General

ஆழ்கடல் பகுதியில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

By  | 

டல் படுக்கையில் இதுவரை இல்லாத அளவு அதிகமாக பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தாலி நாட்டிற்கு அருகாமையில் இருக்கும் மத்திய தரைக்கடலின் அடிப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட படிவுகளில் இந்த மாசுபாடு இருப்பதை கண்டறியமுடிந்தது. மான்செஸ்டர் பல்கலைகழகத்தின் தலைமையில் அறிவியலாளர்கள் ஆய்வு செய்ததில் ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பில் 1.9 மில்லியன் பிளாஸ்டிக் துகள்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டன.

பெருங்கடலின்நீரோட்டத்தில் 1 மி.மீ குறைவான அளவுடைய இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கடலின் அடிமட்டத்தில் குவிந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த ஆராய்ச்சி குழுவின் தலைவரான டாக்டர் இயன் கேன் கூறுகையில்…

நீருக்கு அடியில் இந்த நீரோட்டங்கள் மணல் திட்டுக்கள் போன்ற அமைப்பை உண்டாக்கி உள்ளன. அவை பத்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் நீளமும், நூற்றுக்கணக்கான மீட்டர்கள் உயரமும் கொண்டிருக்கலாம். அவை பூமியில் உள்ள மிகப்பெரிய வண்டல் குவியல்களில் ஒன்றாகும். மிகச் சிறந்த மண்ணால் ஆன அந்த சேற்றுப்படிவின் உள்ளே இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கக்கூடும் என்று நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் முதல் 1.2 கோடி டன் வரையான பிளாஸ்டிக் துகள்கள் கடலில் கலக்கின்றன.

மனிதர்கள் மூலமாக வரும் குப்பை மற்றும் கழிவுகளுடன் பெரும்பாலும் இது போன்ற கழிவுகள் ஆறுகளின் வழியே கொண்டுவரப்படுகின்றன. கடற்கரையிலும், கடற்பரப்பின் மீதும் படிந்துள்ள கழிவுகள் மட்டுமே இதுவரை நாம் காண முடிந்தது. ஆனால், அவை கடலில் கலந்துள்ள மொத்த பிளாஸ்டிக்குகளில் வெறும் ஒரு வீதமே ஆகும். எனவே, மீதி 99% கழிவுகள் கடலில் எங்கே உள்ளன என்பது அறியப்படாமல் உள்ளது. கடல் மட்டத்தில் உள்ள சில கழிவுகளை கடல்வாழ் உயிரினங்கள் உணவாக உண்ணும். அதில் எஞ்சிய பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் கடலின் அடித்தளத்தை அடைந்திருக்கும். ஆழ்கடல் அகழிகள் மற்றும் கடல் பள்ளத்தாக்குகளில் காணப்படும் வண்டல்களில் அதிக அளவு நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கக்கூடும்.

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் காட்டப்படும் அதே தீவிரமும், முக்கியத்துவமும் கடலில் கலக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுப்பதில் காட்டப்பட வேண்டும் என்று இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற மற்றொரு ஆராய்ச்சியாளரான ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர் எல்டா மிரமோன்ட்ஸ் வலியுறுத்தினார்.

You must be logged in to post a comment Login