Cookery

செட்டிநாடு செட்டியார் காளான் பிரட்டல்…!

By  | 

இந்த காளான் பிரட்டல் சுடுசாதம், நெய் சாதம், கீ ரைஸ், புலாவ், சப்பாத்தி, தோசை போன்ற உணவு களுடன் சேர்த்து உண்ண பிரமாதமாக இருக்கும்.

இதற்கு காளானை நீளவாக்கில் நறுக்கினால் சுருள சுருள வதக்கும் தருவாயில் நல்ல மசாலாவுடன் வதங்கி சுவை இரட்டிப்பாகி நமது நாவை சுவையில் நடனம் ஆட வைக்கும்.

தேவையான பொருட்கள் :

பட்டன் காளான் : 250 கிராம்
மரசெக்கு கடலெண்ணய் : 3 மேசைக்கரண்டி
பட்டை : 1 இன்ச்
ஏலக்காய் : 1
கிராம்பு : 4
அண்ணாச்சி மொக்கு : 1
சீரகம் : 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் : 10 ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் : 1/2 தேக்கரண்டி
குரு மிளகு தூள் : 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் : 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் : 1 தேக்கரண்டி
வரமிளகாய் தூள்  : 2 1/2 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் : 3 ( அம்மிகல்லில் மையாக அரைத்தது)
கறிவேப்பில்லை கொஞ்சம்
நாட்டு தக்காளி : 1 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்)
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் கொஞ்சம் ( பொடியாக நறுக்கியது)

செய்முறை :

1. பாத்திரத்தை அடுப்பில் வைத்து மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , அண்ணாச்சி மொக்கு மற்றும் கறிவேப்பில்ல சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

2. பின்னர் அம்மிகல்லில் மையாக நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் அம்மிகல்லில் நசுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

3. பிறகு அதில் மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம்மசாலா தூள், கொத்தமல்லி தூள் , வரமிளகாய் தூள், தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

4. இப்பொழுது மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் சிறிது சிறிதாக குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்றாக 6 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை நன்றாக கொதித்து கூழ் போல் ஆகும் வரை சிறு தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

5. இந்த கலவையில் இருந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இச்சமயத்தில் நன்றாக கழுவி , இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்துகொள்ள வேண்டும். 4 நிமிடங்கள் வரை சிறிது கூட தண்ணீர் விடாமல் நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவிலான தண்ணீர் ஊற்றி காளானை வேகவிடவும்.

6. அதன் பிறகு காளான் மசாலாவை நன்றாக சுருள சுருள வதக்க வேண்டும். இடை இடையே பசு வெண்ணையை சேர்த்துகோங்க. நமக்கு ஏற்றவாறு கெட்டி தன்மை வந்ததும் இறக்கி விட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி சூடாக பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *