Health

இளம் தம்பதியினர் கருவுறுதலை ஏன் திட்டமிட வேண்டும்?

By  | 

திருமதி உஷா தோத்தாரி

இன்றைய திகதியில் திருமணத்திற்குப் பின்னர் தம்பதிகள் இல்லற வாழ்க்கையை தொடங்கினாலும், குழந்தை பெறுவதற்கான காலகட்டத்தை மருத்துவரின் உதவியுடன் திட்டமிடவேண்டும். ஏனெனில் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் இதனை பின்பற்ற வேண்டும் என்று மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்நிலையில் பல பெண்களுக்கு ஏன் திட்டமிட வேண்டும்? என்பது குறித்து பல சந்தேகங்கள் இருக்கும். அதனை களைவதற்காக மகப்பேறு மருத்துவ நிபுணர் திருமதி உஷா தோத்தாரி அவர்களிடம் விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொண்டோம். ‘

அவர் அளித்த விளக்கம் இதோ…

இன்றைய திகதியில் பெண்கள் திருமணமான பிறகு தங்கள் கருவுறும் தருணத்திற்கு முன்னர் மகப்பேறு மருத்துவ நிபுணர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனைகளை பெறுகிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு அம்சம். ஏனெனில் கருவுறுதலுக்கு வயது, உடல் எடை, குடும்ப பாரம்பரிய மருத்துவ வரலாறு, தடுப்பூசி போன்றவை முக்கியத்துவம் பெறுகிறது.

வயது
பெரும்பாலும் பெண்கள் தங்களின் 20 வயதிலிருந்து, முப்பது வயதுவரை கர்ப்பம் தரிப்பதை சரியான வயது மற்றும் சரியான தருணம் என வலியுறுத்துகிறார்கள். 20 வயது கீழ் கர்ப்பம் தரிக்கும் பெண்களை teenage pregnancy என்றும், 35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் கருத்தரிப்பதை elderly pregnancy என்றும் குறிப்பிடுகிறோம். இந்த இரண்டு நேரெதிர் வயதுகளில் பெண்கள் கருத்தரித்தால் பேறுகாலம் மற்றும் பிரசவ தருணங்களில் சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பதின்ம வயது பெண்கள் கருவுறும்போது அவர்களுக்கு போலிக் அமில சத்து குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, கால்சிய சத்து குறைபாடு.. போன்ற குறைபாடுகள் இருக்கக்கூடும். இதன் காரணமாக இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும், குறைமாத பிரசவமாகவும் நிகழும். அதே தருணத்தில் பிரசவத்திற்கு பிந்தைய மன நிலையில் இவர்களுக்கு தடுமாற்றம் ஏற்படும். இவர்கள் கரு தரிப்பதற்கான மனமுதிர்ச்சி பெற்றிருக்காததால், இவர்கள் உளவியல் சிக்கலுக்குள்ளாகிறார்கள். அத்துடன் இவர்களுக்கு பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள்.

அதேபோல் 35 வயது மேல் உள்ள பெண்களுக்கு பெண்கள் கருத்தரிக்கும் பொழுது அவர்களுக்கு தொடர் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. பேறுகாலத்தின் போது ரத்த அழுத்த பாதிப்பு, கர்ப்பகால சர்க்கரை நோய், மரபியல் குறைபாடுகள், மரபணு குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியக்கூறு போன்றவை ஏற்படும். அதனால் பெண்கள் தங்களுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் கர்ப்பம் தரிப்பதற்கான ஏற்ற வயதாக கருதி, அந்த வயதிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

உடல் எடை
இதனைத் தொடர்ந்து பெண்கள் தங்களின் உடல் எடைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உங்களுடைய உடல் எடை உலக சுகாதார ஸ்தாபனம் நிர்ணயித்திருக்கும் உடல் எடையை விட 20 முதல் 25 கிலோவிற்குள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பாக மகப்பேறு மருத்துவ நிபுணர் பரிந்துரைக்கும் உடல் எடையை பராமரிக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் கருவுறும் போது தான் ஏராளமான சுகவீனங்களை வராமல் தடுக்க இயலும். சில பெண்களுக்கு இயல்பான உடல் எடையை விட குறைவாகவும், சில பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உடல் எடையைவிட கூடுதலாகவும் இருக்கும். இவர்கள் கருவுறுதலை மருத்துவர்கள் underweight pregnancy மற்றும் overweight pregnancy என்று வரையறுப்பார்கள். Underweight pregnancy தருணங்களில் போது பெண்களுக்கு அனைத்து வகையின தான ஊட்டசத்து குறைபாடு இருக்கும். இவர்களுக்கு குறைமாத பிரசவம், எடை குறைவான குழந்தை மற்றும் சத்திர சிகிச்சை செய்து குழந்தை பிரசவம் போன்றவை நிகழும்.

அதேபோல் அதிக எடையுள்ள பெண்கள் கருவுறும் காலத்தின்போது அவர்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு, சர்க்கரை நோய், பிறக்கும் குழந்தையின் எடை அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்து பிரசவம் மேற்கொள்ளும் தருணங்களிலும் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படக்கூடும். அதே தருணத்தில் உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் ரத்த உறைதல் பிரச்சனையை எதிர்கொள்ள கூடும். இத்தகைய சிக்கல்களை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், பெண்கள் கருவுறுதலுக்கு முன்னர் இருந்தே தங்களின் உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

இன்றைய திகதியில் பெண்கள் திருமணமான பிறகு தங்கள் கருவுறும் தருணத்திற்கு முன்னர் மகப்பேறு மருத்துவ நிபுணர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனைகளை பெறுகிறார்கள் இது வரவேற்கத்தக்க ஒரு அம்சம். ஏனெனில் கருவுறுதலுக்கு வயது, உடல் எடை, குடும்ப பாரம்பரிய மருத்துவ வரலாறு, தடுப்பூசி போன்றவை முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த வாரம் வயது குறித்தும், உடல் எடை குறித்தும் தெரிந்துகொண்டோம். இந்த வாரம் மருத்துவ ஆலோசனை, போலிக் அமில சத்து, தடுப்பூசி குறித்து தெரிந்து கொள்வோம்.

மருத்துவ ஆலோசனை
சில பெண்கள் திருமணத்திற்கு முன் வலிப்பு நோய், தைரொய்ட் பிரச்சனை போன்ற சில பிரச்சனைகளுக்கான மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொண்டிருப்பீர்கள். இத்தகைய பெண்கள் கர்ப்பம் தரிப்பதை திட்டமிடும்போது இதை மருத்துவரிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில் வலிப்பு நோய்க்காக மருந்து எடுத்துக் கொள்ளும் பெண்கள், கருவுறும் பொழுது சில மருந்துகளை நீங்கள் எடுத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அவை எதிர்பாராத பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக இத்தகைய பாதிப்புள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதை திட்டமிடும்போது மகப்பேறு மருத்துவ நிபுணர்களுடன் மட்டுமல்லாமல் நரம்பியல் மருத்துவர்களிடமும் கட்டாயம் ஆலோசனையை பெறவேண்டும்.

இன்றைய திகதியில் பத்தில் ஒரு பெண்களுக்கு தைரொய்ட் பிரச்சனை இருக்கிறது. இவர்கள் கருத்தரித்திருக்கும் தருணங்களில், வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பயத்தில் தைரொய்ட்டிற்கான மருந்தை எடுக்க மறுத்து விடுகிறார்கள். இது தவறு. நீங்கள் தைரொய்ட் கோளாறுகளுக்காக எடுக்கும் மருந்துகளால் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கு எந்த ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படாது.

ஃபோலிக் அமில சத்து
கருவுற்றிருக்கும் பெண்கள் ஆரோக்கியமான சத்தான உணவை சாப்பிட்டாலும், அதிலிருந்து 100 முதல் 150 மைக்ரோ கிராம் அளவிற்குத்தான் ஃபோலிக் அமில சத்தை உடல் உட்கிரகிக்கும். ஆனால் நீங்கள் கருத்தரித்திருக்கும் காலங்களில் 400 மைக்ரோ கிராம் அளவிற்கு ஃபோலிக் அமில சத்து அவசியமாகிறது. நீங்கள் கருத்தரிப்பதை திட்டமிடும்போது, உங்களில் ஃபோலிக் அமில சத்து 400 மைக்ரோ கிராம் அளவிற்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இத்தகைய ஃபோலிக் அமில சத்து அதிக அளவில் இருக்கும்பொழுது தான் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நரம்பு குழாய் பிரச்சனை ஏதுமில்லாமல் பிறக்கும். அதனால் பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு ஒரு மாதம் முன்னரே ஃபோலிக் அமில சத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்க வேண்டும். கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் வரை இந்த ஃபோலிக் அமில சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தடுப்பூசி
பெண்கள் பொதுவாக திருமணத்திற்கு முன்னரே கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பு ஊசியையும், ரூபெல்லா நோய் தடுப்பு ஊசியையும் போட்டுக்கொள்ள வேண்டும். செர்விக்ஸ் கேன்சர் நோய் தடுப்பதற்கான தடுப்பூசி பெண்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னரே போட்டுக்கொள்வது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் ஹெச் பி வி வைரஸ் மூலம் பரவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முன்கூட்டியே தடுக்க இயலும். இதனைத் தொடர்ந்து ரூபெல்லா தடுப்பூசி அதாவது மணல்வாரி அம்மை நோய்க்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும். நீங்கள் கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் எதிர்பாராதவிதமாக மணல்வாரி அம்மை நோயால் பாதிக்கப்பட்டால்… வயிற்றில் இருக்கும் சிசு பல்வேறு குறைபாடுகளுடன் பிறப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம். பல தருணங்களில் இதன் காரணமாகவே மகப்பேறு மருத்துவர்கள் அந்த சிசுவை அகற்றும்படி பரிந்துரை செய்வார்கள். அதனால் தவறாமல் ரூபெல்லா தடுப்பூசியை போட்டுக் கொள்ளவேண்டும். அதே தருணத்தில் நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு மாதம் வரை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூன்று மாதம் வரை இடைவெளி இருக்க வேண்டும். எனவே திருமணமான இளம் தம்பதிகள் குறிப்பாக இளம்பெண்கள் கருவுறுதலை முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும். திட்டமிடுவோம். ஆரோக்கியமான வாரிசை ஈன்றெடுப்போம்.

சந்திப்பு: ராணிதாசன்.

You must be logged in to post a comment Login