Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 15: முதன்முதலாக இரட்டை வேடம்

By  | 

தமிழ் சினிமா காலத்துக்கு காலம் எத்தனையோ கதையம்சங்களை தாங்கி மக்களின் ரசனைகளை வென்றிருந்த போதிலும் சன்பென்ஸ் திகில் திரில்லிங்குக்கு கிடைக்கும் வரவேற்பு என்றும் குறைந்ததில்லை.

மக்கள் திலகத்துடன் அடுத்தடுத்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்த கால கட்டத்தில் ஏனைய நடிகர்களுக்கும் நாயகியாகும் சந்தர்ப்பங்களும் ஜெயாவுக்கு வாய்த்தது.

திரில்லிங்கான திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஒரு தில் வேண்டும். அப்போது பயமறியாத இளங்கன்றை போல் ஜெயா இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆயிரத்தில் ஒருவனில் முதல் நாள் முதல் காட்சியில் பயந்து நடித்த அனுபவம் இருந்தாலும் அதன் பின்னர் சினிமாவில் அவர் அனைத்தையும் கற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் நடிப்பை பார்த்து பிறர் கற்றுக் கொண்டதுதான் அதிகம்.

அதிலும் ஒரு விடயத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும். நடிக்க வந்த புதிதில் எம்.ஜி.ஆரும் உடன் இருந்தவர்களும் ஜெயாவுக்கு தைரியமாக நடிக்க அறிவுரைகள் கூறினாலும் அடுத்தடுத்த காட்சிகளில் அவர் வசனம் பேசி வெளுத்து வாங்கியதைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஏலத்துக்காக அமர்த்தப்பட்டிருந்த ஜெயலலிதாவை கொள்ளைக் கோஷ்டியிடமிருந்து காப்பாற்றி தன் வீட்டுக்கு எம்.ஜி.ஆர் அழைத்துச் செல்லும் போது, எம்.ஜி.ஆரை நேருக்கு நேர் பார்த்து சரமாரியாக திட்டித் தீர்ப்பதை போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

கண்களை அகல விரித்து முகத்தை சுழித்து வார்த்தைகளால் வேல் பாய்ச்சியது போல் ஓரிரண்டு நிமிடங்கள் பேசிய வசனத்தை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் சென்று அவரின் காதுக்குள் “நடிப்பில் துள்ளலையும் துடிப்பையும் வேகத்தையும் பானுமதிக்கு பிறகு உன்னிடம் தான் நான் பார்க்கிறேன்…” என்று மெதுவாக சொன்னாராம். அந்தளவுக்கு குறுகிய காலத்திலேயே நடிப்பை கற்றுக் கொண்டு பாராட்டுகளையும் பெற்றார் ஜெயா.

60களில் சன்பென்ஸ் திகில் திரில்லிங் என்றாலே இந்தக் கதாநாயகன்தான் நினைவுக்கு வருவார். பல துப்பறியும் கதையை கொண்ட திரைப்படங்களில் காவல்துறையைச் சார்ந்தவராகவும் புதிரான கதாபாத்திரங்களில் துணிவுடன் நடிக்கக் கூடிய கதாநாயகனாகவும் நடித்ததால் இவரை தமிழ் ரசிகர்களிடம் ஜேம்ஸ் பாண்ட் எனப் பெயர் பெற்றவர். அவர் தான் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். இவருடன் ஜெயா இணைந்து நடித்த முதல் படம் ‘நீ’.

கன்னித்தாய் படத்துக்கு பின்னர் வௌிவந்த இந்த கறுப்பு வௌ்ளை படத்தில் ஜெயா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

ஸ்ரீ வினயா பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் டி.ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

இதில் ஜெயா என்றும் உஷா என்றும் மாறுபட்ட இரு கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை வௌிப்படுத்தியிருந்தார் ஜெயலலிதா.

இந்தப் படத்தில் நாகேஷ் பண்டரிபாய் மாதவி எஸ்.வி. ராமதாஸ் ஆர். எஸ். மனோகர் ஆகியோரும் இணைந்து நடித்திருந்தார்கள்.

அப்பாவித் தனமான, அமைதியான குடும்பப் பெண்ணாக நடித்து படத்தின் இறுதிக் காட்சிகளில் ரசிகர்களை உள்ளங்களை பதைபதைக்க வைத்தாலும் அதற்கு எதிர்மாறான குணங்களுடன் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் மற்றொரு கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பியது.

தமிழ் திரைப்படங்களின் டைட்டில் போர்டில் கதாநாயகனின் பெயரே முதலில் காண்பிக்கும் வழக்கம் ஒன்று இருந்து வருகிறது. எனினும் நீ திரைப்படம் முற்றிலும் கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டதால் டைட்டிலில் ஜெயசங்கர் ஜெயலலிதா என்று சேர்ந்தே பெயர் பொறிக்கப்பட்டு நடிகையை முன்னிலைப்படுத்திக் காட்டியது. அந்தப் பெருமையும் ஜெயாவுக்கே உரியதாயிற்று.

இந்தப் படத்தில் ஜெய்சங்கர் ஜெயலலிதாவின் திருமண வாழ்த்து பாடலாய் அமைந்த ‘சொன்னாலும் சொன்னாரடி…’ எம்.எஸ்.வி இசையில் இனிதாய் அமையப் பெற்று இன்றளவும் மனது மறக்காத பாடல்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது.

திருமணமாகி இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்து அதன்பின் பல இன்ப துன்பங்களை அனுபவிக்கும் ஒரு சராசரி குடும்பப் பெண்ணாய் நடித்த ஜெயா முற்றிலும் வித்தியாசமான பாணியை பின்பற்றியிருந்தார்.

ஜெய்சங்கர் ஜெயலலிதா இணைந்து நடித்த ‘நீ’ வெற்றி பெற்றதால் அதை தொடர்ந்து ‘யார் நீ?’ திரைப்படத்தில் மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர்.

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *