Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 17: வாத்தியாரிடம் கற்ற சிலம்பம்

By  | 

கன்னித்தாய் படத்துக்குப் பின்னர் மீண்டும் தேவர் பிலிம்ஸ் திரைப்பட நிறுவனம் ஜெயாவை வரவேற்றது. இதிலும் எம்.ஜி.ஆர் தான் கதாநாயகன். படத்தின் பெயர் முகராசி.

இந்தப் படத்தில் ஒரு புதிய திருப்பம்.

காவல் துறை அதிகாரியாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த அதே சந்தர்ப்பத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடித்திருப்பார். தனது அண்ணன் கதாபாத்திரத்துக்கு இவரை போட்டால் சிறப்பாக இருக்கும் என எம்.ஜி.ஆர் ஜெமினியை தெரிவு செய்தார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஜெமினி மூவரும் ஒருமித்து இணைந்து நடித்த முதல் படமும் இதுதான்.

எம்.ஏ. திருமுகத்தின் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையில் உருவான முகராசி 1966ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி திரையிடப்பட்டது.

எம்.ஜி.ஆர் என்றாலே அதிகமாக அக்காலத்தில் கதாநாயகியாக பேசப்பட்டவர் கன்னடத்துப் பைங்கிளி பீ.சரோஜாதேவி தான். ஆயிரத்தில் ஒருவனில்  அறிமுகமான ஆரம்ப கட்டத்தில் கூட ஜெயா எம்.ஜி.ஆருக்கு கதாநாயகியாக தொடர்ந்து நிலைத்திருப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தொழிலில் இவருக்கு இருந்த அர்ப்பணிப்பாலும் நடிப்பாள்கையாலும்  எம்.ஜி.ஆரின் கதாநாயகியாக பலராலும் இவர் பார்க்கப்பட்டார். இருந்தும் சரோஜாதேவிக்கு ஒரேடியாக பின்னடைவு ஏற்பட்டுவிடவில்லை. அவருக்கும் எம்.ஜி.ஆர் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்த வண்ணமாகவே இருந்தது.

இந்தப் படத்தில் ஜெயலலிதா தோன்றும் ஆரம்ப காட்சியில் மரக்கிளை ஒன்றை உருவி அந்தக் குச்சியைக் கொண்டு கேளி பேசிய இரண்டு ஆண்களை அடித்து விரட்டுவார். ஜெயா அடித்துத் துரத்தும் அந்தக் காட்சியை பார்க்கும் ஜெயா எம்.ஜி.ஆரை தவறாக புரிந்து மரத்தடியால் அடிக்கும் போது தான் கையில் வைத்திருக்கும் கர்ச்சிப்பால் எதிர்த்து நிறுத்தும் காட்சியில் எம்.ஜி.ஆரின் கலைத் திறமை வெளிப்பட்டது.

எம்.ஜி.ஆருடன் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்கே வில்லன்கள் பயந்து நடுங்கும் போது அவரை அடிப்பது போல் தைரியமாக நடித்ததற்காக அந்தக் காட்சியில் கைத்தட்டல்களை வாரிக் குவித்துக் கொண்டார் ஜெயா.

“நான் உங்களை தாறுமாறாக அடித்தேன். ஆனால் நீங்கள் இந்த கர்ச்சிப்பைக் கொண்டு சமாளித்துவிட்டீர்களே” என்று கூறிய ஜெயாவிடம் “அது ஒரு கலை” என எம்.ஜி.ஆர் கூற தனக்கும் சிலம்பம் கற்றுத் தருமாறு அந்தக் காட்சியில் ஜெயா கேட்கிறார். அதற்கு “பெண்கள் இந்தக் கலையை கற்றுக் கொள்வது தற்காப்புக்கு மிகவும் பயன்படும்” என்கிறார் எம்.ஜி.ஆர். சிலம்பம் கற்றுக் கொள்வதில் உள்ள ஜெயாவின் உண்மையான ஆர்வத்தை வௌிக்காட்டுவதாகவே அந்தக் காட்சி அமைந்துள்ளது.

அந்தப் படத்திலேயே எனக்கு நீங்களே வாத்தியாராக இருங்கள்… என்று ஜெயாவின் வார்த்தைக்கு தகுந்த படி நிஜ வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர் வாத்தியாரானார்.

அடுத்த காட்சியில் சிலம்பம் பயிற்றுவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் செய்து காட்ட தானும் அவ்வாறே துடிப்புடன் செய்வார். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து சிலம்பம் ஆடுவதைப் போல் காட்சிகள் தொடர அரங்கமே அதிர்ந்ததாக பலரது அனுபவங்கள் சான்று பகர்ந்தன.

முகராசியில் கண்ணதாசன் எழுதிய…

எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் இதில்

எத்தனை கண்களுக்கு வருத்தம் நம்

இருவருக்கும் உள்ள நெருக்கம் இனி

யாருக்கு இங்கே கிடைக்கும்…

என்ற பாடல் இன்றும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பொருத்தப்பாட்டைப் பற்றி பேச வைக்கிறது.

சினிமாவில் தொடங்கி அரசியல் வரை இருவரின் வாழ்க்கை சம்பவங்களிலும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டென எத்தனையோ பேர் வியந்தாலும் இன்னும் சிலருக்கு உள்ளூற வருத்தத்தையும் ஆதங்கத்தையும் தருவதை முன்னதாகவே ஆருடம் கண்டதைப் போல் பாடல் வரிகளில் எழுதியுள்ளார் கவியரசர்.

முகராசி திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி ஜெயா ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்த போது

“முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்ப்படம்… அதுவும் எம்.ஜி.ஆர் நடித்து வேறு எதுவும் தயாரானதா என்பது எனக்கு தெரியாது. இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு நடந்தது. பகல் முழுவதும் ஷூட்டிங். சிறிது இடைவௌியுடன் மீண்டும் தொடரும். விடியற்காலை 4.00 மணி வரை கூட நடித்திருக்கின்றோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணி நேரம் தான் ஓய்வு கிடைக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டு சீக்கிரமே ஸ்டூடியோவுக்கு சென்று விடுவேன். எனக்கு முன்பே எம்.ஜி.ஆர் வந்திருப்பார். எனக்காவது ஷூட்டிங்கில் நடிப்பது மட்டும்தான் வேலை. ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு பகல் பாராது சோர்வோ தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஒரு இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும். ஷூட்டிங் முடிந்து அடுத்த நாள் ரீ ரிக்காடிங் என மொத்தம் 12 நாட்கள் தான். ஒரு பிரமாண்டமான நட்சத்திர படம். அதுவும் வெற்றிச் சித்திரம்…” என்று கூறியுள்ளார்.

வெறும் 12 நாட்களில் படமாக்கப்பட்டு திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேலாக திரையிடப்பட்டு பெருமை தேடிக் கொடுத்தமைக்கு ஜெயாவின் முகராசியும் அவரது  பங்கும் அடக்கம் பெற்றுள்ளது.

தொடரும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *