Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 14: கன்னித்தாயில் கனவுக்கன்னி

By  | 

தமிழ் சினிமா வரலாற்றில் தனி முத்திரை பதித்த ‘தேவர் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை யாராலும் மறக்க முடியாது. சாண்டோ சின்னப்பா தேவர் என அறியப்படும் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட.

எம்.ஜி.ஆரை பல படங்களில் நடிக்க வைத்து அதிக பணம் சம்பாதித்த தேவர், ‘தண்டாயுதபாணி பிலிம்ஸ்’ நிறுவனத்தையும் ஆரம்பித்தார். முருகக் கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்திப் படங்களை  தயாரித்து ஆன்மீகவாதியான தேவர், சிங்கம் முதல் சிட்டுக்குருவி வரை ஆறறிவில் குறைந்த உயிரினங்களைகூட நடிக்க வைத்து பிரபலமடைந்தார்.

“எனக்கு முதல் கடவுள் முருகன் என்றால்; இரண்டாவது கடவுள் எம்.ஜி.ஆர்தான். அவரால்தான் இந்த தண்டாயுதபாணி நிறுவனம் உருவாகியது” என்று கூறுமளவுக்கு எம்.ஜி.ஆர் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டவர் தேவர்.

அவரது தயாரிப்பில் வௌியான பல திரைப்படங்களில் அதுவரை பானுமதி, சரோஜாதேவி, சாவித்ரி போன்ற முன்னணி நடிகைகள் நடித்து வந்தனர். ஒரு மாறுதலுக்காக புதிய இளம் நடிகை ஒருவரை தேவர் பிலிம்ஸுக்கு அறிமுகப்படுத்தி எம்.ஜி.ஆருக்கு கதாநாயகியாக்க நினைத்தார் தேவர்.

ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக ‘நாணமோ இன்னும் நாணமோ…’ என்ற பாடல் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரம்…

பாடல் காட்சிக்காக அறை முழுதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாய் காட்சியளித்தது. அறையில் இயக்குநர் பந்துலு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க, பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது தேவரும் உள்நுழைந்தார்.

சாதாரணமாக எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மற்ற தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புத் தளத்துக்கு வருவதை அனுமதிப்பதில்லை. ஆனால் தேவர் உட்பிரவேசித்தபோது மட்டும் எம்.ஜி.ஆர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

பாடல் காட்சியில் நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆருடன் காதல் காட்சியில் நடிக்க கதாநாயகி ஜெயலலிதா தயக்கம் காட்டினார். அவர் முகத்தில் இயக்குநர் எதிர்பார்த்த காதல் உணர்ச்சி வெளிப்படவில்லை. அதனால் பந்துலுவும் எம்.ஜி.ஆரும் மாறி மாறி ஜெயாவுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஜெயாவை பார்த்து “என்னம்மா இது… தைரியமா நடிக்கணும்மா… எம்.ஜி.ஆரை துரத்தி துரத்தி காதலிக்கிற மாதிரி சரோஜா தேவி நடிப்பாங்களே… அதைப் போல நடிக்கணும்…” என்று சொல்லி சிரித்த தேவருக்கு மனதில் ஒரு விடயம் சட்டென்று பட்டது.

“இனி மேல் நம் படங்களில் எம்.ஜி.ஆருக்கு கதாநாயகியாக வேறெவரையும் எங்கும் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு எப்படியோ அப்படியொரு கதாநாயகி கிடைத்துவிட்டார். இவரையே நம் படங்களுக்கும் ஒப்பந்தம் செய்துவிடலாம்” என எண்ணினார்.

பல்திறமை கொண்ட இந்த நடிகையை இழந்துவிடக்கூடாது என்பதற்காக மற்றவர்கள் முந்திக் கொள்வதற்கு முன் தானே ஜெயாவை ஒப்பந்தம் செய்தார். அந்தப் படத்தின் பெயர் கன்னித்தாய்.

ஆயிரத்தில் ஒருவன் வெளியான 1965ஆம் ஆண்டிலேயே செப்டெம்பர் 10ஆம் திகதி கன்னித்தாய் திரைப்படம் வெளியானது.

தேவர் பிலிம்ஸ், எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரின் தயாரிப்பில் எம்.ஏ. திருமுகத்தின் இயக்கத்தில், கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவானது.

கன்னித்தாயில் சரசா என்ற பாத்திரமேற்று கச்சிதமாக நடித்திருந்தார் ஜெயா. மிக இளமையான கதாநாயகியாகவும் கனவுக்கன்னியாகவும் எல்லோராலும் பார்க்கப்பட்டார்.

எம்.ஜி.ஆருடன் இவர் ஜோடி சேர்ந்த இரண்டாவது படம் என்றும் தமிழில் ஜெயா நடித்த முதல் கறுப்பு வௌ்ளை திரைப்படம் என்றும் சொல்லலாம்.

படத்தில் எம்.என்.நம்பியார், எஸ்.ஏ. அசோகன், நாகேஷ், வி.கே. ராமசாமி, கே.ஆர்.விஜயா, மனோரமா, பேபி சகிலா ஆகியோருடன் தேவரும் இணைந்து நடித்திருந்தார்.

இந்தப் படத்துக்காக மொத்தம் ஆறு பாடல்கள் உருவாகின. இந்தப் படத்தில் ஆச்சி மனோரமா பாடிய ‘வாழவிடு இல்லே வழிய விடு…’ என்ற ஒரு பாடலும் உண்டு.

அதைத் தவிர ‘என்றும் பதினாறு வயது பதினாறு…’, ‘அம்மாடி துக்கமாக ஆமாமா கேட்கணுமா…’, ‘கேளம்மா சின்னப்பொன்னு…’, ‘மானா பொறந்தா…’, ‘வாயாற முத்தம்…’ ஆகிய பாடல்களும் இனிமை சேர்க்கின்றன.

தேவர் பிலிம்ஸ் வரலாற்றிலேயே எண்ணி 18 நாட்களில் தயாரித்து முடிக்கப்பட்ட ஒரே படம் கன்னித்தாய்தான் என்பதை இன்றளவும் சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் எண்ணி ஆச்சரியப்படுகின்றனர்.

இந்தப் படம் வெளியாகும் போதே ‘ஆறு வாரங்கள் மட்டும்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அரங்கத்தில் முதல் வாரத்திலேயே அப்போதைய ஆண்டளவில் இந்திய பண மதிப்பில் ரூ. 48,760 வசூலிக்கப்பட்டது மட்டுமல்லாமல் 60 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.

தேவரின் தயாரிப்பில் ஜெயா நடித்த முதல் படம் கன்னித்தாய் அதிர்ஷ்டவசமாய் வெற்றி கண்டதால் அடுத்தடுத்து தனது படங்களில் சின்னப்பா தேவர் ஜெயாவை கதாநாயகியாக இணைத்தார்.

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *