Life Style

குளிரூட்டியில் உணவுப் பொருட்களை எவ்வளவு நாட்கள் வைத்து பயன்படுத்தவேண்டும்

By  | 

வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி அவற்றை குளிரூட்டியில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும் குளிரூட்டியில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

குளிரூட்டியில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை இருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் உணவுப் பொருட்கள் நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும் குளிரூட்டியில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவல் இதோ.

பழங்கள்

ஆப்பிள் – குளிர்சாதன பெட்டியில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.

வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.

திராட்சை – குளிரூட்டியில் கழுவாமல் வைத்திருந்து 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

ஆரஞ்சு- 2 வாரங்கள் குளிரூட்டியில் வைக்கலாம்.

அன்னாசி – நன்கு பழுத்த பிறகு குளிரூட்டியில்  3 – 5 நாட்கள் வைக்கலாம்.

தர்பூசணி துண்டு – குளிரூட்டியில்  6 – 8 நாட்கள் வைக்கலாம்.

எலுமிச்சை- இரண்டு வாரம் வைக்கலாம்.

பெர்ரி பழ வகைகள்- பிளாஸ்டிக் பையில் போட்டு 2-3 நாட்கள் வைக்கலாம்.

பேரிக்காய், சப்போட்டா, கொய்யா போன்றவைகள் – பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து பிறகு குளிரூட்டியில் 3 -5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்.

காய்கறிகள்

பீன்ஸ்- இதை நன்கு கழுவி,குளிரூட்டியில் வைத்திருந்து 3 – 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும்.

கத்தரிகாய்- இதை வெளியிலும் வைக்கலாம், குளிரூட்டியில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 -4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

தக்காளி- வெளியில், குளிரூட்டியில் இரண்டு இடத்திலும் வைக்கலாம் ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

கேரட்- நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு குளிரூட்டியில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.

பீட்ருட்- இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.

காலிபிளவர், முள்ளங்கி– இரண்டு வாரம் குளிரூட்டியில் வைத்திருக்கலாம்.

வெண்டைக்காய்- 5 – 7 நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம் உருளைக்கிழங்கு-
வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம்.

வெங்காயம்- வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம்.

குடமிளகாய்- நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம்.

கீரைவகைகள்- பிளாஸ்டிக் பையில் 3 – 5 நாட்கள் வைக்கலாம்.

முட்டகோஸ், செல்லரி,- பிளாஸ்டிக் பையில் 2 வாரங்கள் வைக்கலாம்.

புரோக்கோலி, காளான் – அதிகபட்சம் 2 -3 நாட்கள் வைக்கலாம்.

பூசனிக்காய், வெள்ளரிக்காய் – ஒரு வாரம் வைக்கலாம்.

அசைவ உணவுகள்

முட்டை – குளிரூட்டியில் 3 -5 வாரங்கள் வைக்கலாம் அல்லது காலாவதியாகும் நாட்களுக்குள் பயபடுத்துவது நல்லது.

வேக வைத்த முட்டை – குளிரூட்டியில் 5 -6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

முட்டை வெள்ளைகரு – குளிரூட்டியில் 2 -3- நாட்களுக்குள் முட்டையின் மஞ்சட் கரு- 2 -4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

பிரஷ் சிக்கன், தோல் நீக்காதது – 1 – 2 நாட்கள் வைத்திருக்கலாம்.

பிரஷ் மட்டன், பீஃப் – 1 -3 நாட்கள் வைக்கலாம்.

மீன்- 1 – 2 நாட்கள் வைக்கலாம்.

எறா, நண்டு – குளிரூட்டியில் இரண்டு நாட்கள் வைக்கலாம்.

சமைத்த இறைச்சி- நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்.

சமைத்த மீன் 3-4 நாட்கள் பிரஷ் மீன் 1-2 நாட்கள்.

ஓட்டுடன் கூடிய நண்டு – 2 நாட்கள்.

பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்.

பால் பொருட்கள்

பால். தயிர், வெண்ணெய் போன்ற டெயிரி/dairy பொருட்களை அவைகள் காலாவதியாகும் நாட்களை கவனித்து வாங்கி அதற்குள் பயன்படுத்திடுவது நல்லது.

மேலும் அவைகளை நமது குடும்பத்தின் தேவைக்கேற்ற அளவில் வாங்குவது பண விரயத்தையும் தடுக்கும்.

பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை திகதியில் இருந்து, 10-14 நாட்கள் வைக்கலாம்.

மோர் – 2 வாரங்கள்

தயிர் 7-10 நாட்கள்

காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *