Articles

இப்படியும் சிலர்…

By  | 

நாம் வாழ்க்கையில் பல மனிதர்களை கடந்து வந்திருப்போம். பல்வேறுபட்ட சுபாவங்களையும் நடவடிக்கைகளையும் உடையவர்களுடனேயே எமது வாழ்க்கை நகர்கிறது. அவர்களுள் சில பேரை பார்க்கும்பொழுது இப்படியும் யாராவது இருப்பார்களா என்று நாம் சிந்தித்திருக்கக்கூடும். ஆம், இவ்வாறானவர்களை எம் வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடந்துவந்திருப்போம்.
இதற்கு பலரை உதாரணம் காட்டலாம். ஒரு மரண வீட்டுக்குச் சென்றால், அங்கே பெரும்பாலானவர்கள் அழுதுகொண்டும், புலம்பிக்கொண்டும் இறந்தவரின் அருமை, பெருமைகளை பற்றி வந்தவர்களிடம் கூறிக்கொண்டும் இருப்பர். சிலர் வேதனையின் வெளிப்பாடாக கண்ணீர் வடிப்பர். இவ்வாறு இருக்கும்போது அந்த கூட்டத்துக்கு மத்தியில் இன்னும் சிலர்… ‘இங்கு எதற்காக வந்திருக்கிறோம்’ என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என எவ்வித உணர்ச்சியுமே இல்லாமல் அமர்ந்திருப்பர். எதற்காக இவர்கள் மரண வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என நாமே யோசிக்குமளவுக்கு அவர்களின் இருப்பு காணப்படும். அப்படிப்பட்டவர்களை, சுற்றி இருப்பவர்கள் வித்தியாசமானவர்களாக பார்ப்பது மட்டுமன்றி, சில சமயங்களில் அவர்கள் மனதுக்குள் திட்டுவதுமுண்டு.
மரண வீட்டில்கூட எவ்வித உணர்ச்சியும் இன்றி நன்றாக சிரித்து மகிழ்ச்சியாக இருப்பர். இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அடுத்ததாக, திருமண வீட்டை எடுத்துக்கொள்ளுங்கள்…


வீடே அலங்கரிக்கப்பட்டு விருந்தினர்களால் நிறையப்பெற்று, திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கும்போது எந்தவொரு வேலையையும் செய்யாமல், மாறாக, வேலை செய்பவர்களை குறை கூறிக்கொண்டு சிலர் இருப்பர். இன்னும் சிலரைப் பாருங்கள்… திருமண வீட்டுக்குரிய கலகலப்பே இல்லாமல் எதையோ பறிகொடுத்ததைப் போல் ‘உம்’மென்று இருப்பர். அவ்வாறானவர்களைப் பார்க்கும் மற்றவர்களுக்கு ஒருவித எரிச்சல் உணர்வு தோன்றும். இப்படியும் சிலர் இருக்கின்றனர்.
நிறைய பேர் கூடியிருக்கும் இடத்தில் கூட்டத்தினரிடையே வன்முறையைத் தூண்டிவிட்டு, தேவையற்ற சண்டை, சச்சரவுகளை இழுத்துவிடுவதில் சிலருக்கு அலாதி பிரியம். கூட்டத்தில் ஒரு கறுப்பு ஆடு என்று கூறுவார்களே… அதைப் போல்தான், அடுத்தவர் சண்டையைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு சிலர்.
ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்;டால், எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதை சகிக்கமுடியாத ஓரிருவர், அந்தக் குடும்பத்தினரிடத்தில் இல்லாததையும் பொல்லாததையும் கூறி, குடும்ப ஒற்றுமையை சீர்குலைத்து, நிம்மதியிழக்கச் செய்து, தனித்தீவாக்கிவிடுகின்றனர்.


இது ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை. பிரச்சினைகள் தானாக உருவாவதில்லை. யாரோ ஒருவரால் அல்லது சிலரால் உருவாக்கப்படுகின்றன. இப்படியும் சிலர்.
ஊர் பிரச்சினைகளுக்கெல்லாம் நியாயம் கூறும் ஒரு நபரால் தன் குடும்ப பிரச்சினையை தீர்க்க முடிவதில்லை…இப்படியும் சிலர்.
வீதியில் ஒருவர் காயப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையில், ஓடிவந்து அவரை காப்பாற்ற எண்ணாமல், உடனே பாதிக்கப்பட்டவரை புகைப்படமெடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றி நற்பெயர் வாங்குகின்றனர், சிலர்.
வெகு நாட்கள் கழித்து தன் உறவுகளை பார்க்கச் செல்லும் ஒருவருக்கு அங்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை, அவரை மதிக்கவில்லை என்றால், அதற்கு காரணம், அவர் கை நிறைய பணம் எடுத்துச் செல்லவில்லை என்றுதான் கருதவேண்டும். காசு இருந்தால்தான் ஒருவேளை உணவேனும் உண்ணக் கொடுக்கும், இப்படியும் சிலர்.
அத்தகையோர் மிருகங்களிடத்தில் காட்டும் அன்பைக்கூட மனிதர்களிடத்தில் காட்டுவதில்லை.
‘இப்படியுமா இருப்பார்கள்’ என சக மனிதனையே சிந்திக்க வைத்துவிடுகிறது, அந்த சில மனிதர்களின் போக்கு. மனிதர்கள் அனைவரும் குணத்தால் ஒரே மாதிரி படைக்கப்பட்டவர்கள் அல்லவே! இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

-து.சிந்துஜா

You must be logged in to post a comment Login