இந்தியர்களுக்கு உதவிய தலிபான்கள்: தப்பி வந்தோரின் ‘திக் திக்’ பயணம்

By  | 

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, 200 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பிஉள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் தரையிறங்கும் வரை என்ன நடக்குமோ என உயிரை கையில் பிடித்தபடியே மரண பீதியில் வந்து சேர்ந்துள்ள அவர்களுக்கு, தலிபான்கள் உதவியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். ஆப்கன் முழுதும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

தலிபான்கள் வேகமாக முன்னேறி வருவதை அறிந்த அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி அங்கிருந்து தப்பியுள்ளார்.தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் நாடு வந்ததையடுத்து அங்கிருந்து பலரும் வெளிநாட்டுக்கு தப்பிக்க முயன்றுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், துாதரக ஊழியர்கள் உட்பட 200 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.

காபூலில் இருந்து தப்பித்து வருவதற்குள் அவர்கள் மரண வேதனையை அனுபவித்துள்ளனர். தப்பி வந்தது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:

தலிபான்கள் காபூலை நெருங்கி வருவது தெரிந்ததும் அங்கிருந்து தப்பித்து நாடு திரும்புவதற்கு தயாரானோம். காபூலில் வெளிநாட்டு துாதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள நம் நாட்டின் துாதரகத்தில், துாதரக ஊழியர்கள் உட்பட 200 பேர் குவிந்தனர்.

காபூலை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன், 50க்கும் மேற்பட்டோர் விமானப் படை விமானம் வாயிலாக நாடு திரும்பினர். மீதமுள்ளவர்களை அழைத்துச் செல்வதற்காக விமானப் படை விமானம், காபூல் விமான நிலையத்தில் தயாராக இருந்தது. ஆனால், அங்கு செல்வதற்கு எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நம் துாதரகத்தை சுற்றிலும் கையில் நவீன துப்பாக்கிகளுடன் தலிபான்கள் இருந்தனர். கடந்த 16ஆம் திகதி காலையில், விமான நிலையம் செல்வதற்காக 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தயாராக இருந்தன.

ஆனால் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே, தலிபான் அமைப்பினருடன் துாதரக அதிகாரிகள் பேசினர். மத்திய அரசும் பல வகைகளில் முயற்சி எடுத்தது. இதையடுத்து இரவுக்கு பின்பே அங்கிருந்து வெளியேற தலிபான்கள் எங்களை அனுமதித்தனர். மேலும், எங்களுக்கு பாதுகாப்பாக தங்கள் வாகனங்களில் தலிபான்களும் விமான நிலையம் வரை வந்தனர். துாதரகத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள விமான நிலையத்தை அடைவதற்கு ஐந்து மணி நேரமானது. நாட்டில் இருந்து வெளியேற முயற்சிப்பவர்கள் சாலைகளில் குவிந்திருந்தனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்; கூச்சல், குழப்பமாக இருந்தது. செல்லும் வழியில் தலிபான்கள் நம்மைக் கொன்று விடுவரோ என்ற அச்சத்துடனேயே வாகனத்தில் சென்றோம். ஆனால் மிக சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்து, விமான நிலையத்துக்குள் செல்லும் வரை உடன் வந்தனர்.

மூன்று மணி நேரம்

விமான நிலையம் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு நம் விமானப் படை விமானம் தயாராக இருந்தும், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மூன்று மணி நேரம்வரை காத்திருக்க வேண்டியிருந்தது.இறுதியில், காபூலில் இருந்து புறப்பட்டு நம் மண்ணில் தரையிறங்கினோம். கடைசி வினாடி வரை ‘திக் திக்’ என மரண பயத்திலேயே இருந்தோம். இந்தியா தான் சொர்க்கம் என்பதை தற்போது உணர்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.காபூலில் இருந்து அழைத்து வரப்பட்ட 200 பேரில், ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ – திபெத் எல்லை பொலிஸ் படையினரும் அடங்குவர். இவர்கள், நம் துாதரக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுடன் அங்கு பணியமர்த்தப்பட்டிருந்த மாயா, ரூபி, பாபி ஆகிய மோப்ப நாய்களும் பத்திரமாக வந்து சேர்ந்துள்ளன.

You must be logged in to post a comment Login