General

ஆத்மாவை ஆளும் வண்ணாத்தி

By  | 

எழில்மிகு வண்ணத்துப் பூச்சிகளுக்கு நமது தேசத்தில் ரசிகர்கள் ஏராளம். ஆனால், பல நாடுகள் இப்பூச்சிகளை வேறு கோணத்தில் பார்க்கின்றன. குறிப்பாக, அறிவியல் வளர்ச்சியில் அகிலத்தையே அசர வைத்த ஜப்பான் தேசத்து மக்கள் இதில் குறிப்பிடவேண்டியவர்கள். இந்நாட்டு மனிதர்களின் பார்வையில் இந்த வண்ணத்துப் பூச்சிகள்தான் மானிட ஆன்மாக்களின் சட்டாம்பிள்ளை!
மானிடரின் ஆத்மாவை ஆளும் இப்பூச்சிகளின் பிடியில் ஏற்கனவே இறந்த மனிதர்கள், தற்போது இறக்கும் தருவாயில் உள்ள மனிதர்கள் மட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் ஆத்மாவும் இருப்பதாக நம்பப்படுகிறது. மனிதனைப் போல் அல்லாது வெகு குறுகிய காலம் மட்டுமே வாழும் இப்பூச்சிகள், தம் பிடியில் உள்ள ஆத்மாக்களை தமது வாரிசுகளுக்குக் கைமாற்றி விட்டுச் சென்றுவிடுகின்றனவாம். நம்நாட்டில் நிறைவாய் வாழ்ந்து இறந்து போனவர்களின் ஆத்மா எளிதில் சாந்தியடைந்துவிடுவதாக நம்புகிறோம்.
ஜப்பானில் இது வேறு மாதிரி!
திருப்தியாய் வாழ்ந்து மடிந்தவர்கள்கூட அவ்வப்போது தம் பேரக் குழந்தைகளைப் பார்க்க ஆவலுடன் அவர்களது படுக்கை அறையின் ஜன்னல் பக்கம் வருவதும் உண்டாம்;, அதுவும் வண்ணத்துப் பூச்சியின் வடிவில்!
இந்தப் பூச்சிகளின் இனவிருத்தி நான்கு மாறுபட்ட பாகங்களைக் கொண்டிருக்கிறது. முட்டை, லார்வா புழு, கூட்டுப்புழு, அடல்ட் பூச்சி என்பனவாகும். இத்தகைய இனவிருத்திக்கு முன்பு இனச்சேர்க்கை நிகழ்கிறது. வண்ணத்துப் பூச்சிகளின் இந்த வசீகர விளையாட்டுகளில் நிறைய ருசிகரங்கள் இருக்கின்றன.
ஆண் பூச்சி ஏதேனும் ஒரு பூவில் தேனருந்திக் கொண்டிருக்கையில், காற்றில் தவழ்ந்து வரும் பெண் பூச்சியின் ஸ்பெஷல் வாசனையை நுகர்ந்துவிட்டால், தம் உறிஞ்சு குழல்களை சட்டென்று சுருட்டிக்கொண்டு வாசனை வரும் திசை நோக்கிப் பறக்கத் தொடங்கிவிடும்.
பெண்பூச்சிகளின் அருகாமை நெருங்க, நெருங்க இந்த வாலிப வாசனையின் அடர்த்தி கூடிக் கொண்டே இருக்கும். இதுவே இலக்கை அடைவதற்கும் வழிகாட்டும். பெரிதாய் சிரமம் ஏதுமின்றி இந்த ஆண் பூச்சி, பெண் பூச்சியின் இருப்பிடத்தை ஒரு நுகர் நுட்பத்துடன் கண்டறிந்து, எளிதில் வந்து அருகில் அமர்ந்து கொள்கிறது.
ஆனால், பெண் பூச்சிக்கு இந்த அந்நிய ஆண் பூச்சியின் அருகாமை அவ்வளவு சிலாக்கியமாக முதலில் இருப்பதில்லை. இது அந்த ஆண் பூச்சிக்கும் தெரியும். எனவே, முதல் முயற்சியாக மெல்லிய அணுகுமுறையில் அனுமதி கேட்கும். அதாவது தம் அன்டெனாக் கொம்புகளால் பெண்ணுடம்பை மிருதுவாக ஸ்பரிசித்துப் பார்க்கும். உடனே பெண்பூச்சி, ‘ச்சீ போ’ எனப் பறந்துவிட்டால் காதல் ஊத்திக்கிட்டதாக அர்த்தம். அமைதியாய் சிலிர்ப்போடு அமர்ந்து கொண்டிருக்கும் எனில், பிக்கப் ஆகிவிட்டதென அர்த்தம். அதன் பிறகு ஆண் பூச்சி அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிடும்.
