General

அகவை 13இல் வசந்தம் டிவி

By  | 

வாழ்வின் வசந்தமாய் இலங்கை மக்களுக்கு தனது அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி,  தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்து, இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும்  வசந்தம் தொலைக்காட்சி, இன்று (25) தனது 13ஆவது அகவையில் கால் பதிக்கிறது.
ஒரு தசாப்தத்தை கடந்து, இலங்கை மக்களுடைய வாழ்க்கையிலும் அவர்களது செயற்பாடுகளிலும் முற்றுமுழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தொலைக்காட்சியாக வசந்தம் தொலைக்காட்சி காணப்படுகிறது.
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையிலும் கூட தொடர்ச்சியாக மக்களோடு மக்களாக நின்று, அவர்களது தேவைகளை, குறை நிறைகளை முன்வைத்து, முடிந்த அளவுக்கு சமூக சேவை செய்த ஒரு தொலைக்காட்சியாக பரிணமித்த வரலாற்றை இலங்கை மக்கள் நன்கறிவர்.
ஆயினும், இந்த 2022ஆம் ஆண்டு பிறந்தது முதற்கொண்டு இன்று வரை  மிகவும் இக்கட்டான சூழ்நிலையை நம் நாடு மட்டுமன்றி, மக்களும் அனுபவித்து வருகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம்,  பொருளாதார சிக்கல்கள் என எண்ணிலடங்கா பல பிரச்சினைகளை எதிர்கொண்டு நாட்டு மக்கள் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான காலகட்டத்திலும் கூட ஓர் அரச தொலைக்காட்சி என்ற வகையில் இன்று வரைக்கும் மிகப் பிரதானமாக பல சமூக சேவைகளை இலங்கை மக்களுக்கு வழங்கி  வருகின்றது, வசந்தம் தொலைக்காட்சி.
வசந்தம் தொலைக்காட்சி மக்களின் தொலைக்காட்சி என்பதே சரியான பதமாகும்.
ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று, இன்று வரை இலங்கை மக்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அலைவரிசையாக பரிணமிக்கின்றது.
பல சமூக ஊடகங்களின் வரவிலும் கூட அதற்கு ஈடு கொடுத்து, அதற்கேற்ப தன் சேவையை விஸ்தரித்து, வியாபித்து, ஒவ்வொரு ரசிகர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது, வசந்தம் டிவி.
மென்மேலும் பல தரமான நிகழ்ச்சிகளை எதிர்காலத்திலும் வழங்குவதற்கு வசந்தம் தொலைக்காட்சி தயாராகவே இருக்கின்றது. இலங்கையில் இருக்கும் பல தனியார் தொலைக்காட்சிகளோடு போட்டி போடுவது மட்டுமில்லாமல், தரவரிசையிலும் முன்னணியாக திகழ்கின்றது.
இந்நிலையில் நேயர்களாகிய நீங்கள், உங்களது அன்பையும் ஆதரவையும் எப்பொழுதும் இத்தொலைக்காட்சிக்கு நல்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த 13ஆவது ஆண்டிலும் நாங்கள் கால் பதிக்கிறோம்.
என்றும் எங்களோடு தோள் கொடுத்து பயணிக்கக்கூடிய தொலைக்காட்சி நேயர்கள், விளம்பரதாரர்கள் மற்றும்  நலன்விரும்பிகள் அனைவருக்கும் இந்த வேளையில் நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

-தினேஷ் சுந்தர்

You must be logged in to post a comment Login