கர்த்தவ்யா திரைப்படத்தில் ஜெயா இளம் விதவை கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்தார். படப்பிடிப்பு வேலைகளும் முடிவு பெற்றன. அந்தத் திரைப்படம் சற்று கால தாமதமாகி 1965ஆம் ஆண்டே வெளிவந்தது என்பது வேறு விடயம்.

**

நடிப்புக்கு மத்தியில் ஜெ படிப்பிலும் இடைவிடாது கவனம் செலுத்தி வந்தார். பாடசாலையில் கற்கும் காலத்தில் ஏராளமான ஆங்கில கதைகளையும் நாவல்களையும் வாசித்து வந்தார். இதுவே அவருக்குள் எழுத்தார்வத்தையும் தூண்டியது.

கிரிக்கெட் விளையாட்டு என்றால் அவ்வளவு விருப்பம் ஜெயாவுக்கு. இந்தியாவின் பழைய துடுப்பாட்டக்காரரான நாரி கன்ரக்டர் தான் இவரின் விருப்பத்துக்குரிய கிரிக்கெட் வீரர். இவரை பார்ப்பதற்காகவே கிரிக்கெட்டை நேரில் காண ஜெயா பல தடவைகள் சென்றிருக்கிறார்.

**

ஒரு நாள், ஜெயாவின் ஒரியன்டல் நடன ஆசிரியர் திரு. சோப்ராஜி ஜெயாவிடம் வந்து தனக்கு தெரிந்த தயாரிப்பாளர் ஒருவர் திரைப்படம் எடுத்து வருவதாகவும் அதில் நடனக் காட்சியொன்றில் மட்டும் பங்குபற்றுமாறும் ஜெயாவை கேட்டுக் கொண்டார்.

வழக்கம்போல இதற்கு சந்தியா மறுப்பை தெரிவித்தாலும் ஒரே ஒரு நடனக் காட்சி மட்டும்தானே என்று எண்ணி  குருவின் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் வகையில் சம்மதம் தெரிவித்தார் ஜெயா. அந்தப் படத்தின் பெயர் ‘லாரி டிரைவர்’. இதுவும் கால தாமதமாகியே வெளிவந்தது.

இதற்குப் பின்னரே ஜெயாவின் படிப்பு, நடிப்பு இரண்டிலும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டன.

 

தொடரும்…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *