Articles

இணையம் இல்லா உலகம்

By  | 

இணையம் இல்லா உலகம் எப்படியிருக்கும் என்று கேட்டால் மிகவும் அமைதியாகவும் மனஅழுத்தம் இல்லாமலும் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதனை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. மனிதன்தான் தொழில்நுட்பத்தைக் கையாளவேண்டும். ஆனால், இதற்கு நேர் எதிராக தொழில்நுட்பம் மனிதனை கையாள்கிறது. காலையில் எழுந்ததும் தொலைபேசியை எடுத்து முகப்புத்தகத்தை திறந்து பார்த்தால்தான் பலருக்கு பொழுதே விடிகிறது.

அடுத்ததாக, வட்ஸ்அப் காலையில் எழுந்ததும் என்ன ஸ்டேட்டஸ் போடலாம் என்ற யோசனையுடன்தான் பாதிபேர் கண்விழிக்கின்றனர். படிப்பிற்காகக் கூட இவ்வளவு தூரம் சிந்தித்திருக்காது நமது மூளை. வீட்டில் உள்ளவர்களின் முகத்தைப் பார்த்து பேசக்கூட நேரம் இல்லாமல் அலையும் நமது சமுதாயம், குறுஞ்செய்தி அனுப்ப மட்டும் தனது முழுநேரத்தையும் செலவழிக்கின்றனர்.

சிலபேரின் வாழ்க்கை இந்த குறுஞ் செய்திகளுக்குள்ளேயே முடங்கிப் போய்விடுகிறது. தனது வாழ்க்கையை தொலைபேசிக்குள்ளேயே அடக்கிக் கொள்கின்றனர் இன்றைய சமுதாயத்தி னர். இளம் சந்ததியினர் மட்டுமின்றி வயதானவர்களும்கூட இந்தத் தொழில் நுட்பத்தையே அதிகம் கையாள ஆரம்பித்துவிட்டனர்.

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி ஒரு பக்கம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நமக்கு மிகவும் வசதியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் எமது வாழ்க்கையை வாழவிடாமல் செய்கின்றது என்றுகூட சொல்லலாம். இயந்திரங்களோடு சேர்ந்து மனிதனும் இயந்திரமாகிவிட்டான் என்றுகூட சொல்லலாம். நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதுகூட சிலபேருக்குத் தெரிவதில்லை. மனதில் உள்ள சோகமாக இருக்கட்டும் சந்தோஷமாக இருக்கட்டும் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால்தான் சிலபேருக்கு மகிழ்ச்சி. தனது இன்ப துன்பங்களை குடும்பத்தினரோடு பகிர்ந்து கொள்ளாது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதில் என்ன சந்தோஷம் வந்துவிடப்போகிறது. சிலபேருக்கு இந்த சமூக வலைத்தளம்தான் பாதி மனஅழுத்தத்தைக் கொண்டுவருகின்றது என்று கூட கூறலாம்.
குறிப்பாக பெண்களுக்கு, தமது புகைப்படங்களை சமூக வலைத் தளத்தில் பதிவிடுவர் பின்பு தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கி அவதிப்படுவர். தமது தேவைக்காக மட்டும் சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து தேவையே அதாக மாறி விடக்கூடாது. எதுவுமே அளவுடன் இருந் தால்தான் நல்லது.

இன்றைய சிறுபிள்ளைகளை எடுத்துக்கொண்டால் கூட ஏதேனும் கேட்டு பெற்றோரிடம் அடம்பிடிக்கும் பட்சத்தில் தனது கையிலிருக்கும் தொலை பேசியைக் கொடுத்து அவர்களின் கவனத்தை திசைதிருப்புகின்றனர். அந்தக் குழந்தையும் தொலைபேசியுடன் விளையாட ஆரம்பித்துவிடும். காலப் போக்கில் இதுவே வழமையாகிவிடும். ஆகவே சிறுவயது தொடங்கி பிள்ளைகளுக்கு தொழில்நுட்பத்தின் முக்கி யத்துவத்தின் அளவை சொல்லிக் கொடுக்கவேண்டும்.

ஸ்மார்ட்போன்கள் கையில் இருந்தால் தான் தற்காலத்தில் மதிப்பு என்றொரு விடயம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாகிவிட்டது. எனவே இது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. சிலர் உணவின்றிக்கூட இருந்துவிடுவர் ஆனால் தொலைபேசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. இணையம் இல்லாமல் இருந்த அக்காலத்தில் தொழில்நுட்பம் பாரியளவு வளர்ச்சியடைந்திராவிட்டாலும் மக்கள் மிகவும் சந்தோஷமாகவும் தங்களுக்குள் பேசி, சிரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுதல், ஒன்றாக அமர்ந்து உணவருந்துதல், அன்றைய நாளில் நடந்தவற்றையெல்லாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுதல் என்று மிகவும் சந்தோஷமாகவும் மன அழுத்தமின்றியும் வாழ்ந்தனர். உறவுகளுக்குள் ஒரு பிணைப்பு காணப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அந்த நிலை முற்று முழுதாக மாறிவிட்டதுதான் கவலைக்குரிய விடயம்.

தொழில்நுட்பத்தை நாம் நெருங்க நெருங்க உறவுகளிடமிருந்து தூரம் தள்ளிச் செல்கின்றோம். நவீன மயப்படுத்தப்பட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் எவ்வளவு சந்தோஷங்களை இழக்கிறோம் என்பது நமக்குப் புரிவதில்லை.
உயிரில்லா பொருள் மீது இவ்வளவு அன்பு செலுத்தும் நாம் உயிருள்ள உறவுகளுடன் பேசுவதற்கு தனது நேரத்தை செலவழிக்க விரும்புவதில்லை. இணையத்தை தனது சொந்தமாகவே நினைத்து அதனுடனே தனது காலத்தை கழிக்கின்றனர் சிலர்.

எனவே தேவையான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதுவும் சரியான விதத்தில் இணையத்தை பயன்படுத்துவோம்.

உயிரற்ற பொருளுடன் எந்நேரமும் உறவாடுவதை விடுத்து உயிருள்ள மனிதர்களுடனும் கொஞ்சம் நேரத்தை செலவழிப்போம்.

– து.சிந்துஜா

You must be logged in to post a comment Login