Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 13: கட்டுமரப் பயணம்

By  | 

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பெரும்பகுதி கோவாவில் உள்ள கார்வார் என்னும் இடத்திலும் அதற்கு அருகில் உள்ள கடற்பகுதிகளிலும் எடுக்கப்பட்டது.

அங்கிருந்த சில விடுதிகளில் படக்குழுவினர் குழுக்களாக தங்கியிருந்தனர். கார்வார் கடலுக்கு நடுவிலுள்ள சிறிய தீவொன்றில் காட்சிகள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படக்குழுவினர் முதலில் அங்குள்ள படகுத்துறைக்கு சென்று, பின் அங்கிருந்து படகின் மூலம் 25 கி.மீ. தொலைவிலுள்ள தீவுக்கு செல்ல வேண்டும்.

அன்றொரு நாள் படகுத்துறையில் அனைத்து படக்குழுவினரும் வந்து சேர்ந்தனர், ஜெயாவை தவிர. அவர்களை தீவுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு தயாரிப்பு நிர்வாகியினுடையது.

படத்தின் சில முக்கிய காட்சிகளில் ஜெயாவுக்கு டூப்பாக (படத்தில்  நடிகர் ஒருவர், குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்க முடியாத சந்தர்ப்பத்தில், அவரது கேரக்டரில் அவரைப் போல் உடையணிந்து சில முக்கிய காட்சிகளில் நடிப்பவரை ‘டூப்’ நடிகர் என்பர்.) நடிக்கும் பெண், ஜெயாவை போல் உடை அணிந்திருந்ததால் தயாரிப்பு நிர்வாகி சுப்ரமணியம் அந்தப் பெண்தான் ஜெயா என நினைத்துக் கொண்டு அனைவரும் வந்துவிட்டதால் தீவுக்குச் செல்ல படகை இயக்கும்படி தெரிவித்துவிட்டு கரையில் நின்றார்.

படகு பாதி தூரம் சென்ற பின்னரே தாமதமாக ஜெயா படகுத்துறையை வந்தடைந்தார். அவரை பார்த்த சுப்ரமணியத்துக்கு படகில் சென்ற பெண் ஜெயா அல்ல என்பது அப்போதுதான் புரிந்தது.

தன்னுடன் பணி புரிந்த எல்லோரும் தன்னை விட்டுவிட்டு சென்றுவிட்டதை நினைத்த ஜெயா அந்த இடத்திலேயே அழ ஆரம்பித்துவிட்டார்.

ஜெயாவை தீவுக்கு அனுப்பி வைக்க வேறேதும் படகு கிடைக்குமா என தயாரிப்பு நிர்வாகி தேடிப் பார்த்தார். ஆனால் அந்த நேரத்தில் எந்தப் படகும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

அப்போது அவ்விடத்துக்கு வந்த, அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் ஆலோசனை கேட்டனர். “இங்கிருந்து வீதி வழியாக 15 கி.மீ. தூரம் போனால் மீன் பிடிப்பவர்கள் அந்தத் தீவுப் பக்கம் குறுக்கு வழியாகச் செல்லும் இடம் வரும். அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில்தான் தீவு இருக்கிறது. கட்டுமரத்தில் சீக்கிரமாக தீவுக்குப் போய்விடலாம்” என அவர் யோசனை சொன்னார்.

சுப்ரமணியமும் ஜெயாவும் அந்த நபர் சொன்னதைப் போல் குறுக்கு வழியாக சென்று கட்டுமரத்தில் தீவை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

கடலில் கட்டுமரப் பயணம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. அலையடித்து ஆர்ப்பறிக்கும் கடலில் ஆர்ப்பாட்டமாய் தாவிக் குவித்துச் செல்லும் சிறிய கட்டுமரத்தில் நிலையாய் தன் பிடியை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு செல்வதற்கே துணிவும் தன்னம்பிக்கையும் வேண்டும். அந்த இரண்டும் ஜெயாவிடம் இருந்ததால் கட்டுமரப் பயணத்தை அந்த இள வயதில் ஜெயா மேற்கொண்டார்.

மோட்டார் படகில் ஏற்கெனவே சென்றவர்கள் தீவை நெருங்கும் வேளை, கரையை அண்டிய ஓரிடத்தில் இடையே மோட்டார் படகை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தீவுக்கரைக்குச் செல்ல சிறிய துடுப்புப் படகை எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போது ஜெயா கட்டுமரத்தில் தம்மை கடந்து தீவை நோக்கி சென்று கொண்டிருப்பதை கண்டனர்.

அதன் பின் படக்குழுவினர் தீவில் ஜெயாவுடன் இணைந்து கொண்டனர். ஜெயா எப்படி இங்கு வந்தார் என ஆச்சரியமாக அனைவரும் பார்த்தனர்.

அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “எப்படி நீ எங்களுக்கு முன் இங்கு வந்தாய்?” என ஜெயாவிடம் கேட்டதற்கு பதிலேதும் கூறாமல், தான் அணிந்து வந்த ஆடை அலைநீரில் முற்றாக நனைந்திருந்ததாலும் தேக்கி வைத்திருந்த பயத்தினாலும் மீண்டும் அழுதுவிட்டார்.

அதன் பிறகு நடந்ததை ஜெயா விளக்கமாக கூறியதும், எம்.ஜி.ஆர் கவனக்குறைவாக நடந்து கொண்ட தயாரிப்பு நிர்வாகியின் தலையில் குட்டு விட்டாராம்.

அன்று ஜெயாவின் துணிச்சலை எம்.ஜி.ஆர் உட்பட அனைவரும் பாராட்டினர்.1965ஆம் ஆண்டு ஜீலை மாதம் 9ஆம் திகதி ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்தது,

திரையரங்கில் தன் படத்தை தானே அமர்ந்து பார்த்த போது படப்பிடிப்பின் போது தான் அடைந்த சுக, துக்கங்கள் எதுவும் கொஞ்சமும் தெரியாமல் சிறப்பாய் அமைந்திருந்ததால் அன்று இரவு நிம்மதியாக உறங்கினாராம் ஜெயா.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டு வரலாறு கண்ட இப்படம், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு அத்திவாரமாய் அமைந்தது.

இப்படம் 2014ஆம் ஆண்டு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் புத்துருவாக்கம் பெற்று தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டு மீண்டும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

(தொடரும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *