Fashion

அழிவின் விளிம்பில் இருக்கும் ரோகன் ஓவியங்கள்

By  | 

ன்றைய சூழலில் பாரம்பரியம் மிக்க பல கலைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஓவியக்கலை. நவீனம் என்கிற பெயரில் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டு, பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றும் விளிம்பு நிலை மக்களிடத்தில் போர்ட்ரைட் மற்றும் லேண்ட்ஸ்கேப் ஓவியங்களுக்குத்தான் வரவேற்பும் ஆதரவும் இருக்கின்றன. அதே தருணத்தில் நாம் அணியும் ஆடைகளில் வண்ணங்களையும் விரும்புகிறோம். விதவிதமான வடிவமைப்புகளையும் விரும்புகிறோம். இதனை மையப்படுத்தி நாம் உடுத்தும் உடையில் ஓவியங்கள் வரைவது பிரத்தியேக பாணியாக வளர்ந்து வருகிறது. தற்போது நவீன பாணியில் பிரத்தியேக வடிவமைப்பை அச்சிடும் பாணியும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

அத்தகைய பாணிகளில் 400 ஆண்டு தொன்மை மிக்க வரலாற்றை தன்னகத்தில் கொண்டு திகழ்வது தான் ரோகன் ஓவியங்கள். துணிகளில் வரையப்படும் இத்தகைய ரோகன் ஓவியங்கள் குறித்தும், இதன் சிறப்பம்சம் குறித்தும் விரிவாக காண்போம்…

ரோகன் ஓவியங்கள் என்றதும் ரோகன் என்ற பொருளுக்கான விளக்கத்தை நாம் தேடுவது இயல்பு. பெர்சிய மொழியில் ‘ரோகன்’ என்பது எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்டது என பொருள். அதே தருணத்தில் இந்த கலை ஒரு பெர்சிய நாட்டு பாரம்பரிய கலை.

இத்தகைய கலையில் தேர்ச்சி பெற்ற கைவினை கலைஞர்கள் சிலர் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வட இந்தியாவின் முக்கிய மாநிலமான குஜராத் மாநிலத்தில் கட்ச் எனப்படும் பகுதியில் புலம்பெயர்கிறார்கள். அங்கிருந்து இந்த கலையை பரப்ப தொடங்குகிறார்கள். விலை உயர்ந்த ஆடைகளில் இவர்கள் பிரத்தியேகமாக தயாரிக்கும் வண்ணங்களை கொண்டு நுட்பமான ஓவியத்தை வரைந்து, அதனை மேலும் வண்ணமயமான ஆடையாக மாற்றுகிறார்கள்.

மேலும், இந்த ரோகன் ஓவியம் குறித்து இத்துறையின் நிபுணரொருவர் பேசுகையில், “ஆமணக்கு எண்ணெயை தேவையான அளவுக்கு எடுத்து, அதனை இரண்டு நாட்களாக கொதி நிலையில் வைத்திருக்க வேண்டும். அதனுடன் இயற்கையான வண்ணங்களை தரும் பொருட்களை சேர்க்க வேண்டும். பிறகு இதிலிருந்து தயாரிக்கப்படும் வண்ணப்பூச்சு தடிமனாகவும், பளபளப்பு மிக்கதாகவும் உருவாகும். இதனை சிறிய அளவிலான உலோக எழுத்தாணி மூலம் மெல்லிய நூல் வடிவில் வண்ண பூச்சுக்களாக தயாராக்கி, அதனை துணியில் ஓவியமாக வரைவார்கள். பெரும்பாலும், அடர் நிறத்தில் வடிவமைப்பு ஏதுமற்ற துணியில் ரோகன் ஓவியம் வரையப்படுகிறது. பெரும்பாலும் கண்களை கவரும் மஞ்சள், சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களை கொண்டதாக இந்த வண்ணப் பூச்சு தயாரிக்கப்படுகிறது.

