Love

உங்களுக்கு நீங்களே காதல் கடிதம் எழுதுங்கள்!

By  | 

பெப்ரவரி மாதத்தில் எத்தனை விசேட தினங்கள் வந்தாலும் கூட பலரது நினைவிலும் நிற்பது இந்த பெப்ரவரி 14 காதலர் தினமே.
ஒரு காலத்தில் காதல் என்ற வார்த்தையை சொல்லுவதே தவறாக பார்க்கப்பட்டது. கணவன் – மனைவி கூட உரிய இடத்தில் மட்டுமே பேசிக் கொண்டனர். காதல் என்ற வார்த்தைக்கே வாய்ப்பில்லை என்றாலும் காதல் வாழ்ந்தது.
அன்று காதலுக்கு சாதி அந்தஸ்து தடையாக இருந்தபோதிலும், அதையும் தாண்டி காதல் ~தீ| பற்றத்தான் செய்தது.
சில காதல்கள் ஒளி பெற்றன. சில, எரியூட்டப்பட்டு சாம்பலாயின. சில கல்லறையில் மட்டுமே சங்கமமாயின.
இப்படி காதலில் எதிர்ப்புகளும் ஏற்புகளும் இருந்தபோதிலும் காதல் காணாமல் போகவில்லை.
அது தலைமுறைக்கு தலைமுறை தலையில் சூடப்படும் கிரீடமாய் ஒளிரத்தான் செய்தது.
சரி, இன்றைய காதலர்கள், காதல்… இவற்றை பற்றி பார்ப்போமேயானால்,
உலக வரலாற்றில் இறுதியாக காதல் கடிதம் எழுதியதும், அதனை மறைத்து வைத்து படித்ததும், கடிதங்களை சேர்த்து வைத்ததும் 90களின் இளசுகள்தான் என்பது மறுப்பதற்கில்லை.
அதன் பின்னரான தொழில்நுட்ப வளர்ச்சி, கைப்பேசி வருகை, சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பன கடிதம், வாழ்த்து அட்டை என்பவற்றை முடக்கிப் போட்டது.
காதலி வரும் பாதையில் நண்பர்களோடு நின்ற காலம் போய், வட்ஸ் அப், வைபர், ஃபேஸ்புக் என காதலிக்காக காத்து நிற்கும் காலமாக மாறிவிட்டது.
இந்நிலையில் கடந்த 2019 வரையில் பார்க், பீச், திரையரங்கு என சந்தித்துக்கொண்டவர்கள் கொவிட் 19க்கு பின்னர் ~கைப்பேசி போதும் காதல் செய்ய| என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.
காதல் என்பது மிக அழகானதோர் அன்பின் நிலை. எனினும், தாயும் சேயும் போல இது ஓர் இடத்தில் இராது. ~இது|, பின் இதைவிட ~அது| நன்று என்ற தெரிவு மாறுவதாலேயே காதல் புனிதம் இழந்து போகிறது.
அன்றைய காலத்தில் காதல் மீதான நம்பிக்கையால் காத்திருந்தவர்களும், காதல் தோற்றபோதும் ~இந்த காதல் ஒன்றே போதும்| என தனித்து நின்றவர்களும், காதலுக்காக உயிரை மாய்த்தவர்களும் இருக்க, இன்றைய காலத்தில், தொழில்நுட்பத்தின் வழியே காதல் ரசம் சொட்ட சொட்ட காதல் செய்தாலும், அந்த தொழில்நுட்பத்தாலேயே ~காதல் தோல்வி| என வரும்போது பழிவாங்கவும் செய்கின்றனர்.
அன்பு மிக மென்மையானதோர் உணர்வு. இதில் பழிவாங்கலுக்கு இடமே இல்லை என நாம் நினைத்தாலும் கூட, மனித உணர்வு சில சமயங்களில் மனிதம் மறந்து என்னென்னவோ செய்துவிடுகின்றது.
அன்று காதலின் சாட்சியாக கடிதங்கள், பரிசுகள் இருந்தன. இன்று அப்படியல்ல. குறுஞ்செய்திகளும் முகப்புத்தக அரட்டைகளுமே சாட்சிகள். அவையும் தொழில்நுட்பக் கோளாறு வந்துவிட்டால் காணாமல் போய்விடும்.
கடிதங்கள் என்பது மிகப் பெரிய உணர்வு. எப்போதாவது வீட்டில் புத்தகங்களை அடுக்கும்போது அல்லது ஏதோ ஒரு பழைய சேமிப்புகளை புரட்டிப் பார்க்கும்போது நம் கண்களில் தட்டுப்படும் சிறு துண்டு காகிதம் கூட ஆயிரம் கதைகளை கூறும்.
இன்றைய சந்ததியினர் இவ்வாறான சந்தோஷங்களை அனுபவித்திருப்பார்களா என்பது தெரியவில்லை.
உலக வாழ்க்கையில் எந்த அன்பாயினும், தாய்-சேய், காதலன்-காதலி, நட்பு என எதுவானாலும் அது உணர்வுபூர்வமாக இருந்தால் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். இல்லையேல், வார்த்தைகளில் மட்டும் வாழ்ந்துவிட்டு ஒருநாள் காணாமல் போய்விடும்.
அன்றைய கடிதங்களுக்கு இருந்த உணர்வு இன்றைய கைப்பேசிகளில் இல்லை.
உண்மையில், காதல் பரிமாற்றத்துக்கு கடிதம் எழுதுங்கள். உங்கள் ஒவ்வோர் எழுத்திலும் காதல் வாழும்.
என்ன காதலுக்காக இவ்வளவு பேசுகிறேன் என்கிறீர்களா?
உண்மைதான்… இன்று காதலால் இணைய பழிவாங்கல்கள் அதிகரித்துவிட்டன. பெரும்பாலான பெண்கள் இதனாலேயே அடுத்தது என்ன என்பதை யூகிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
சாதி, அந்தஸ்து காரணமாக கொள்ளப்படுகிறார்கள். திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கிக் கொள்கிறார்கள்.
இப்படி காதலால் அடுத்தது என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாது தடுமாறும் இளசுகளே,
காதலுக்கு வாய்ப்பில்லை என்றாலும், காதல் வந்துவிட்டது, கடிதம் எழுதுங்கள்… உங்களுக்கு நீங்களே!
அது உங்களை ஒரு கவிஞனாகவேனும் மாற்றும்.
காதலர் தின வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்,
பொன்மலர் சுமன்.

You must be logged in to post a comment Login