General

ஆளுமை

By  | 

ஒவ்வொரு மனிதனிடத்திலும் இயற்கையாக காணப்படும் உடலியல், உளவியல் சார்ந்த பலமே ஆளுமை எனப்படுகிறது.
இதனை சிலர் அவர்களுடைய பரம்பரையில் இருந்துதான் வருகிறது என்று சொன்னாலும் நவீன உலகம் அவர் வாழும் சூழலினுடைய தாக்கத்தினாலேயே ஏற்படுவது என்று கூறுகிறது.
பொதுவாக ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் காணப்படுகின்ற பலமே ஆளுமையாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒருவரது தோற்றம், உடல்வாகு, மொழித்தேர்ச்சி, கல்வி, அரசியல், பொருளாதாரம் என்பன ஆளுமைகளை கொண்டுவரும் என நினைக்கிறோம்.
சில நிறுவன தலைவர்களை நாம் புகழ்வதுண்டு. அடக்கமான நிர்வாகம், யாருக்கும் பயமில்லாத தன்மை போன்ற நடவடிக்கைகளை கொண்டு அவர் ஆளுமையான தலைவர் என்கிறோம். இன்னும் சிலர், மற்றையவர்கள் மீதான பயம், கவர்ச்சியற்ற தோற்றம் என்பவற்றையெல்லாம் கொண்டு இவர் ஆளுமையற்ற தலைவர் என்கிறோம்.


