Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 18: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ…

By  | 

பல திருப்புமுனை திரைப்படங்கள் வௌியாகிய கால கட்டங்களில் ஜெயா ஒரு முன்னணி நடிகையாக பிரபலம் பெற்று வந்தார். கதாநாயகர்கள் பேசப்பட்டு வந்த நிலையில் கதாநாயகிகளும் அவர்களது கதாபாத்திரங்களும் முதன்மையான இடத்தை பெற்று வந்தன.

குறிப்பாக 1966களில் ‘யார் நீ’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘குமரிப்பெண்’, ‘கௌரி கல்யாணம்’ போன்ற திரைப்படங்களில் பெண் பாத்திரங்களே மையப்படுத்தப்பட்டிருந்தன.

ஜெய்சங்கர், ஜெயலலிதா இணைந்து நடித்த ‘நீ’ திரைப்படம் வௌியான அதே ஆண்டு மீண்டும் இருவரும் இணைந்து நடித்த ‘யார் நீ’ படமானது வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்டிருந்தது. த்ரில்லிங், சஸ்பென்ஸ் நிறைந்த இந்தப் படத்திலும் ஜெயா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆவியாகவும் சாதாரண குடும்பப் பெண்ணாகவும் இரண்டு விதமாக நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஆவலையும் கூட்டுவதாகவே உள்ளது.

‘யார் நீ’ படத்தின் இரண்டு வேடங்களிலும் ஜெயா அமைதியான குணாதிசங்களுடனே நடித்திருப்பார். வேதாவின் இசையில் உருவான ‘நானே வருவேன் இங்கும் அங்கும்…’, ‘என் வேதனையில் உன் கண்ணிரண்டும்…’, ‘பொன்மேனி தழுவாமல்…’ ஆகிய பாடல்களில் ஜெயா நடித்திருக்கும் வதம் வழக்கத்துக்கு மாறானது. எந்தவிதமான நடன ஆட்டங்களும் இன்றி வெறும் முக பாவத்தை மட்டுமே காட்டி உணர்வுகளால் பேச வைத்த படம் இது.

ஜெயா பேசும் வசனங்களும் ஆர்ப்பாட்டமின்றி இருப்பதால் தான் ‘யார் நீ’ படத்தில் அவரது மற்றொரு கோணத்தை பார்க்க முடிகிறது.

சம ஆண்டில் கே. பாலசந்தர் இயக்கிய ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் முதலும் கடைசியுமாக நடிக்கும் வாய்ப்பு ஜெயாவுக்கு கிடைத்தது. நடிகர் மேஜர் சுந்தரராஜனுக்கு ‘மேஜர்’ என்ற அடைமொழிப் பெயரை பெற்றுத் தந்த இத்திரைப்படம் உருவானதே ஒரு மேடை நாடகத்திலிருந்து தான்.

ஏழை தையல்காரர் நாகேஷின் பாசமிகு தங்கையான விமலா பிரபு என்ற கேரக்டரில் படத்தின் முன்பாதி வரையே ஜெயலலிதாவின் காட்சிகள் இருக்கும்.

காதலனாக நடித்த ஏ.வி.எம். ராஜன் ஜெயாவை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிடுவார். உண்மை எதுவும் தெரியாத அண்ணன் தன் தங்கைக்கு வேறோர் ஆணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்வார். அந்த திருமணத்தை விரும்பாததாலும் தான் ஓர் ஆடவனால் ஏமாற்றப்பட்டதை கூறி அண்ணனை துன்பப்படுத்த விரும்பாத காரணத்தாலும் வேறு வழியின்றி தற்கொலை செய்துகொள்வார் ஜெயா.

தங்கையின் மரணத்துக்கு காரணமானவனை கொலை செய்துவிட்ட நாகேஷ் மேஜர் சந்திரகாந்தாக வரும் மேஜர் சுந்தரராஜனிடம் (கொலை செய்யப்பட்ட ஏ.வி.எம். ராஜனின் தந்தை) தஞ்சமடைவதாக கதை  தொடர்கிறது…

வீட்டில் அடக்கமான மங்கை போன்ற தோற்றத்தில் இருக்கும் ஜெயா கல்லூரியின் நடன நிகழ்ச்சியொன்றில் மேலைநாட்டு உடையுடன் காட்சியளித்திருப்பார். நிகழ்வை காண வந்தவர்களின் கேலிப் பேச்சை கேட்டு சகிக்க முடியாத நாகேஷின் அறிவுரைக்கிணங்க அந்த நிமிடத்திலேயே கலாசாரத்தை பேணும் வகையில் ஆடையை மாற்றிக் கொண்டு புடவை அணிந்து சராசரி தமிழ்ப் பெண்ணாக அவர் வந்து நிற்கும் காட்சி பண்பாட்டை உணர்த்துகிறது.

படத்தில் ‘ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ…’ என்ற வி.குமாரின் இசையமைப்பில் உருவான பாடலை ஒரு மெஜிக் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயா மைக்கில் பாட நாகேஷ் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை கொண்டு சத்தம் எழுப்பி பாடலுக்கு இசை வழங்குவதைப் போன்ற யதார்த்தமான பாடல் மக்களின் ரசனைக்கு நல்விருந்து.

1966ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி வௌியான ‘சந்திரோதயம்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் பத்திரிகையாளராக நடித்து ஊடக தர்மத்தை எடுத்துக்காட்டியதாக அமைந்த அதேவேளை விபரம் அறியாத வெகுளிப் பெண்ணாய் வரும் ஜெயாவின் நடிப்பு இன்னும் பிரமாதம்.

தேவி என்ற குழந்தைத்தனமான பருவ மங்கையாய் நடித்து அவர் பேசிய வசனங்களும் செயல்களும் நடனங்களும் ‘வெண்ணிற ஆடை’ படத்தையே நினைவுபடுத்துவதாக உள்ளது.

‘கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்…’, ‘சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ’ ஆகிய இரண்டு பாடல்களிலும் இரு வேறுபட்ட நடிப்பை ஜெயாவிடம் பார்க்க முடிகிறது. குழந்தையின் கொஞ்சல், குறும்புகள் திடீரென மறைந்து நாணம் வௌிப்பட்டால் அதன் வௌிப்பாடு இப்படித்தான் இருக்கும் என்பதை ‘எங்கிருந்தோ ஆசைகள்…’ பாடலில் மிக அழகாக காட்டியிருப்பார்.

இப்படத்தின் மூலமாக ஜெயாவுக்கு முதன்முறையாக சிறந்த நடிகை்கான பில்ம்பேர் சிறப்பு விருதும் தமிழ்நாடு திரைப்பட ரசிகர் மன்ற விருதும் அறிவிக்கப்பட்டது.

தவிரவும் ‘தனிப்பிறவி’, ‘கௌரி கல்யாணம்’, ‘மணி மகுடம்’ ஆகியன தமிழில் வௌியான படங்கள். ‘கூடாச்சாரி 116’, ‘ஆமெ எவரு’, ‘ஆஸ்தி பருலு’ ஆகிய தெலுங்கு படங்களும் ‘பதுருவதாரி’ என்ற கன்னட திரைப்படமும் 1966இல் வௌிவந்தன.

1964இல் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்ரி நடிப்பில் உருவான ‘நவராத்திரி’ என்ற தமிழ் திரைப்படம் 1966ஆம் ஆண்டு தெலுங்கில் அதே டைட்டிலில் மீள் தயாரிப்பு செய்யப்பட்டது. அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி ஆகியோர் நடித்த அந்த ரீமேக் படத்தில் மன நோயாளியாக கௌரவ தோற்றத்தில் ஜெயா நடித்திருந்தார்.

ஆண்டுக்கொரு பட வாய்ப்பாவது கிடைக்குமா என எதிர்பார்க்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஒரு வருடத்திலேயே இத்தனை படங்கள் நடித்து முத்திரை பதிப்பதென்பது எவ்வளவு அரிதானது!

தொடரும்…

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *