Astrology

குருப்பெயர்ச்சி 2018-2019: எந்த ராசிகாரர்களுக்கு திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்

By  | 

நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி வரும் 4 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 11ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த ஆண்டு வியாழக்கிழமை குருப்பெயர்ச்சி நிகழ உள்ளது சிறப்பான அம்சமாகும்.

இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளை செய்வார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம்,மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் காலமாகும்.

‘குருபார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரத் தொடங்கும். இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும் என்பதால் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. .

மேஷம்

வீர தீரம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைந்து 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். அஷ்டமத்தில் குரு அவ்வளவாக நல்லதில்லை என்றாலும் குருவின் பார்வையினால் அதிகம் நன்மைகள் நடக்கும். ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானம், 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடங்களின் மீது விழுவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது. உணவு விசயத்தில் கவனமாக இருந்தால் வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம். .

ரிஷபம்

அழகும் அன்பும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே… கடந்த ஓராண்டு காலமாக குருபகவான் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் சஞ்சரித்த காரணத்தால் சிரமங்களுக்கு ஆளாகி இருப்பீர்கள். இந்த வாரம் முதல் குருபகவான் ராசிக்கு 7வது வீட்டில் அமர்வது சிறப்பான அம்சம். குருவின் பார்வை, ராசியின் மீதும், லாப ஸ்தானத்தின் மீதும் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும். இது காதல் மலரக் கூடிய ஒரு காலம் ஆகும். காதல் உறவுகள் வலுப்படும். அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் கூடி வரப்போகிறது. பொருளாதார உயர்வு இருக்கும், தீராத பிணிகளும் தீரும் காலம் வந்து விட்டது. .

மிதுனம்

அறிவாற்றல் நிறைந்த மிதுனம் ராசிக்காரர்களே… குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் இருந்து 6ஆம் இடத்திற்கு சஞ்சரிக்கிறார். ஆறாமிடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். குரு பகவான் 10ஆமிடமான தொழில் ஸ்தானம் 12 ஆம் இடமான விரைய ஸ்தானம், மற்றும் 2 ஆம் இடமான தன ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பணம் அதிகமாக வந்தாலும் கூட சுப விரைய செலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் தாமதப்படும். வியாழக்கிழமை மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் நடைபெறும். .

கடகம்

மனோதைரியம் கொண்ட கடக ராசிக்காரர்களே… 4ஆம் வீட்டில் இருந்த குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இது நன்மை தரும் அமைப்பாகும். குரு தனது 9ஆம் பார்வையால் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 9ஆம் இடம், 11வது இடத்தையும் பார்வையிடுகிறார். பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவது சிறப்பு. உங்களுக்கு குரு பார்வை வந்து விட்டது. திருமணம் கைகூடி வரும். கெட்டி மேளச்சத்தம் கேட்கும். காதல் மலரும் காலம் இது என்பதால் உற்சாகத்தில் விசிலடிக்கலாம். குரு பகவானால் மேலும் நன்மைகள் நடைபெற தென்திட்டை ராஜகுருவை வழிபடலாம். .

சிம்மம்

எடுத்த காரியத்தை மன தைரியத்தோடு முடிக்கும் சிம்மம் ராசிக்காரர்களே… .

உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இருந்த குருபகவான் இனி 4வது வீட்டில் அமரப்போகிறார். குருவின் பார்வை 8ஆம் இடம், 10ஆமிடம், 12வது இடங்களின் மீது விழுகிறது. காதல், திருமண விசயங்களில் அவசரப்பட வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும். யாருக்கும் கடன் வாங்கவோ,யாருக்கும் கடன் கொடுக்கவோ வேண்டாம். பாடியில் எழுந்தருளும் குருபகவானை வணங்க நல்லதே நடக்கும். .

கன்னி

அறிவாற்றல் கொண்ட கன்னி ராசிக்காரர்களே… .

உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர இருக்கிறார். வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருந்த குரு 3வது இடத்திற்கு செல்வதால் வார்த்தைகளில் கவனம் தேவை. குரு பகவான் ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு 11வது இடத்தை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சிலர் வீட்டில் கெட்டி மேளச்சத்தம் கேட்கும். வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரும் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மேலும் நன்மைகள் நடைபெற வாலாஜாபேட்டையில் எழுந்தருளியுள்ள மேதா தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும். .

துலாம்

காதல் உணர்வு அதிகம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே… ஜென்ம குருவாக இருந்து ஆதிக்கம் செலுத்தும் குருபகவான் இனி உங்கள் ராசிக்கு தன, வாக்கு ஸ்தானமாகிய இரண்டாவது வீட்டில் அமரப்போகிறார். குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6ஆம் வீடு, 8ஆம் வீடு 10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. கடன் நோய் பிரச்சினைகள் தீரும் காலம் வந்து விட்டது. செய்யும் வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு தற்போது பார்க்கும் வேலையை விட நல்ல வேலைகள் கிடைக்கும். கடந்த ஓராண்டு காலம் பட்ட துன்பங்கள் தீரப்போகிறது. மேலும் நன்மைகள் நடைபெற குருவித்துறை குருபகவானை வணங்குங்கள். .

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், இனி உங்கள் ராசியில் ஜென்ம குருவாக அமரப்போகிறார். உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு கல்யாணம் கை கூடி வரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், வேலை செய்பவர்களுக்கு பளு அதிகரிக்கும். சிலர் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். சிவ ஆலயத்தில் நவகிரக குரு பகவானை திங்கட்கிழமை சென்று வணங்கி வரலாம். .

தனுசு

குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட நேர்மையான எண்ணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். குரு பகவான் 4 ஆம் வீடு, 6 ஆம் வீடு மற்றும் 8 ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். உங்களுக்கு பண வரவுக்கு பஞ்சமிருக்காது. அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். காதல் கை கூடாது என்பதால் இப்போதைக்கு சொல்ல வேண்டாம். கொஞ்சம் ஒத்திப்போடவும். வீடு,வாகனம் வாங்கலாம். கடன் சுமை குறையும்.நோய் நொடி நீங்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். வர பயம் நீங்கும்.எதிர்பாராத வகையில் பணம் வந்து பாக்கெட்டை நிரப்பும். .

மகரம்

எதையும் யோசித்து செயல்படக்கூடிய மகரம் ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானமான விருச்சிகத்தில் குருபவான் சஞ்சரிக்க உள்ளார். 11ஆம் வீட்டில் குரு வரும் போது முழுமையான யோகத்தை கொடுப்பார். லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும்.உங்கள் ராசிக்கு 3ம் வீட்டினை குரு 5ம் பார்வையாக பார்க்கிறார். 5ஆம் வீட்டையும் 7ஆம் வீட்டையும் குருபகவான் பார்வையிடுகிறார். குருபகவான் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். திருமணமாகும் வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். மேலும் நன்மைகள் நடைபெற பெற கல்லாலமரத்தடியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும். .

கும்பம்

சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 10 ஆம் இடத்திற்கு செல்கிறார். பத்தாமிடத்து குரு ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டது என்பது பாடல். கடந்த காலத்தில் குரு 9ல் நல்ல இடத்திலிருந்து நன்மைகளை அடைந்தவர்கள் பத்தில் குரு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையையும் உருவாகும். பத்தில் உள்ள குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார் கவலை பட வேண்டாம். நன்மையே நடக்கும். குரு பகவான் 5ம் பார்வையாக 2மிடமான வாக்கு வித்தை குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். 4ஆமிடத்தை பார்வையிடுவதால் வீடு,மனை வாங்கலாம். 6ஆம் வீட்டினை பார்வையிடுவதால் நோய் நொடிகள் தீரும், கடன் பிரச்சினைகள் தீரும். .

வியாழக்கிழமை விரதம் இருந்து குருபகவானை வணங்கலாம். .

மீனம்

குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே… அஷ்டமத்து குருவினால் கடந்த ஓராண்டு காலம் நிம்மதி இழந்து இருந்தீர்கள். இனி கவலை வேண்டாம். குரு உங்களின் பாக்கிய ஸ்தானத்தில் அமரப்போகிறார். வெளிநாடு செல்லும் யோகம் வரும். .

குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு 3ஆமிடம், 5ஆம் இடத்தை குரு பார்வையிடுகிறார். .

எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். .

பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து முருகப் பெருமானை வழிபாடு செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *