Health

உடற்பயிற்சியும் உள்ளாடையும்!

By  | 

ஆரோக்கியமோ அல்லது அழகு சார்ந்தோ, அனைத்து வயதினருமே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. இதற்காக, முன் எப்போதும் இல்லாததைவிட, சற்று அதிகமாகவே மெனக்கெட வேண்டியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்நிலையில், உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது பெண்களுக்கு வரும் மார்பு வலிக்கும், அவர்கள் அணிகிற உள்ளாடைக்கும் தொடர்புண்டு.

இன்று அனைத்து வயது பெண்களுமே உடற்பயிற்சி, யோகா பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். ஜிம்மில் சேர்ந்து கடுமையான பயிற்சிகளைக்கூட செய்கிறார்கள். இந்நிலையில், பயிற்சிகளில் ஈடுபடும்போது, பெண்கள், ஆண்களைக் காட்டிலும் சற்று கூடுதல் சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது. அவற்றில், மார்பு வலி மற்றும் மார்பு தொய்வு முக்கியமானவை. சாதாரணமாகவே உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும்போது அனைவருக்குமே கை, கால் தசைகளில் வலி ஏற்படும். அதுபோலத்தான் இந்த மார்பு வலியும்.

தொடர்ந்து செய்துவரும்போது கை, கால் தசைகளில் வரும் வலி போன்று தானாகவே சரியாகிவிடும். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், சில பெண்களுக்கு மார்பு காம்பிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வலி உண்டாகும். இது ஹோர்மோன்கள் பிரச்சினையா என மருத்துவரை அணுகி, அதற்கான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிலர் சாதாரண ப்ரா, டி-ஷர்ட் அணிந்துகொண்டு கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை பார்க்கலாம். இதனால் மார்புப்பகுதிகள் அதிக அசைவுகளுக்கு உள்ளாகி வலி உண்டாகும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது அப்பகுதியிலுள்ள கொழுப்பு தசைகள் குறைவதால் சுருங்க ஆரம்பித்து நாளடைவில் தொய்வடைய ஆரம்பித்துவிடும்.

இவர்கள் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்துகொள்வது அவசியம். தற்போது பிரத்தியேகமாக மோல்டட் கப் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் ப்ராக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. இவற்றை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதால், மார்புகளின் அசைவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வலி மற்றும் தொய்வடைவதைத் தவிர்க்கலாம்.

You must be logged in to post a comment Login