Health

ஆடலாம்.. ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

By  | 

மனிதர்களுக்கு புதிது புதிதாக நோய்கள் ஏற்படும் இன்றைய சூழலில், புதிய சிகிச்சை முறைகளும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவைகளில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது, ‘டான்ஸ் மூவ்மென்ட் தெரபி’ எனப்படும் நடன அசைவுச் சிகிச்சை. இது இந்தியாவில் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. மனநலம், உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்தப் புதிய சிகிச்சை நல்ல பலனைத்தருவதாக சொல்கிறார்கள்.
“நடன அசைவு சிகிச்சையை என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கிக்கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சில எளிமையான அசைவுகளின் மூலம், என் உடல், மனம், ஆத்மா மூன்றையும் இந்த தெரபி இணைக்கிறது. நடன அசைவுக்காக உடலை வளைத்து நெளித்து கஷ்டப்பட்டு ஆடவேண்டியதில்லை. எனக்கு தெரிந்த விதத்தில், பிடித்த முறையில் சுயமாக ஆடுகிறேன். இப்படித்தான் உடம்பை அசைக்கவேண்டும் என்ற எந்த வரைமுறையும் இல்லை. நடன அசைவுகளுடன், மூச்சுப் பயிற்சியும், வேறு சில பயிற்சிகளும் தருகிறார்கள். அவை அனைத்தும் சேர்ந்து வித்தியாசமான அனுபவத்தை தருகின்றன. அதனால் உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறுகிறது” என்கிறார், ஷீலா. இவரது வயது 48.


உடல், மனநலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், அவற்றை ஒரு ஜாலியான, எளிதான வழியில் எதிர்கொள்வதற்கு இந்தச் சிகிச்சை முறை உதவுகிறது என்கிறார்கள். இந்த பயிற்சியில் நடன அசைவுகளுடன், தியானம், யோகாசனம், தாய்சி எனப்படும் தற்காப்புக் கலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை நுட்ப செயல்பாடுகள் போன்றவைகள் அடங்கும். நாட கமும் இடம்பெறுகிறது.
யோகா, பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள், தற்காப்புக் கலைகள், நாடகம், பேச்சில்லா நடிப்பு, மனதை இலகுவாக்கும் ‘ரிலாக்ஸ்’ நுட்பங்கள் போன்ற பலவற்றையும் கலந்து இதனை வடிவமைத்திருக்கிறார்கள். சிகிச்சைக்கு வருபவர்களின் உடல்நிலையையும், மனநிலையையும் ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி சிகிச்சையினை வழங்குகிறார்கள்.
மனநெருக்கடி, மனஅழுத்தம், தன்னம்பிக்கைக் குறைவு, கவனக் குறைபாடு போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு நடன அசைவுச் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறதாம். ஆட்டிசம், சீசோபிரெனியா, நீடித்த வலி, மூட்டு வலி, ஞாபகமறதி, உணவு உண்ணுதலில் உள்ள குறைபாடுகள் தொடர்பான பிரச்சினை கொண்டவர்களுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்கும் என்கிறார்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச் சினைகள், மனநிலை, உடல்நிலையை கருத்தில்கொண்டு அதற்கேற்ப தெரபிஸ்டுகள் சிகிச்சை முறையை வடிவமைக்கிறார்கள்.
“இந்த சிகிச்சை முறையில் பேச்சு என்பது குறைவுதான். அசைவுகள்தான் அதிகம். நாங்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் வார்த்தைகளைவிட செயலில் அதிக கவனம் செலுத்துகிறோம். காரணம், வார்த்தைகளை விட, வார்த்தைகளற்ற தொடர்பு முறையில்தான் நம்மால் சிறப்பாக செயலாற்ற முடியும்” என்கிறார், நடன அசைவுச் சிகிச்சையாளர், தாமினி. பாலியல்ரீதியான பாதிப்புகளுடன் வரும் பெண்களுக்கு ‘பெல்லி’ நடன அசைவுகளை அதிகம் பயன்படுத்துவதாகக் கூறுகிறார், இவர்.
நடன அசைவுச் சிகிச்சை என்பது முழுக்க முழுக்க நடனம் ஆடுவது போன்றதா? சிகிச்சை பெற வருபவர்களுக்கும் நடனம் தெரிந்திருக்கவேண்டுமா?
“நடனம் மனிதர்களை உற்சாகப்படுத்தக்கூடியது. நடனத்தில் சில நுட்பங்களும், அழகியல் உணர்வுகளும் வெளிப்படும். ஆனால் நடன அசைவுச் சிகிச்சை பெறுபவர், அப்படி எந்த நுட்பங்களையும் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தையும் நாங்களே கற்றுக்கொடுத்துவிடுகிறோம்” என்கிறார்கள், தெரபிஸ்டுகள்.
வாழ்வில் பிரச்சினைகளால் அவதிப்படும்போது நடனம், ஓவியம் போன்றவற்றில் கவனத்தைத் திசைதிருப்பும்படி கூறப்படுவதுண்டு. ஆனால் நடன அசைவுச் சிகிச்சையோ, பிரச்சினையை நேருக்கு நேர் எதிர்கொள்ளுங்கள் என்கிறது.
“பிரச்சினையில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல், அதை எப்படிக் கையாளவேண்டும் என்று நாங்கள் சொல்லிக்கொடுக்கிறோம். நடனம் சிந்தனைத் திறனையும், செயல்திறனையும் அதி கரிக்கக்கூடியது. அதனை நாங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறோம்” என்கிறார்கள். இந்த தெரபியில் இசைக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. சிகிச்சை பெறுபவரின் மனநிலையை மேம்படுத்தும் விதத்தில் இசையையும் வடிவமைத்து இசைக்கச் செய்கிறார்கள்.
நடன அசைவுச் சிகிச்சையில் ஐந்து கட்டங்கள் இருக்கின்றன. அவை பலன் கொடுப்பதற்கு எட்டு முதல் ஒன்பது மாதங்கள் தேவைப்படுகிறது. பயிற்சியாளர், சிகிச்சைக்கு வருபவரின் உடல் அசைவுகளை முதலில் ஆழ்ந்து கவனிக்கிறார். சிகிச்சைக்கு வந்தவரை பலவித வேடிக்கையான அசைவுகளைச் செய்யும்படியும் கூறுகிறார். அவர் விரும்பியபடி எல்லாம் உடல் அசைவுகளை வெளிப்படுத்தும்படியும் கூறுகிறார். அப்போது அவருக்குள் இருக்கும் உணர்வுரீதியான பிரச்சினைகளை எல்லாம் புரிந்துகொள்கிறார். அந்த பிரச்சினைகளுக்கு நடன அசைவுகள் மூலம் தீர்வும் அளிக்கிறார்கள்.

You must be logged in to post a comment Login