Articles

மக்களால் நான் மக்களுக்காகவே நான் 7: சினிமாவில் பிரபலம் படிப்பில் முதலிடம்!

By  | 

ஜெயா முன்னதாகவே நடித்த ‘நன்ன கர்த்தவ்யா’ திரைப்படம் 1965இல் வெளிவந்தது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த இரண்டு கன்னட திரைப்படங்கள் 1964ஆம் ஆண்டிலேயே  வௌியிடப்பட்டுவிட்டன.

1964ஆம் ஆண்டு…

நன்ன கர்த்தவ்யா படப்பிடிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த, ‘கர்ணன்’ திரைப்படமும் வெளியானது. படத்தை  இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்துலு இயக்கினார்.

ஜெயாவின் சினிமா வாழ்க்கைப் பயணத்திற்கான புதிய பாதை அமைந்ததற்கும் கர்ணன் திரைப்படத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று சொல்வதிலும் நியாயமுண்டு.

கர்ணன் திரைப்படத்தில் சந்தியா, கனகனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திரைப்படம் வெளிவந்து, 100ஆவது நாள் விழா நிகழ்வு வூட் லேண்ட்ஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரபல நட்சத்திரங்கள் பலரும் ஒன்றுகூடிய அவ்விழாவுக்கு சந்தியாவும் ஜெயாவை அழைத்துச் சென்றிருந்தார். அப்போது ஜெயாவுக்கு வயது 15.

விழாவில் கலந்துகொண்ட சிவாஜி கணேசன் ஜெயாவை பார்த்து “என்றேனும் நீ மிகப் பெரிய நட்சத்திரமாய் கொடி கட்டிப் பறப்பாய் அம்மு…” என்று வாழ்த்தினார்.

அன்றைய நாளே மற்றுமொரு சினிமா வாய்ப்பு ஜெயாவுக்கு கிட்டியது. விழாவில் கலந்து கொண்ட பி.ஆர்.பந்துலு ஜெயாவை கண்டவுடன் தனது அடுத்த திரைப்படத்தில் அவரையே கதாநாயகியாக நடிக்க வைக்க விரும்பினார்.

தன் படத்துக்கு ஜெயா நடிக்க அனுமதியளிக்குமாறு பந்துலு கேட்க, சந்தியா “ஜெயாவின் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே படப்பிடிப்பை வைத்துக் கொள்வதானால் சம்மதிக்கிறேன்” என்றார். உடனே பந்துலு, இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை முடிப்பதாக சந்தியாவுக்கு வாக்குறுதி அளித்தார். தாயின் சம்மதத்தை பெற்ற பின்னர் அந்த வாய்ப்பையும் ஜெயா புறந்தள்ள விரும்பவில்லை. படத்தில் நடிக்க ஜெ ஒப்பந்தம் ஆனார்.

சந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை முடித்துத் தருவதாக கூறிய பந்துலு, ஆறே வாரங்களில் வேலையை முடித்தார். ஜெயாவுக்கு 3000 ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டது.

படத்தின் பெயர் ‘சின்னடா கொம்பே’. கல்யாண் குமார் தான் அதிலும் கதாநாயகன். படத்தின் இயக்குநர் பந்துலுவும் படத்தின் பல காட்சிகளில் தலை காட்டியிருந்தார்.

அதே ஆண்டில் தமிழில் வெளியான சிவாஜி கணேசன், தேவிகா இணைந்து நடித்த ‘முரடன் முத்து’ திரைப்படமே கன்னட மொழியில் ‘சின்னடா கொம்பே’ என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது. அதைப் போலவே ஹிந்தியில் ‘கோபி’ என்றும் தெலுங்கில் ‘பல்லிடூரி சின்னோடு’ என்றும் மறுதயாரிப்பானது. இந்த நான்கு மொழித் திரைப்படங்களில் தமிழ், கன்னட மொழிகளில் மாத்திரமே பந்துலு இயக்கி நடித்திருந்தார் என்பது மேலதிக தகவல்.

அதனைத் தொடர்ந்து எஸ்.கே.ஏ. சாரி இயக்கிய ‘மனே அலியா’ என்ற மற்றுமொரு கன்னட திரைப்படத்திலும் ஜெ நடித்தார். அந்தப் படமும் 1964ஆம் ஆண்டில் தான் வெளிவந்தது. அதிலும் கல்யாண் குமார், ஜெயலலிதா ஆகியோரே இணைந்து நடித்திருந்தார்கள்.

அடுத்து அதே ஆண்டில் வெளியான ‘அமரசில்பி ஜகன்னாச்சாரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “மல்லிகேய ஹூவினந்த…” என்ற ஒரு பாடலுக்கு மட்டும் ஜெயா நடனமாடியிருந்தார்.

***

சினிமா வாய்ப்புகள் அதிகரித்திருந்த அத்தருணம் கல்வியிலும் பாரியதொரு வெற்றியை ஜெயா சந்தித்தார். மெட்ரிகுலேஷன் பள்ளியில், பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதலாம் இடத்தைப் பெற்றார். அதிக மதிப்பெண்கள் பெற்று சித்தியடைந்ததால் சிறப்பு ஸ்கொலர்ஷிப் தகைமையை பெற்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அனுமதி பெற்றார்.

தன் தந்தை ஜெயராமை போல் தானும் ஒரு வழக்கறிஞர் (ஆனால் ஜெயராம் நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்ததில்லை… வெறும் பட்டதாரி மட்டுமே) ஆக வேண்டும் என்ற இலட்சியத்தை அடையும் எண்ணத்துடன் ஜெ கல்லூரி வகுப்புக்கும் செல்ல ஆரம்பித்தார்.

இரண்டு நாட்கள் மட்டுமே கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். அதே சமயம் கன்னட சினிமா ரசிகர்களின் மத்தியில் ஜெயா மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்ததால் கல்லூரி படிப்பிலும் பல தடைகள் ஏற்பட ஆரம்பித்தது.

தொடரும்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *