Antharangam

அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் ராமர்களே

By  | 

கேள்வி

என் வயது 36.என் கணவரின் வயது 40; தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன; குழந்தை இல்லை. எங்களு­டன் மாமியார் உள்ளார். குழந்தையில்லாத விரக்தியில் எங்கள் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.

இரவில் நேரம் கழித்து தான் வருவார். வந்ததும் சாப்பிட்டு தூங்கி விடுவார். காலையிலும் குளித்து, சாப்பிட்டு, சீக்கிரமாக வேலைக்கு சென்று விடுவார். விடுமுறை நாட்களிலும் தூங்குவது, டிவி பார்ப்பது, நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது மற்றும் மொபைலில் ‘ஃபேஸ்புக், வட்ஸ் அப்’ என்று நேரத்தை செலவழிப்பார். என்னுடன் பேசுவது குறைந்து விட்டது; அவசியமானதுக்கு மட்டும் பேசுவார்.

இந்நிலையில், கணவரது உறவுக்­கார பெண் எங்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்; அவளுக்கு வயது 33; திருமணமாகி கணவனை பிரிந்தவள்.

அப்பெண் வந்ததிலிருந்து இவரின் நடவடிக்கையில் நிறைய மாற்றத்தைக் காண்கிறேன். வீட்டில் நிறைய நேரம் தங்குகிறார்; அவருக்கு வேண்டியதை வலிய சென்று செய்து கொடுக்கிறாள் அப்பெண்.

என்னுடன் சகஜமாகப் பேசுவது போல் நடித்தாலும் உள்ளூர என்னை அவரிடமிருந்து பிரிக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கிறாள்.
விளைவு அவள் எதிரிலேயே என்னை திட்டுவது, மட்டம் தட்டி அவமானப்படுத்துவது என்று தினமும் பாடாய்ப்படுத்துகிறார். இதற்கு என் மாமியாரும் துணை.

நிலைமை மோசமானதை அறிந்து அப்பெண்ணை அவளது கணவருடன் சேர்த்து வைக்க நான் எடுத்த முயற்சிகள் எப்படியோ என் கணவருக்குத் தெரிந்து என்னை கேவலமாகத் திட்டி அப்பெண் எதிரிலேயே என்னை அடித்தார்.

அதனால் என் அண்ணன் வீட்டில் அடைக்கலமானேன். எவ்வளவு நாள் இங்கிருக்க முடியும் என்று தெரியவில்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

பதில் 
திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு ஏதாவது ஒரு நொண்டிச் சாக்கு தேவைப்படுகிறது. குழந்தையின்மையை சாக்காக வைக்கிறார் உன் கணவர். வாய்ப்பு கிடைக்காத வரை எல்லா ஆண்களும் ராமர்களே!

கன்னிப் பெண்களை விட கணவனைப் பிரிந்த பெண்கள் ஆபத்தானவர்கள்; பற்றி படர ஏதேனும் கொழுகொம்பு தேடுவர். அந்தப் பெண்ணைக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் விட்ட புத்திசாலி யார்?
குழந்தையின்மைக்கு என்ன காரணம் என்பதை அறிய நீயும் உன் கணவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டீர்களா…

தஞ்சமடைந்த பெண்ணை அவள் கணவனுடன் சேர்த்து வைக்க முயன்றது புத்திசாலித்தனமான முடிவு. பெரும்பாலும் கணவனை விட்டுப் பிரிந்த பெண்கள், வாய்ப்பு கிடைத்தால் சமரசம் செய்து மீண்டும் கணவனுடன் வாழவே முயற்சிப்பர். உன் முயற்சி அந்தப் பெண்ணுக்கும் உன் கணவருக்கும் பிடிக்கவில்லை. நியாயமில்லாத காரணங்களுக்காக தான் அந்தப் பெண் கணவனை பிரிந்து வாழ்கிறாள் என நினைக்கிறேன்.
ஒரு குருவிக் கூட்டை கலைக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவளிடம் சிறிதும் இல்லை. அவளுக்கு கையாளாய் உன் மாமியார் இருக்கிறார் என்பது ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை. உறவுக்காரி, பேராசை பிடித்தவளாய் இருந்தாலோ, தாம்பத்யத்தில் எக்கச்சக்கமாய் எதிர்பார்த்தாலோ, உன் கணவரை விட்டு வேறொருவரிடம் தாவிவிடுவாள். இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா…

மேற்கொண்டு படித்து, வேலைக்கு போ; உன் மாமியாரிடம் மனம் விட்டுப் பேசு, ‘எனக்கு நீங்கள் இன்னொரு அம்மாவைப் போன்றவர்; தவறு செய்யும் உங்கள் மகனை கண்டியுங்கள். தஞ்சமடைந்த பெண்ணை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்புங்கள்…’ எனக் கூறு; சாட்சிக்காரி காலில் விழுவதை விட சண்டைக்காரி காலில் விழுவதே மேல்.
உன் கண­வருக்கு கடிதம் எழுது. அதில், ‘நான் உங்களை மிகவும் நேசிக்கி­றேன்; நம் குழந்தை­யின்மைக்கு நீங்களே கூட காரணமாய் இருக்கலாம். அதை சாக்காய் வைத்து திருமண பந்தம் மீறிய உறவில் நான் ஈடுபட்டால் சகித்துக் கொள்வீர்களா… தற்போதைய சபலம் உங்களுக்கு எவ்வித நிரந்தர மகிழ்ச்சியையும் கொடுத்துவிடாது. ஆப்பை அசைத்து வால் மாட்டிக்கொண்ட குரங்கின் கதை ஆகிவிடும் உங்கள் நிலை. மருத்துவத்துக்குப் பின் நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றால் குழந்தை ஒன்றை சட்ட ரீதியாய் தத்தெடுப்போம். தெளிவான மனதுடன் மனசாட்சிப்படி முடிவெடுங்கள்…’ என எழுது.

அத்துடன், இரு தரப்பு பெரியவர்களை வைத்து பேசி, அந்தப் பெண்ணை துரத்தவும் நீயும் உன் கணவரும் சேர்ந்து வாழவும் வழிவகை செய். உறவுக்காரப் பெண்ணின் கணவரை விட்டு, மனைவியை மீட்டுத்தர சொல்லி பொலிஸில் புகார் கொடுக்கச் சொல்.

உன் பங்குக்கு காவல் நிலையத்தில் உன் கணவர் மீதும் அப்பெண் மீதும் புகார் கொடு. பொலிஸாரின் எச்சரிக்கைக்கு உன் கணவர் பணிகிறாரா என்று பார்ப்போம்… பொலிஸ் புகார் பலனளிக்கவில்லை என்றால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு போடு. அங்கு முதலில் ‘கவுன்சிலிங்’ கொடுப்பர்; அதில் உன் கணவர் திருந்துகிறாரா எனப் பார்.
அதிலும் உன் கணவர் ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்துக்கு முயற்சி செய். விவாகரத்து கிடைத்த பின் மறுமணம் செய்து கொள்வதை பற்றி யோசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *