Articles

அன்றும்.. இன்றும்… ஆரோக்கிய விழிப்புணர்வு!

By  | 

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்ற மூதுரை வாக்குப்படி தனி மனித சுகாதாரம் மேம்படுகிறது. வெளி இடங்களுக்கு சென்று வந்தால் கை, கால்கள் சுத்தம் செய்துவிட்டு வீடுகளுக்குள் பிரவேசிக்க அன்றே அறிவுறுத்தினர்.

தற்போது கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. இதே போன்று முற்காலங்களில் ‘ஊழிக்காற்று’ என்று பெயரிடப்பட்ட மிகக் கொடிய காலரா, அம்மை, பிளேக் போன்றவை நம் நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட வரலாறு நாம் அறிந்ததே.

அம்மை நோய் ஏற்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டோர் வீடுகளில் அவர்களை குடும்பத்தாரோடு தனிமைப்படுத்துதல் (Quarantine) செய்துள்ளோம். வீடுகளில் வேப் பிலை கட்டி அடையாளப்படுத்துதல், வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை வீட்டைச் சுற்றி தெளித்தல், வேப் பிலை மஞ்சள் கலவையை புறப்பூச்சாக அம்மை நோய்க்கு பயன்படுத்தினோம். அம்மை நோய் பாதித்தோர் வீட்டிலிருந்து உணவு மற்றும் பிற பொருட்கள் வாங்க முற்றிலும் தடை செய்து சமூக பரவலாக மாறாத வண்ணம் மிக கச்சிதமாக நிறைவேற்றினோம். குறிப்பாக அம்மைக் கொப்பளம் உதிரக் கூடிய காலத்தில் அவை எளிதில் பரவ வாய்ப்புகள் அதிகம். ஆகவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு வேப்பிலை, மஞ்சள் கலந்த வெந்நீர் கொண்டு தலை முழுகினர். முற்றிலும் அம்மைக் கொப்பளம் உதிரும் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக, மருந்து கலந்த கஞ்சி உண்டனர். 10-16 நாட்கள் தனிமைப்படுத்தினர். நோய் சமூகத் தொற்றாக பரவாத வண்ணம் பாதுகாத்தனர்.

இதே நெறிமுறைகளை, வழிமுறைகளை நாம் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தினாலே நல்ல முறையில் சமூகத் தொற்றாக மாறாமல் இருக்கச் செய்யலாம். பெருந்தொற்று காலங்களில் அம்மன் கோவிலில் கஞ்சி பிரசாதமாக தரப்படும். மிளகு, சீரகம், வெந்தயம், ஏலக்காய், பூண்டு மற்றும் மருந்து சரக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்துக்கள் உடலுக்கு வலிமை தரும்.

நமது பாரம்பரியத்தில் மஞ்சள் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பூஜை அறைகளில் மஞ்சள் ஒரு மங்களகரமான பொருள் மட்டுமின்றி கிருமிநாசினி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. சித்த மருத்துவ கோட்பாட்டின்படி வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உயிர்தாதுக்களும் சமநிலையில் அமைந்தால் நோயற்ற நிலை ஏற்படும். இந்த மூன்றின் சமநிலை வேறுபட்டால் உடல் நலிவுற்று நோய்நிலை அடையும். இந்த மூன்று உயர்தாதுக்களின் வேறுபாட்டினை சரிசெய்யக்கூடிய ஆற்றல் உடையது, மஞ்சள்.

தற்போதைய காலத்தில் சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, முக கவசம் அணிவது போன்ற தற்காப்பு விஷயங்களை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறோம். அதேநேரம் நாம் கோவில் திருவிழாக்களின் அழைப்பிதழில் கூட நான்கு மூலையிலும் மஞ்சள் தடவுவதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்று பரவாமல் பாதுகாக்கிறோம்.

பெண்கள் முகத்தில் மஞ்சள் தேய்த்துக் குளித்து பருக்கள் ஏற்படாத வண்ணம் தடுத்துக்கொண்டனர். மஞ்சளை, உணவு சுவைக்காகவும் மணத்திற்காகவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் வண்ணமும் பயன்படுத்தி, ‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்ற கோட்பாட்டினை உருவாக்கினர். மஞ்சளை வாங்கி இடித்து பயன்படுத்துவதே சிறந்தது.

மஞ்சளில் உள்ள குர்குமின் வேதிப்பொருள் புற்று நோயை எதிர்க்கும் தன்மையுடையது. இதனை நவீன மருத்துவத்திலும் இன்றளவும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நஞ்சு விளைவுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம்.

பெரும் துக்கநிகழ்வில் குடும்பத்தாரை தனிமைப்படுத்துதலும், அதன் பிறகு பிற உறவினரை அழைத்து காரியம் செய்வதும் ஒருவகை தனிமைப்படுத்துதலே ஆகும். விடுதிகளில், வீடுகளில் தனிமைப்படுத்துதல், மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் என 14 நாட்கள் தனிமைப்படுத்துதலும், நம் முன்னோர்களின் செயல்பாடுகளே ஆகும்.

சிறு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் அதிக மாச் சத்து உணவுகள் சேர்ப்பதும், விரைவு உணவு அதிகம் சேர்ப்பதும் நம் உடற்கட்டை கெடுத்து தேக ஆரோக்கியத்தை நிலைகுலையச் செய்யும். இதனால் இளம் வயதிலேயே நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டு வலுவிழந்து வருகின்றனர்.

நாம் பழங்கால வாழ்வியல், உணவு, பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து இன்றும்.. என்றும்.. ஆரோக்கியமாக வாழ முன் வர வேண்டும்.

You must be logged in to post a comment Login