இன்னும் பலர் தமது உடல் தோற்றம், செல்வ நிலை, கல்வித்தரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தம்மைத்தாமே தாழ்த்திக்கொண்டு நொந்துகொள்வர்.
இவைதான் ஆளுமைக்கான விளக்கமா என்று பார்த்தால், இல்லவேயில்லை. ஆளுமை எனப்படுவது தனி உடலோடு சம்பந்தப்படாமல் உடல், உளம் என்பவற்றோடு இணைந்துதான் காணப்படுகிறது. உடல்வாகு, கல்வி, மொழித்தேர்ச்சி, பொருளாதாரம், சிந்தனை, தீர்க்கமான நடவடிக்கை, ஏனையவருடனான அணுகல்முறை போன்றவை தான் ஒரு தனிமனிதனின் ஆளுமையை தீர்மானிக்கக்கூடிய சக்திகளாக இருக்கின்றன.
எவ்வித பொருளாதார வசதியுமின்றி ரயில் வண்டிகளில் பத்திரிகை விற்றுத்திரிந்த ஒரு பையனான அப்துல் கலாமால் நாட்டை ஆள முடிகிறது என்றால் அவரிடமிருந்த ஆளுமை என்ன? சாதாரண மனிதனாகவிருந்து வீதி வெளிச்சங்களில் படித்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவையே ஆண்டார் என்றால், அவரிடமிருந்த ஆளுமை தான் என்ன? நாமும் நமக்குள் தேடிப் பார்ப்போம்.
என்னிடம் அழகில்லை, அந்தஸ்து இல்லை, பணம் இல்லை, கல்வி இல்லை, குடும்ப பின்னணி இல்லை என நம்மிடம் ஆளுமையே இல்லை என ஒதுங்கிவிடக்கூடாது. எம்மிடம் உள்ளதைக்கொண்டு உயர்வாக நோக்க வேண்டும். எம்மிடமுள்ள தாழ்வு மனப்பான்மையே ஆளுமையை அழிக்கும் விஷ கிருமிகளாகும்.
அவைகள் தான் காலப்போக்கில், கல்வி, பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களையும் சிதைத்து மனிதனை அழிவுக்கு கொண்டு சேர்ப்பவை. ஆகவே, அக்குணத்தை தூர தள்ளிவிட்டு ஆளுமையின் உயர்நிலையை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.
பொதுவாக இறைவன் மனிதனை படைக்கும்போதே அவனுக்கு திறனையும் படைத்திருக்கிறான். அவை மறைந்திருந்து, தகுந்த சந்தர்ப்பத்தின் போது வெளிப்படுத்தப்படுகின்றன.
சிலருக்கு அடிக்கடி கவிதை ஊற்றெடுக்கும். அப்படி அவர் உணரும்போது கவிதை எழுத வேண்டும். அது நிச்சயமாக பிற்காலத்தில் வளர்ந்து உயிர்பெற்றுச் செல்லும். இப்படியாகத்தான் கவிக்கோ அப்துல் ரஹ்மான், கவியரசர் கண்ணதாசன், கவிப்பேரரசு வைரமுத்து போன்றோர் கவித்துவத்தில் இன்று உயர்ந்து விளங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
எம்மிடம் எவ்வித திறமைகளும் இல்லை என முடிவெடுத்து மூலையில் முடங்கிக் கிடப்பது கோழைத்தனம். எம்மை நாமே அடிக்கடி விசாரித்துக்கொள்ள வேண்டும். சிலர் திறமைகள் இருந்தும் வெளிக்கொண்டு வர கூச்சப்படுவார்கள். இப்படியானவர்களுக்கே பாடசாலைகள் மாணவர் மன்றம், கலைவிழா என ஏராளமான களங்களை உருவாக்கி கொடுக்கிறது. அதனை நாம் முறையாக பயன்படுத்தி, எம் திறமைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு, சமூகத்தின் முன் கொண்டு வரப்படுமாயின், தாழ்வு மனப்பாங்கு என்ற எண்ணமே அடியோடு அழிந்துவிடும். ‘யாரிடமும் தைரியமாக, தலை நிமிர்ந்து பேசலாம்” என்ற தைரியம் பிறக்கும். வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படும்.
சிலர் உயர்ந்த அந்தஸ்துள்ளவர்கள் சபையில் கூடுவதற்கு கூச்சப்படுவார்கள். சபையில் உள்ளோர் எம்மை ஏற்றுக்கொள்வார்களா? தமது கருத்து பிழையாகிவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு வரும். தான் வசதியற்றவர், குறைவாக படித்தவர் என எண்ணி அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிடுவர். இது ஆளுமையின் முக்கிய எதிரிகளிலொன்றாகும். நல்ல கருத்துகள், நல்ல சிந்தனைகள், அன்பு, பேச்சு, கருத்து பரிமாற்ற முறை போன்றவை நம்மை ஆளுமையுடையோராக வெளிக்காட்டுகிறது.
உங்கள் பாடசாலை நாட்களை நினைவுகூர்ந்து பாருங்கள். சில மாணவர்கள் இன்றும் கூட பேசப்படுவார்கள். அவர்களின் பரீட்சை பெறுபேறுகள், கல்வி நிலை, அந்தஸ்து என எதுவும் சொல்லுமளவுக்கு இருக்காது. ஆனால், அவர்களிடம் இருக்கின்ற ஆற்றல்களினால் பாடசாலை மத்தியில் பிரபல்யமாக இருப்பார்கள். ஆசிரியர்கள், அதிபர்கள் கூட அவர்களை ஞாபகம் வைத்திருப்பார்கள்.
சிறந்த கவிஞன், நல்ல பாடகன், சிறந்த விளையாட்டு வீரன் என அவர்களது அடையாளங்கள் காணப்படும். இவர்கள் விவேகமான மாணவர்களை விடவும் உயர் அந்தஸ்துடைய மாணவர்களை விடவும் அதிகம் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.
மாணவர்களை பொறுத்தவரையில், பாடசாலைகளில் அவர்களின் ஆளுமை விருத்திக்கான களங்கள் அமைத்து கொடுக்கப்பட்டு சிறந்த பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் வெவ்வேறான ஆளுமைத்திறன்கள் இயற்கையாகவே இருக்கும். அதை வெளிக்கொண்டுவர அவன் சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டு இருப்பான். அதனை பாடசாலை உருவாக்கிக் கொடுக்கும்போது மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் தனது ஆளுமை திறன்களை வெளிக்கொண்டுவர முயற்சிப்பான். அவ்வாறானவர்கள் மாணவர்கள் மத்தியில் பிரபல்யமடைவார்கள். இதனால் மேலும் ஆர்வத்துடன் செயற்பட முயற்சிப்பார்கள். இவை எக்காலத்திலும் சமூகத்தில் முதன்மை நிலையை அடைய வழிசமைத்துக்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

ஏ.எல். இம்தாத் அஹமட்,
சாய்ந்தமருது.

You must be logged in to post a comment Login