Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 12: எம்.ஜி.ஆருடன் முதல் காதல் டூயட் படம்!

By  | 

“காட்சியை

படமாக்கும்போது

எனக்கு

குளிர் காய்ச்சலே

வந்துவிட்டது போல்

உடல் நடுங்க

ஆரம்பித்துவிட்டது…”

வெற்றி… வெற்றி… என்ற எம்.ஜி.ஆரின் வசனத்துடன் ஆரம்பமாகும் முதல் காட்சி, ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றியை அப்போதே நிர்ணயித்துவிட்டது.

படத்தில் பீ.சுசீலா பின்னணிக் குரலில், ஜெயா ஆடி நடிப்பதாக படமாக்கப்பட்ட முதல் பாடல்…

“பருவம் எனது பாடல்

பார்வை எனது ஆடல்

கருணை எனது கோயில்

கலைகள் எனது காதல்”.

இந்த வரிகள் படத்துக்காக மட்டுமே எழுதப்பட்டதாக அமையாமல் பிற்காலத்தில் இவருக்கான அடைமொழிப் பாடலாகவும் ஆனது.

வெண்ணிற ஆடையில் தோன்றிய ஜெயா மீது அனுதாபம் காட்டிய ரசிகர்கள், ஆயிரத்தில் ஒருவனில் துள்ளலும் துடிப்பும் மிக்க அழகிய இளவரசியாய் ஜெயாவை கண்டு நெகிழ்ந்தனர்.

ஜெயாவை திரையில் கண்டவர்கள் பயமோ பதற்றமோ இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் அவரிடம் எங்கும் தென்படவில்லையே என வியந்துள்ளனர்.

ஆனால் திரைக்குப் பின்னால் படப்பிடிப்பு நிகழ்ந்த தருணத்தில் அவருக்குள்ளும் பயம் குடிகொண்டிருந்ததை அவர் கூறியிருக்காவிட்டால் நாமும் அறிந்திருக்க மாட்டோம்.

குறிப்பாக படத்தின் காதல் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட தருணம், ஜெயா பெற்ற அனுபவத்தை அவரே, தமிழ்சினிமா.கொம் தளத்துக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

“நாணமோ…… நான் நடித்த முதல் காதல் காட்சி. நான் பல திரைப்படங்களில் காதல் காட்சிகளை கண் கொட்டாமல் பார்த்திருக்கிறேன். ஆனால், நானே காதல் காட்சியில் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்த போதுதான், எனக்கு அதில் நடிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது தெரிய வந்தது. என்னையும் மீறிய ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அதுவும் என்னுடன் நாயகனாக நடிப்பவர் எம்.ஜி.ஆர் என்பதை எண்ணியபோது எனது நடுக்கம் அதிகமானதே தவிர குறையவில்லை. ஒரு காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக ஒத்திகை பார்ப்பது வழக்கம். அதுவும் காதல் டூயட்டாக இருந்தால் நடன இயக்குனரும், அவரது உதவியாளரும், பாட்டுக்கேற்ப நடனமாடிக் காட்டுவார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நடன இயக்குனராகப் பணியாற்றியவர் தங்கப்பன். அவரது குழுவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணும், வாலிபரும் நாணமோ என்ற பாட்டுக்குரிய பாவனைகளை ஆடிக் காட்டினார்கள்.

ஆணும் பெண்ணுமாக அவர்கள் நெருக்கமாக நடித்துக் காட்டியபோது எனக்கு அது புதுமையாக இருந்தது. அவர்கள் செய்தபடி இப்போது நானும் எம்.ஜி.ஆரும் நடிக்க வேண்டும். ஏதோ இனம் தெரியாத உணர்வு என்னைப் பற்றிக் கொண்டது.

காட்சி படமாக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கெமரா முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன். கதாநாயகனை நான் அன்பு தோயப் பார்க்க வேண்டும். கெமரா இயங்க ஆரம்பித்திருந்தது. கதாநாயகனான எம்.ஜி.ஆர் என்னை நெருங்கி வருகிறார். ஒன்றுமே ஓடவில்லை. திணறிப் போய்விட்டேன்.

எனது தவிப்பை தயாரிப்பாளரும் இயக்குனருமான பந்துலு சார் கண்டு கொண்டார் போலும். என்னை கூப்பிட்டு, ‘என்னம்மா குழந்தை… நீ எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டாம். கெமராவைப் பார்த்தே நடிக்கலாம்’ என்று சொன்னதும் எனக்கு தைரியம் வந்துவிட்டது.

அந்த யோசனை எனக்கு கைக் கொடுத்தது. மீண்டும் எம்.ஜி.ஆருடன் அந்தக் காதல் கட்டத்தில் நடித்தபோது இயக்குனர் சொல்லிக் கொடுத்தபடி அன்றைய என் முதல் காதல் காட்சியில் நடித்து முடித்தேன்.

அடுத்த காட்சியை படமாக்க செட்டில் ஆட்கள் பம்பரமாக சுழன்றனர். எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டே நெருங்கி உட்கார்ந்தார். இந்தக் காட்சியை படமாக்கும்போது எனக்கு குளிர் காய்ச்சலே வந்துவிட்டது போல் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அதை கண்டுபிடித்துவிட்ட ‘எம்.ஜி.ஆர். ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? சோர்வாகவும் காணப்படறீங்க?’ என்று என்னை பார்த்துக் கேட்டார். ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்று ஏதோ சொல்லி சமாளித்தேன். வாய் பேசியதே தவிர என் உடல் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.”

காதல் காட்சிகளில் நடித்து முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஜெயாவுக்கு அன்றைய நாள் வழமைக்கு மாறாக இருப்பதைப் போல் தோன்றியது. எல்லோரும் தன்னை சந்தேகக் கண்ணோட்டத்தில் அவதானிப்பதை போன்ற உணர்வும் ஏற்பட்டது.

படப்பிடிப்பின் போது ஜெயாவின் பயத்தை போக்கி நம்பிக்கை வார்த்தைகள் கூறி நடிக்க கற்றுக் கொடுத்ததில் எம்.ஜி.ஆர். தான் வாத்தியார்.

அவர் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு மரியாதை கொடுத்து சமமாக பழகக்கூடியவர். தன்னைப் பற்றியும் தன் கதாபாத்திரத்தை பற்றியும் ஒருபோதும் சிந்திக்கவே மாட்டார்.  எப்போதும் பிறருடன் கலகலப்பாக பேசும் அவருடைய பேச்சில் நகைச்சுவை கலந்திருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜெயாவும் ஆர்வத்தில் லொடலொடவென எதையாவது பேசிவிடுவார். இதனால் ஜெயாவை வாயாடி என்றே அடிக்கடி எம்.ஜி.ஆர் அழைப்பார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ இன்னும் ஆயிரமாயிரம் நினைவுகளை சுமந்துள்ளது.

 

 

(தொடரும்…)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *