Articles

அந்தரத்தில் தொங்கினால் அடுத்த நாடு வருமா? 

By  | 

சில மணிநேரம் அந்தரத்தில், வானத்தில், நிலவையும் நட்சத்திரங்களையும் ரசித்தபடி நிற்கப்போகிறோம். கொஞ்ச நேரம் கழித்து நாம் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் இறங்கிக்கொள்ளப் போகிறோம்.


ப்பல் போக்குவரத்தைத்தான், இருப்பதிலேயே மிக மலிவான போக்குவரத்து என்று கூறுகிறார்கள். விமானம், ரயில் கட்டணத்தை விட கப்பலில் கட்டணம் குறைவுதான். ஆனால் அதைவிட எளிமையான போக்குவரத்து முறை ஒன்று இருக்கிறது. செலவே இல்லாத ஒரு பயணம்.

பறவை மாதிரி, செயற்கை இறக்கைகளை பொருத்திக்கொண்டு கொஞ்ச தூரம் பறந்து வானத்துக்குச் சென்றுவிடுங்கள். அங்கேயே சில மணிநேரம் சிறகடித்துப் பறந்துகொண்டிருங்கள். செயற்கை இறக்கைகள் சாத்தியப்படவில்லையா..? ரொக்கெட் மாதிரி ஒரே ஜம்ப்… வானத்துக்குத் தாவிவிடுங்கள். அங்கேயே கொஞ்ச நேரம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருங்கள்.

பூமிதான் சுற்றிக்கொண்டே இருக்கிறதே! உங்கள் காலடியில் பூமி சுற்றிக்கொண்டே இருக்கும். காடுகள், மலைகள், கடல்கள் எல்லாம் கடந்து நமக்கு கீழுள்ள நம் நாடு நகர்ந்துகொண்டே இருக்கும். பிறகு காலடியில் பக்கத்து நாடான இந்தியாவை பார்க்கலாம். கொஞ்ச நேரம் கழித்து பாகிஸ்தான், பிறகு ஆப்கானிஸ்தான், அடுத்து ரஷ்யா வந்துவிடும்.

ஆஹா… நீங்கள் மொஸ்கோதானே செல்ல வேண்டும். இன்னும் கொஞ்ச நேரம் அந்தரத்தில் பறந்தால் போதும். நீங்கள் அடைய வேண்டிய மொஸ்கோ நகரம் வந்துவிடும். அப்புறம் என்ன? தாவிக் குதித்து, நடந்து சென்று மொஸ்கோவில் உங்களுடைய வேலையை தொடங்கலாம்.

இது சாத்தியமா..?

பூமி சுற்றிக்கொண்டுதானே இருக்கிறது. வானத்தில் அந்தரத்தில் பறக்க முடிந்தால் இது சாத்தியம்தான்! ஆனால், தனியாளாக பறப்பது என்பது சாத்தியமில்லையே!? இதுதானே உங்கள் கேள்வி. பரவாயில்லை… தனி ஆளாக நீங்கள் பறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துவிட்டால் நீங்கள் அந்தரத்தில் பறந்து சென்று அந்நிய நாட்டை அடைந்துவிட முடியும், அப்படித்தானே!

“ஆமாம்! இதில் என்ன சந்தேகம்! சில மணி நேரம் அந்தரத்தில், வானத்தில், நிலவையும் நட்சத்திரங்களையும் ரசித்தபடி நிற்கப் போகிறோம். கொஞ்ச நேரம் கழித்து நாம் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் இறங்கிக் கொள்ளப் போகிறோம். எதற்கு தேவையில்லாமல் விமானத்திலும், ரயிலிலும், பேருந்திலும் பயணம் செய்து காசு செலவு பண்ண வேண்டும்?” என்றுதானே நினைக்கிறீர்கள்.

இப்போது நினைக்கவில்லை என்றாலும், எப்போதாவது நிச்சயமாக பறந்து பக்கத்து நாட்டுக்குப் போவது பற்றி நினைத்திருப்பீர்கள். அப்படி முடியாது என்பதை விளக்குவதற்குத்தான் இந்தக் கட்டுரை.

அந்தரத்தில் பறந்து போய் கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தால், பூமி சுற்றி நாம் புதிய நாட்டுக்குப் போய்விட முடியாது.

ஏனென்றால், நாம் காற்றில் பறந்து மேலே, உயரக் கிளம்பினாலும், பூமியை விட்டு நாம் விலகிவிடுவதில்லை. பூமியின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே நாம் இருக்கிறோம். காற்றில் பறக்கிறோம் என்பதும், பூமியைப் போர்த்தியிருக்கும் காற்றுப் போர்வையின் உள்ளே இருக்கிறோம் என்பதும் ஒன்றுதான். எனவே, காற்றில் மிதந்து நாம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தாலும் பூமிப் போர்வையின் உள்ளிருந்து நாம் பூமியுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறோம். காடுகள், மலைகள், கடல்கள், நதிகள் இவற்றுடன் சேர்ந்து எல்லாமே சுற்றுகின்றன.

அதனால்தான் நம் நாட்டுக்காக ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் வானில் இருந்தபடி நம் நாட்டு எல்லையிலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன. மேகங்கள், விமானங்கள், பறவைகள் ஆகிய அனைத்தையும் சுமந்து கொண்டுதான் பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது. எனவே, வானத்தில் நாம் நிற்கும்போது நம் காலடியில் மற்ற நாடுகள் நகர்ந்துவிட வாய்ப்பில்லை. ஒருவேளை காற்று நம்மோடு சேர்ந்து சுற்றாவிட்டால், அந்தரத்தில் நாம் இருக்கும்போது, எதிர்த்திசைக் காற்றால் அதி வேகமாக அடித்துச் செல்லப்பட்டுவிடுவோம்.

நம்முடைய யோசனை மட்டும் சரியாக இருந்திருந்தால் உலகப் போக்குவரத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கும். ஆண்டவன் மிகச் சரியாகவே இயற்கையை இயக்கி வருகிறான். அறிவியல் இயக்கி வருவதாக நீங்கள் நினைத்தால், அதுவும் சரிதான்.

You must be logged in to post a comment Login