அதன் முன்னே ஆண் பூச்சி தம்மால் இயன்ற அளவிற்கு ஸ்விப்ட் டான்ஸ் ஆடி தன் ஒட்டுமொத்த திறமைகளையும் வெளிப்படுத்திக் காட்டும். இதற்குப் பிறகு பெண் பூச்சி இணைய தயாராகிவிடும்.
இவ்வாறாக இணை இணங்கிய பிறகு, ஆண் பூச்சி தனது மொசுமொசுவென்ற முடிகளுடன் கூடிய முன்னங்கால்களால் பெண் பூச்சியை அழுத்தி அணைக்க, பெண் பூச்சி சங்கேதமாய் ஒரு மெல்லிய இசை ஒலியை எழுப்பும். இசையின் முடிவில் இரண்டும் இணைந்துவிடும். இதற்கு ஆண் பூச்சியின் ஒரு ஜோடி கிலாஸ்ப்பர் உறுப்புகள் உதவுகின்றன.
உறவுக்குப் பின் ஆண் பூச்சிகள் பறந்துவிட்டாலும், பெண் பூச்சி கடமையோடு செயல்படுகிறது.
உறவில் கிடைத்த விந்தணுக்களை தம் அடிவயிற்றில் உள்ள ஒரு ஸ்ரேஜ் பையில் பாதுகாப்பாக சேமித்து வைக்கிறது.
அடுத்து சுமார் 100 முட்டைகளை உருவாக்குகிறது.
முட்டைகளை ஒரே இடத்தில் இட்டு வைக்காமல் பல்வேறு இலைகளின் அடிப்பகுதியில் குவியல் குவியலாக இட்டு வைக்கின்றன.
குளிர்காலத்தில் இடப்படும் முட்டைகள் வசந்தகாலம் வரை வளர்ச்சியுற்று பொரிகின்றன.
பல வாரங்களுக்குப் பின் இரண்டாம் நிலையான லார்வா புழுக்கள் வெளிவந்து இலைகளை உட்கொள்வதையே முழு நேரமும் தொழிலாகக் கொண்டிருக்கின்றன.
ஒரு வழியாக இந்த லார்வா முழு வளர்ச்சியுற்ற பின், இரையுண்பதை நிறுத்திவிட்டு, ஓய்வெடுக்க ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடி அலையும். ஒரு பெரிய இலையின் மறைவான அடிப்பகுதியில் ஆணியடித்தது போல் ஒட்டித் தொங்கிக்கொள்ளும். இச்சமயத்தில் இறுதியாக தோலுரித்துத் தம் உடலை மூடிக்கொண்டு கூட்டுப் புழுவாக மாறிப்போகும். இந்தக் கூட்டுக்குள் நிகழும் உருமாற்ற விநோதங்கள் எல்லாம் உலக மகா பேரதிசயமே!
ஆம்! இப்புழு கூட்டிற்குள் 6 கால்களையும் நான்கு இறக்கைகளையும் கொண்ட நிஜ வண்ணத்துப் பூச்சியின் வடிவத்தை அடைகின்றன. எனினும் இந்த நெடிய பயணத்தில் 90 சதவீதம் இவற்றையுண்ணும் இரைக்கொல்லி உயிரிகளால் அழிக்கப்பட்டு விடுவதுதான் பரிதாபமே!
கருவுறுவது தொடங்கி வாழ்க்கையை தொடரும் வரையான ஒவ்வொரு காலமும் இந்தப் பூச்சிகளுக்கு தனிப் போராட்ட களம்தான்!
மனித குலத்திலும் எண்ணற்ற ஆண்கள் இப்படிப்பட்டவர்கள்தானே.
பெண்ணிடம் உறவின் இன்பத்தை பெற்றதும் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால், களங்கத்தையும் கேள்விகளையும் கடைசி வரை தனித்து சுமப்பது பெண் மட்டுமே.
எனவேதான் இப்பூச்சிகள் தமது இமேகோ பருவத்தில் வேறெந்தத் திசையிலும் கவனத்தைத் திசை மாறவிடாமல் ஓயாத இனச் சேர்க்கையிலேயே முழுமையாக ஈடுபட்டு அதிகபட்ச முட்டைகளை உற்பத்தி செய்ய முயற்சிக்கின்றன. காரணம்… எஞ்சிப் பிழைக்கும் அந்த பத்து சதவீதப் பூச்சிகளை அதிகரிக்கவே!
இந்த முயற்சிதான் பூச்சிகளையும் பூவையர்களையும் ஒன்று சேர்க்கிறது!

You must be logged in to post a comment Login