Articles

ஆடி மாதத்தின் அற்புதங்கள்…

By  | 

தமிழின் 12 மாதங்களும் அபாரமான மாதங்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதத்தில் பிரசித்தி பெற்றவை. அதில் 4ஆவது மாதமான ஆடி மாதம் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது புதுமணத் தம்பதிகளை பிரித்து வைப்பதுதான்.
அடுத்து, ஆடி பதினெட்டாம் பெருக்கு, ஆடி வெள்ளி, அம்மன் கோயில்களில் பால் குடம், காவடிகள் என திருவிழா கோலமான மாதம்தான் ஆடி மாதம்.
மேலும், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை, ஸ்ரீ வரலக்ஷமி விரதம் உள்ளிட்ட ஏராளமான விசேஷங்கள் தாராளமாக இருக்கிறது.
ஆடி மாதத்தின் மகத்துவங்கள் முக்கியமானவைகள். நீர் வழிப்படத்தக்க இயற்கைப் பொருள். மழை நீரும் ஒரு தெய்வம்.
ஆடி மாதம் என்றாலே கிராமப் புறங்களில் இருப்பவர்களுக்கு ஆடிப்பெருக்குதான் ஞாபகத்திற்கு வரும். ஆடியில் அடை மொழிகிறது. ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உழவர்கள் ஆடிப்பட்டம் தேடி விதைக்கிறார்கள். பட்டம் என்றால் நீர் நிலைகள் என்று பொருள். விதைகளை ஆடி மாதத்தில் விதைத்துப் பயிர்கள் நன்றாக வளர்வதற்காக நீர்வளம் அருளும் ஆறுகள் அனைத்தையும் போற்றி வழிபடுவதுதான் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.
ஆறுகள் ஓடுகின்ற எல்லா ஊர்களிலும், நகரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா நடைபெறும். ஆடிப்பெருக்கின் போது, பராசக்தியை வழிபடுகின்றனர்.
தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர். இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற பதினென் மேற் கணக்கு நூல்கள், பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், புராணங்கள், சித்தர் பாடல்கள், காப்பிய வர்ணனைகள் 18 என வகுத்தனர். ஆன்மிகத்தில் 18 என்ற எண் புனிதமானது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் படிகள் 18. ஆடி 18 ஆம் நாள் வெள்ளப்பெருக்கு அந்த பதினெட்டாம் படியைத் தழுவிச் செல்கிற போது ஆடிப்பதினெட்டு என்ற திருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
ஆடிப்பெருக்கன்று அம்மன் வழிப்பாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி ஆகியவைகளை வைத்து வழிப்பட்டு அவற்றை ஆற்றோடு செலுத்துகின்றனர்.
கன்னிப் பெண்கள் தனக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, காவிரித் தாயை வணங்கி, அம்மன் முன் படைத்த மஞ்சள் கயிறுகளை ஒருவரது கழுத்தில் மற்றொருவர் கட்டி விடுவது வழக்கம்.
மஞ்சள் கயிற்றை ஆண்கள் தனது கையில் கட்டிக் கொள்வார்கள். ஆடி மாதம் என்றாலே பெரும்பாலும் பெண்களுக்குரிய, பெண்களுக்கான மாதமாகவே இருக்கிறது.
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும். ஆடிப்பட்டம் தேடி விதை. ஆடியக்காலும், பாடிய வாயும் ஓயாது. மேலும், ஆடி மாதம் என்றாலே, புதுத் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் பயப்படுவார்கள்.

ஆடி ஞாயிறு
ஆடி மாதத்தில் மாரியம்மன் கோயிலில் வழிபாடே பிரசித்தம். மாரியம்மன் கோயில்களில் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, ஆடி ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களிலும், வீடுகளிலும் மாரியம்மனை வழிப்பட்டு அனைவருக்கும் கூழ் வார்க்கின்றனர். ஆடி வெள்ளிக்கிழமைகள் – பல தெய்வங்களை வழிபட ஆடி வெள்ளிக்கிழமைகள் ஏற்றவை. குடும்பத் தெய்வமான பூவாடைக்காரிகளை ஆடி வெள்ளிகளில் வழிபடுவது வழக்கம்.