மலர்கள், விலங்குகளின் உருவங்கள், கோலங்கள், குறிப்பாக ரங்கோலி கோலங்கள், வாழ்க்கை மரம் எனப்படும் உறவுகள் தொடர்பான நீட்சியின் குறியீடுகள், கலாசாரத்தை உணர்த்தும் நிகழ்வுகள் போன்றவை இத்தகைய ஓவியங்களில் இடம்பெறும்.

பொதுவாக ரோகன் வகையினதான கலைஞர்கள் எந்தவித திட்டமிடலுமின்றி, தங்களின் கைவண்ணத்தில் ஓவியங்களை வரைய தொடங்குவார்கள்.

தொடக்கத்தில் ரோகன் ஓவியங்கள் விவசாய சமூகத்தை சார்ந்த மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றது. இதன் கண்கவர் வித்தைகளால் குறிப்பிட்ட சில சமூகங்களின் திருமண உடைகள் பிரத்தியேகமாக ரோகன் கலையால் அலங்கரிக்கப்பட்டன. இதனால் இந்த கலைக்கு செல்வந்தர்களின் ஆதரவு தாராளமாக கிடைத்தது. ஆனால், கால மாற்றத்தின் காரணமாகவும், தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினாலும், இயந்திர உற்பத்தி மூலம் நன்றாக நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் குறைவான விலையில் கிடைப்பதால், இதன் சேவையும் தேவையும் குறைந்தது.

இருப்பினும், ஏழு தலைமுறைகளாக நாங்கள் ரோகன் ஓவிய கலையை வளர்த்தெடுத்து வருகிறோம். தேவைக்கு ஏற்ற மாற்றங்களை புகுத்தி வருகிறோம்.

தலையணை உறை, படுக்கை விரிப்புகள், உணவு மேசை விரிப்புகள், பெரிய அளவிலான தோல் பைகளுக்கான உறைகள், வட இந்திய பெண்கள் அணியும் முக்காடு, பெண்கள் அணியும் மேலாடை, பிஜாமா, குர்தா, அலங்கார பொருட்களுக்கான வெளிப்புற உறைகள் என பல்வேறு பொருட்களிலும் ரோகன் கலை வடிவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், சில வகையினதான ரோகன் ஓவியங்கள் துணிகளில் வரையப்பட்டு, வடிவமைக்கப்பட்ட பின்னர், அவை மடிக்கப்பட்டு மறுபுறம் கண்ணாடி போல் பதிக்கப்படும். பிறகு அப்பகுதியில் நுட்பமான வேலைப்பாடுகளால் அந்தப் பகுதியும் மேம்படுத்தப்படும்.

தற்போது ரோகன் பாணியிலான ஓவிய கலையை கற்பிக்கவும் நிபுணர்கள் தயாராகி இருக்கிறார்கள்.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு இத்துறை விற்பன்னர்கள் சிலர், நூற்றுக்கணக்கான இளம் கலைஞர்களுக்கு பயிற்சியளித்து, இத்தகைய கலை அறியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்றார்.

ரோகன் ஓவியங்களால் வரையப்பட்ட துணிகள் பிரத்தியேகமானவை. அதன் வடிவமைப்பின் நேர்த்தி, காண்பவர்களை கவர்பவை. அதன் வண்ணங்கள் இயற்கையானது என்பதால் சுற்றுப்புற சூழலுக்கு ஆதரவானவை. அத்துடன் மனதுக்கு இதமான உணர்வை ஊட்டுபவை. இப்படி பல நேர்மறையான அதிர்வுகளை தாங்கிக்கொண்டிருப்பதால், ரோகன் ஓவியங்களால் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட ஆடைகளையும் துணிகளையும் நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதுவே இந்த கலையை அழிவின் விளிம்பிலிருந்து மீட்கும் உத்தி.

– கும்பகோணத்தான்

You must be logged in to post a comment Login