Articles

இருளுக்குள் மெல்லிய மலர்!

By  | 

கெமராக்கள் அறுவறுப்பு கொள்வதில்லை, ஆதங்கப்படுவதில்லை. அதனால் வரலாற்றில் எத்தனையோ மோசமான புகைப்படங்களை வெகு லாவகமாக வெளியிட்டிருக்கின்றன. அப்படியானதொரு புகைப்படத்தைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.
இது, எலும்பும் தோலுமாக பார்க்கவே விகாரமாக இருக்கும் ஒரு பெண்ணின் உருவம் என்பதை மட்டுமே உங்களால் யூகிக்கமுடிகிறது. படத்தின் பின்னணியில் உள்ள சோகத்தை சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே அறியமுடியும்.
பிளான்ச் மோன்னியர் – இதுதான் இவர் பெயர்.


பிரான்ஸ் நாட்டின் போய்ட்டியர் நகரில் 1849 மார்ச் முதலாம் திகதி பிறந்தார். பார்ப்பதற்கு அசல் தேவதையாய் இருப்பாள். அவ்வளவு அழகு! நவீனமான ஆடைகளை தேடி தெரிந்து அணிவதில் நிகரற்றவள்.
ஆடம்பர போர்வையிலும் முதலாளித்துவ அந்தஸ்திலும் உள்ள ஒரு குடும்பத்து இளவரசி.
1874ஆம் ஆண்டு அவளுக்கு 25 வயதானது. திருமணம் செய்ய ஏற்ற வயது. சற்றே வயோதிபரான வழக்கறிஞர் ஒருவரை ப்ளான்ச் காதலித்தாள். அவரும் நேசிக்க ஆரம்பித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
ஆனால், வீட்டில் அவளது அம்மா லூயிஸ் மகளின் விருப்பத்துக்கு எதிராக நின்றார். தனக்கு பிடிக்காத, தன் குடும்பத்துக்கு பொருத்தமில்லாதவர் என மகளை கண்டித்தார்.
எனினும், பிளான்ச் தன் முடிவில் உறுதியாக இருந்தாள். அவளை தன் வழிக்கு கொண்டுவர முடியாத லூயிஸ் தனக்குள் எழுந்த பணக்காரத்தனத்தாலும் கோபத்தாலும் பிளான்ச்சை வீட்டின் இருண்ட அறையொன்றில் வைத்து பூட்டினார்.
வெயிலோ வெளிச்சமோ இல்லாத அந்த அறையில் கட்டிலே கதியென இருந்தாள் பிளான்ச். சாப்பாடு, நீர் அறைக்குள் அனுப்பப்பட்டது. என்றாலும், அவற்றை உண்பதில் அவள் விரும்பவில்லை. எந்நேரமும் தன் காதலனின் நினைவு அவளை வாட்டியது.
உறவினர்களும் நண்பர்களும் பிளான்ச் எங்கு சென்றாள், எங்கிருக்கிறாள் என தெரியாமல் குழப்பமுற்றனர்.
இந்நிலையில் பிளான்ச் விரும்பிய வழக்கறிஞர் 1885ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார். அவர் இறந்த செய்திகூட பிளான்சுக்கு தெரியாது.
அந்த இருட்டு அறைக்குள்ளேயே 25 வருடங்களை கடத்திவிட்டாள்.
வெளியே, அவளது அம்மாவும் சகோதரரும் சந்தேகத்துக்கு இடமின்றி சுற்றித் திரிந்தனர்.
1901 மே 23 அன்று போய்ட்டியர் காவல் நிலையத்துக்கு, இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிடப்படாத கடிதமொன்று வந்திருந்தது.
கடிதத்தை மூலமாக வைத்து காவல்துறையினர் விசாரிக்க ஆரம்பித்தனர்.
கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வீட்டை கண்டுபிடித்தனர். அவர்கள் வீட்டுக்கு வாசலுக்கு சென்றனர். சுற்றிலும் முற்றிலும் பார்த்தனர். எந்த சத்தமும் இல்லை. கதவை தட்டினர். பதில் இல்லை.
உள்ளே ஏதோ அசையும் சத்தம் கேட்டது. திரைச்சீலைகள் அசைந்தன. யாரோ எட்டிப் பார்த்தது போல் தெரிந்தது.
பொலிஸார் உள்ளே நுழைந்தனர். யாரேனும் அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளாரா என ஒவ்வோர் அறையாக தேடினர்.