ஆடிக்கிருத்திகை
ஆடிக் கிருத்திகையன்று பக்தர்கள் காவடிகள், பால் குடங்கள் ஏந்தி முருகனை வழிபடுகின்றனர். முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். ஆடிப்பூரம் – அம்மன் வழிப்பாட்டுக்கு ஆடிப்பூரமும் சிறந்த நாளாகும். பராசக்தியான பார்வதி அவதரித்த நன்னாள். அம்மன் தவம் செய்கின்ற நாள் என்றும், அம்மனுக்கு வளைக்காப்பு நாள் என்றும் ஆடிப்பூர நாளில் அம்மனை வழிபடுகின்றனர். சில கோயில்களில் ஆடிப்பூரத்தன்று பிரம்மோற்சவமும் தொடங்குகிறது.

ஆடி அமாவாசை
ஆடி அமாவாசையன்று காலஞ்சென்ற முன்னோர்களை வழிப்படத்தக்க நாளாகும். நாக சதுர்த்தி – ஆடி மாதம் வளர்பிறைச் சதுர்த்தியில் மகளிர் விரதம் இருந்து நாகத்தை வழிப்படுவது நாக சதுர்த்தி விரதமாகும். இதனால், நாகதோஷம் அகலும். மகப்பேறு உண்டாகும். நாக சதுர்த்தியன்று நாகக்கல்லைப் பிரதிஷ்டை செய்தால் மகப்பேறு கிடைப்பது உறுதி. விரதப்பயனால் பிறந்த குழந்தைகளுக்கு நாகசாமி, நாகராஜன், நாகப்பன், நாகலெட்சுமி, நாகம்மை என்றெல்லாம் நாகத்தின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.
சிலர் உடன் பிறந்தவர்களுக்காக நாக சதுர்த்தி விரதம் காக்கின்றனர். புற்றுக்கு பால் வார்த்து, புற்று மண்ணையே கவசக் காப்பாக அனைவரும் நெற்றியில் இட்டுக் கொள்கின்றனர்.

கருட பஞ்சமி
நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். பெண்கள் விரதமிருந்து கருடணை வழிப்பட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறும் உண்டாகும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகிவிடும். ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிப்பட்டால், வழிப்பாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால், விரதத்தை உடனே முடித்துக் கொண்டு உணவருந்தலாம்.

ஸ்ரீ வரலக்ஷமி விரதம்
இந்த விரதம் ஆடி மாதம் அல்லது ஆவணி மாதங்களில் மேற்கொள்ள வேண்டும். சுமங்கலிகள் விரதம் இருந்து மஹாலெஷ்மியை வழிப்படுவதுதான் ஸ்ரீ வரலெஷ்மி விரதம். மஹாலெட்சுமி பாற்கடலில் அவதரித்த நாளில், மாலை வேளையில் கலசத்தை நிறுவி அம்பாளை வழிப்பட்டால் நற்பலன்கள் விளைகின்றது.

சாதுர் மாச விரதம்
ஆடி மாதம், முதல் நான்கு மாதங்கள் மழைக்காலம் ஆகும். அப்போது, துறவிகள் முதலானோர் வெளியில் செல்லாமல் விரதமிருப்பர். இதற்கு சாதுர் மாச விரதம் என்று பெயர். சாதுர் என்றால், நான்கு என்று பெயர். இந்த விரதம் துறவிகளுக்கும், தவசிகளுக்கும் உரியது. விருப்பமிருந்தால் இல்லறத்துக்கும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஆடிப் பௌர்ணமியன்று இந்த விரதம் தொடங்குகிறது. அன்றைய நாளில் ஆச்சார்யர்களை வழிப்பட வேண்டும். ஆடிப்பெளர்ணமியை வியாசப் பெளர்ணமி என்றும், குரு பெளர்ணமி என்றும் சிறப்பித்துக் கூறுகின்றனர் இப்படி ஆடி மாதம் பிரசித்தி பெற்ற மாதமாக அமைந்துள்ளது.

You must be logged in to post a comment Login