Cinema

இசை ஆல்பம் வெளியிடும் கௌதம் மேனன்

By  | 

இயக்குனர் கௌதம் மேனன் கொரோனா கால ஊரடங்கின்போது ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படத்தில் த்ரிஷா, சிம்பு ஆகிய இருவரும் நடித்தனர். இது மக்களால் ரசிக்கவும் பட்டது, விமர்சிக்கவும்பட்டது.

இந்த நிலையில் ‘அடுத்து ஒரு சான்ஸ் கொடு’ என்ற இசை ஆல்பத்தை வெளியிடுகிறார். பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்க,  மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சதீஷ் நடனம் அமைத்துள்ளார்.

இதுகுறித்து கௌதம் மேனன் கூறியதாவது:
இப்பாடலின் மையம் என்பது காதல், நட்பு, இருவருக்கும் ஏற்படும் தவறான புரிதல் ஆகியவை தான். ஒருவன் தன் நண்பனை பற்றி நல்ல விசயங்களை ஒரு பெண்ணிடம் சொல்லப்போக,  அவள் அதனை இவனை பற்றியதாக தவறாக புரிந்து கொள்கிறாள். அவன் மிக  நகைச்சுவையான வகையில்  இதனை கையாள்கிறான்.

இப்பாடலின் முக்கிய அம்சமாக,  வெகு அற்புதமான நடிகர்கள் இப்பாடலில் பங்கு பெற்றிருந்தாலும்,  நம் கவனத்தை ஈர்ப்பது இப்பாடல் படமாக்கப்பட்ட இடமான மொட்டை மாடி தான். இந்த முழுப்பாடலும் எனது வீட்டு மொட்டை மாடியிலேயே படமாக்கப்பட்டது.

மொட்டை மாடி என்பது இந்த பொது முடக்க காலத்தில் அனைவரும் அதிக நேரம் செலவிடும் இடமாக மாறியிருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் இதனை வெகு நெருக்கமாக உணர்வார்கள். நடிகர்கள் தவிர்த்து மொத்தமாகவே 7 பேர் மட்டுமே எங்கள் குழுவில் பணியாற்றினர். நடிகர்கள் அனைவரும் மேக்கப்பே இல்லாமல் தாங்களே செய்து கொண்ட இயல்பான ஒப்பனையுடன் நடித்தார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் படப்பிடிப்பில் அனைவரும் முகக்கவசத்துடன், சமுக இடைவெளியை கடைப்பிடித்து மிகவும் சுத்தமான முறையில் அனைத்து விதிகளையும் பின்பற்றியே படம்பிடித்தோம். நடிகர்கள் மட்டுமே  கெமராவை பார்த்து நடிக்கும் போது மட்டும் முகக்கவசம் இன்றி நடித்தார்கள். பாடலின் டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதே போல் முழுப்பாடலை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்கிறார் கௌதம் மேனன்.

You must be logged in to post a comment Login