அவர்கள் அந்த அறையின் கதவை திறந்தனர். அப்போது எலும்புக்கூடு போன்ற உருவமொன்றை பார்த்தனர். அவர் பிளான்ச்தான்.
அப்போது அவளுக்கு 50 வயது. 25 ஆண்டுகளாக வெயிலோ வெளிச்சமோ படாமல், உடம்பில் சொட்டு தண்ணீர் படாமல் (குளிக்காமல்), உணவு, தண்ணீர் என எதையும் சரிவர உட்கொள்ளாமல், மிகவும் மெலிந்து கிடந்தாள்.
முழு நிர்வாணமாக இருந்தவள் தன் உடம்பையும் முகத்தையும் கட்டில் போர்வைக்குள் மறைத்துக்கொண்டாள். அவளுடைய மொத்த எடையே 25 கிலோகிராமாகத்தான் இருந்தது.
சூரிய ஒளி படும் உணர்வை கூட அவளால் தாங்கமுடியவில்லை.
அறையெங்கும் தூசி படிந்திருந்தன. அவள் படுத்திருந்த மெத்தை அழுகிய வைக்கோலினால் ஆனதாக இருந்தது. தான் கழித்த மலத்தின் மீதே படுத்து பிரண்டுபோயிருந்தாள்.
உணவுகள் சிந்திக்கிடந்தன. உணவு கழிவுகளும் ஆங்காங்கே கொட்டிக்கிடந்தன. அறை முழுதும் சகிக்கமுடியாத துர்நாற்றம்.
காவல்துறையினரை பார்த்து அவள் பயந்துபோனாள்.
அந்த கொடுமையான சூழலிலிருந்து பொலிஸார் பிளான்ச்சை மீட்டு, ஹோட்டல் டியு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிளான்ச்சை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவள் இறக்கும் தருவாயில் இருப்பதாக தெரிவித்தனர்.
25 ஆண்டுகளுக்கு பின் அவள் குளித்தாள். தாதியர் அவளை நீராட்டினர். அவர்களின் பணிவிடைகளுக்கு பிளான்ச் அமைதியாக ஒத்துழைப்பு கொடுத்தாள்.
அப்போதுதான் குளியலின் அருமையையும் சுத்தத்தின் மதிப்பையும் பிளான்ச் உணர்ந்தாள்.
பொலிஸாருக்கும் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் மனதார நன்றி கூறினாள். அதேநேரம் அவள் மனநிலை பாதிக்கப்பட்டவளாகவும் இருந்தாள்.
இது, இவள் தானாக உருவாக்கிக்கொண்ட நிலையல்ல. இதற்குப் பின்னால் குடும்பத்தவர்கள் இருந்திருக்கவேண்டும் என சந்தேகித்தனர்.
பிளான்ச் மோன்னியரின் நிலைக்கு காரணமான அவளது அம்மாவையும் சகோதரரையும் பொலிஸார் கைது செய்தனர். இருவருமே குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
சிறை சென்ற 15 நாட்களிலேயே மூப்பு காரணமாக பிளான்ச்சின் தாயார் மரணமடைந்தார்.
சகோதரர் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு, குற்றத்துக்கு தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என எப்படியோ முறையிட்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டார். காரணம், அவர் ஒரு வழக்கறிஞர். சட்டத்தை கையாளும் நுட்பம் தெரிந்தவர்.
பிளான்ச் மருத்துவமனையில் துளித்துளியாக உடல எடை தேறிவந்தாள். எனினும், மிகுந்த மன உளைச்சல் கொண்டிருந்தாள்.
உயிரோடிருந்து உறவென்று சொல்ல தாயில்லை. சகோதரன் இருந்தும் பயனில்லை. ஆதரிக்க யாருமில்லை.
வாழ்க்கை முழுதும் கைகோர்த்து நடக்க காதலனும் இல்லை….
மனவெளிகள் நசுக்கப்பட்டு மரணத்தை தொட்டாள் பிளான்ச் மோன்னியர்… 1913இல்!
இங்கே அவளின் இருவிதமான புகைப்படங்களை பாருங்கள்… இரண்டும் எத்தனை வித்தியாசங்கள்!

You must be logged in to post a comment Login