Astrology

ஆறாம் எண்ணுக்கு உரிய எண் கணித ரகசியங்கள்!

By  | 

6,15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கும், தங்களின் பிறந்த திகதி மற்றும்பிறந்த ஆண்டு,மாதம் ஆகியவற்றின் கூட்டுத்தொகை ஆறாகக் கொண்டவர்களுக்கும்அவர்களது வாழ்க்கையில் நடைபெறும் சில சூட்சுமமான ரகசியங்களையும், அதற்குரிய எண் கணித பலன்களையும் காணலாம்.

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் பால்ய பிராயத்திலிருந்தே தங்களது அழகான தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருவார்கள். குழந்தையாக இருக்கும் பொழுது வெளியில் எங்கேனும் அழைத்துச் சென்றால்.., தன்னை சீவி சிங்காரித்து புத்தாடை அணிவித்து அழைத்துச் செல்லவேண்டும் என்று சொல்வார்கள். இந்த நிலை அவர்கள் வளரிளம் பருவம் மற்றும் திருமண பருவம் அடையும்வரை அவர்களிடத்தில்,‘தாம் பொலிவான தோற்றத்தில் உலா வரவேண்டும்’ என்பதில் தீவிர கவனம் செலுத்துவார்கள். சிலர் திருமணத்திற்கு பிறகும் தங்களது தோற்றப்பொலிவிற்கு முக்கியத்துவம் தருவார்கள். அதே தருணத்தில் சுறுசுறுப்பாகவும் பணியாற்றுவார்கள். எப்பொழுதும் உற்சாகமாகவும், கலகலப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்பதில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.

காதலனோ.. கணவனோ..சகோதரர்களோ..அல்லது உறவினர்களோ… ஸ்டைலீஷாக புகைப்பிடிப்பதை ரசிப்பார்கள். அதே தருணத்தில் தங்களுடைய அழகால் அனைத்தையும் அடக்கியாள இயலும் என்ற நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் அழகுணர்வு கண்ணியமாக பாராட்டினால், அதனை ஏற்றுக்கொள்வார்கள். சில தருணத்தில் இவர்களின் அழகை வர்ணித்து காரியம் சாதித்துக் கொள்ளும் சக தோழிகளும் இருப்பார்கள்.

இவர்களிடத்தில் நட்பு பாராட்டும் ஆண்கள், பணம் தொடர்பாக ஏமாற்றினாலும் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் பொதுவெளியில் இவர்களது இளமையை குறித்து எதிர்மாறாக அதாவது ‘ஆன்ட்டி’ என்றோ.. அல்லது வேறு ஏதேனும் ‘நிக் நேம்’ வைத்து விளித்துவிட்டால்… அதனால் மனமுடைந்து போவார்கள். அத்துடன் அவர்களை தற்காலிக எதிரியாகவும் கருதுவார்கள். அத்தகைய தருணத்தில்இவர்களிடத்தில் சந்தையில் அறிமுகமான புதிய வாசனாதி திரவியங்களை பரிசாக அளித்தால், மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். ஏனெனில் இவர்களுக்கு நறுமணத்தைலத்தின் மீது அலாதிப்ரியம் உண்டு. அதிலும் நுட்பமான நறுமணம், வித்தியாசமான நறுமணம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நறுமணம் என்றால் அதிகமாகப் ப்ரியம் கொள்வார்கள்.

இவர்களுக்கு இனிப்பு பண்டங்கள் மீதும், அசைவ உணவுகள் மீதும் தீராத பற்று உண்டு. அதனால் நீரிழிவு நோயாலும், சிறுநீரக தொற்றாலும் பாதிக்கப்படுவார்கள். அதே தருணத்தில் இவர்கள் அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டு, அதனை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் பல தருணங்களில் சோம்பலின் காரணமாக செய்து முடிக்கவேண்டிய பணியை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் செய்யாமல், தவிக்கும் போது,குறுக்கு வழியில் அதனை நிறைவேற்றுவதற்கான வழியைகண்டறிவார்கள். இதன் காரணமாக அவர்கள் தர்மசங்கடமான நிலைக்கு ஆளானால்…இவர்களுக்கு 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் தாமாக முன்வந்து உதவுவார்கள் அல்லது இந்த திகதியில் பிறந்தவர்களிடம் உதவி கேட்டால் நேர்மறையான வழிகாட்டல்கள் கிடைக்கும். அதே தருணத்தில் இந்த ஆண்டு 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களை தவிர்த்து, 4,13, 22, 31ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும், 6, 15, 24 மற்றும் 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும் தாமாக முன் வந்து உதவி செய்வார்கள். இதையும் கடந்து ஏதேனும் சொல்ல இயலாத சங்கடங்கள் இருந்தால்… மகாலட்சுமி வழிபாடு கைகொடுக்கும். சிலருக்கு அவர்களின் குலதெய்வ வழிபாடும் நல்ல பலனை வழங்கும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நீங்கள் சந்தித்த பிரமுகர்களால் உங்களுக்கு பலனுண்டு. உயர் கல்வி முடித்த பெண்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை விருப்பத்துடன் தெரிவுசெய்து படித்தால்.. எதிர்காலம் சிறக்கும். வெளிநாட்டில்  பணிபுரியக்கூடிய வாய்ப்பும் கிட்டும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் உங்களை பெண் பார்த்து சென்ற மாப்பிள்ளை வீட்டார்கள், இந்த ஜூலை மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல சாதகமான பதிலை தருவார்கள். அத்துடன் உங்களின் குலதெய்வ வழிபாட்டை குறையற்றமுறையில் மேற்கொண்டால், திருமண முயற்சி நல்லதொரு பலனை வழங்கும்.

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற பெண்களில் பலருக்கு முழு ஊதியம்  கிடைத்திருக்காது. ஆனால் இந்த மாதம் முதல் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிட்டும். புதிய பொறுப்புகளும் சிலருக்கு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்ற கூட்டாளிகளை தெரிவு செய்துகொண்டு, வங்கி கடன் பெற்று தொழில் முனைவோராக  உருவாகலாம். உயரலாம்.

அதிர்ஷ்டம் மேலும் அதிகரிக்க வெள்ளி கிழமைகளில் லவங்கப்பட்டை சேர்த்த உணவை சாப்பிடலாம். அத்துடன் வசதி வாய்ப்பு இருந்தால் வெள்ளி கோப்பை, வெள்ளி தட்டு, வெள்ளி ஸ்பூன் ஆகியவற்றின் மூலம் சாப்பிட்டால் மறைமுக அதிர்ஷ்டம் கூடும். நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தரிசிக்க செல்லும் பொழுது வெண்தாமரை மலர்களை அர்ச்சிக்க கொடுத்தால்.. உங்களது பர்சில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். வேறு சிலர் கருடனின் புகைப்படத்தை வைத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பெண்களை பொறுத்தவரை தாய்மை அடையும் முன்பு வரை அவர்களுக்கு சுக்கிரனின் அம்சம் இருக்கும். தாய்மை அடைந்த பிறகுதான் அவர்களுக்கு சந்திரனின் அம்சம் உருவாகும். இதனால் திருமணமாகி கணவன் மனைவியாக இருக்கும் தருணங்களில் காதல் உணர்வும், தாம்பத்திய உணர்வும் மேலோங்கும். உங்களுடைய துணையிடமிருந்து அதிகமாக எதிர்பார்ப்பு இருக்கும். அத்தகைய தருணங்களில் உங்களது துணை1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களாகவோ அல்லது கூட்டுத் தொகை இந்த எண்களில் இருந்தாலோ..குடும்ப இல்லற வாழ்க்கை சிறப்பாக நீடிக்கும்.

உங்களில் சிலருக்கு மற்றவர்களை ஈர்க்கும் காந்தமாக கண்கள் திகழும். அதே தருணத்தில் இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு பாடும் திறமை, பாரம்பரிய நாட்டியங்கள் மீதான ஈடுபாடு போன்றவை இருப்பதால் பண்பலை மற்றும் வானொலிகளில் தொகுப்பாளினியாகவும், ஊடக துறை மற்றும் கலைத்துறையில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவராகவும் திகழ்வீர்கள். சிலருக்கு நடிகையாவதற்கான வாய்ப்பும் வாழ்வதாரமாகக் கிட்டும். இதில் ஏதேனும் உங்களுக்கு சாதகமான அம்சம் ஏற்பட வேண்டும் என்றால், உங்களுடைய அத்தை என்ற உறவை சீராக பராமரிக்க வேண்டும். அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால்.. அவர்களை அழைத்துக்கொண்டு ஒரு முறை குல தெய்வ வழிபாட்டிற்கு சென்று திரும்பினால், உங்களுக்கு சாதகமாக நிலைமை மாறும்.

இந்த திகதியில் பிறந்தவர்கள் தங்களது எண்ணங்கள் முழுவதுமாக ஈடேற வேண்டும் என்றால், உங்களது உழைப்பில் ஈட்டும் வருமானத்தில் 10வீதத்தை தானமாக கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மகாலட்சுமி ஆலயங்களுக்கோ அல்லது உங்களது தோழிகளின் திருமணம் சார்ந்த செலவுகளுக்கோ அல்லது உங்களது தோழிகள் குல தெய்வ வழிபாட்டிற்காக செல்லும்பொழுது பயண வழி செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றோ அல்லது உங்களுடைய வீடு அல்லது பணிபுரியும் நிறுவனம் அருகே உள்ள ஏழை எளியவர்களுக்கு இனிப்பு பண்டத்தை வாங்குவதற்கோ பயன்படுத்தலாம். இதனை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் பொழுது, நீங்கள் நினைத்த காரியம் எந்தவித தடையுமின்றி நிறைவேற்றுவதை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

-அஸ்வினி பிரியன்.

You must be logged in to post a comment Login