Articles

அன்னையர் தினம்!

By  | 

‘அம்மா’ என்னும் சொல்லில் எத்தனை எத்தனை அதிசயங்கள் உள்ளடங்கியுள்ளன. அது வெறும் மூன்றெழுத்து சொல் மாத்திரமல்ல. அனைத்துக்கும் மூலதனமானது. ஒரு மனிதனை சுற்றி பல உறவுகள் இருந்தாலும் கூட அம்மா எனும் சொந்தத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. அந்த இடத்தை நிரப்பவும் இயலாது.

ஒரு புது உயிரை உலகுக்கு கொண்டுவரும் அதிசயத்தை தாயைத் தவிர வேறு யாரால் செய்யமுடியும்? அப்படி ஒரு உன்னதமான உறவை எப்படியெல்லாம் போற்ற வேண்டும்!
ஆனால், இன்று தாயைப் போற்றுபவர்களை விட அவர்களை தூற்றுபவர்கள்தான் அதிகம். அதிலும் குறிப்பாக பிள்ளைகள் வளர்ந்து திருமணமான பிறகு தாயின் நிலை மிகவும் மோசமாகிவிடுகிறது. அனைத்து பிள்ளைகளையும் அவ்வாறு கூறிவிட முடியாது. எனினும், சில பிள்ளைகள் தாயை நினைப்பதுமில்லை… அவர்களை கவனிப்பதுமில்லை.

கருவறையில் தன் உயிரை பத்திரமாக பாதுகாத்தவளுக்கு வீட்டில் ஒரு அறையையேனும் கொடுக்க பல பிள்ளைகள் முன்வருவதில்லை. காரணம், பெற்றோரால் செலவுகள் அதிகமாகிவிடுமோ என்ற பயம். அல்லது வீட்டில் புதிதாக இணைந்துகொண்ட மருமகளோ மருமகனோ அவர்களை தங்களுடன் வைத்துப் பார்த்துக்கொள்ள விரும்புவதில்லை.

வீதிகளில் மற்றவர்களிடம் கையேந்தும் வயது முதிர்ந்த தாய்மார்களை பார்க்கும்போது ‘இவர்களுக்குப் பிள்ளைகள் இருக்கமாட்டார்களா? அவர்கள் பார்க்கமாட்டார்களா? இவர்கள் ஒரு காலத்தில் நன்றாக இருந்திருக்கக்கூடும்…’ என்று எத்தனை எத்தனை கேள்விகள் நமக்குள் வந்து செல்கின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில், ஒரு கணம் நம் தாயின் கரங்களை பற்றி ‘எப்பொழுதுமே உங்களை நான் கைவிட மாட்டேன்’ என கூறவேண்டும் போலிருப்பது உண்மைதான்.

அம்மா இல்லாவிட்டால் நம்மால் இந்த உலகத்தை பார்த்திருக்க முடியுமா? நம்மை ஈன்றெடுக்க அவள் அனுபவித்த வலி வேதனையை விட கொடுமையானது, அவளை போக்கிடமில்லாமல் பிள்ளைகள் நிர்க்கதியாக விட்டுவிடுவதே. அன்று அவள் பிரசவ அறையில் துடித்ததைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு வலியை அந்த மனம் அனுபவிக்குமே!
பல பிள்ளைகள் சொல்வதுண்டு.. ‘வயது போய்விட்டது… இனி, ஒரு மூலையில் கிடக்க வேண்டியதுதானே’ என்று.

அன்று தாய் பேசாமல் மூலையில் அமர்ந்திருந்தால், அந்தப் பிள்ளையால் உணவருந்தியிருக்க முடியுமா? பிள்ளையின் தேவைகள் பூர்த்தியாகியிருக்குமா?
பிள்ளையை தந்தை கண்டிக்கிறபோது, கணவனை எதிர்த்துக்கொண்டு பிள்ளையின் பக்கம் நிற்பவள்தான் தாய். கடவுளால் எந்நேரமும் எல்லோர் முன்னிலையிலும் அவதரிக்க முடியாததால்தான் தாயை அனுப்பி வைத்தானாம். இது வெறும் கருத்தாக மட்டுமே சமூகத்தில் வலம் வருகின்றது.

அம்மா என்பவள் ஓர் அதிசயம். அம்மாவை வர்ணிப்பதற்கு அகராதியிலும் வார்த்தைகள் கிடையாது. என்னவென்று சொல்வது, அவள் தியாகத்தையும் அன்பையும் பற்றி.
தொலைவில் இருந்தாலும் தொலைப்பேசியில் கேட்கும் முதல் கேள்வி, “சாப்பிட்டியா…?” என்பதுதான். அப்பேற்பட்ட உன்னத உறவை கடைசிக் காலத்தில் பட்டினி போடலாமா?
உயிர் கொடுத்தவளை நம் உயிர் உள்ள வரை கைவிடாதிருப்போம்!

You must be logged in to post a comment Login