ஆரோக்கியம்

உடல் உழைப்புக்கு தேவை உணவு

By  | 

தாமதமாக விழிப்பவர்கள், பசியின்மை, நேரமின்மை (பள்ளிகளுக்கும் பணிகளுக்கும் காலையில் சீக்கிரம் செல்ப­வர்கள்), குடும்ப சூழ்நிலை, திருமணமாகாத தனியர்கள், பருமனாக இருப்பவர்கள் என பலரும் காலை உணவை தவிர்த்துவிடுகிறார்கள்.

காலையில் உணவு உட்கொள்ளும்போதுதான், இரவில் 8 மணிநேரம் ஓய்வெடுத்த உடல் சுதாரித்துக்கொள்கிறது. காலையில் படிப்பதற்கும் பணி செய்வதற்குமான ஆற்றலை தந்து உத்வேகத்துடன் உடல் உழைப்பதற்கு உணவு உதவுகிறது.

தவிர்த்தால் என்ன?

காலை உணவை தவிர்ப்பதால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். காலையில் சாப்பிடாததால் மதியம் அதிகமாகச் சாப்பிடும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, இதற்குத் தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் கணைய பீட்டா செல்களுக்கு ஏற்படும்.

இந்த நிலை தொடரும்போது… உடலில் இன்சுலின், மற்ற ஹோர்மோன் சுரப்புகளில் ஏற்படும் மாறுதலால், உடலில் இயல்பாக நடைபெறும் வளர்சிதை செயல்பாடுகளிலும் பெரிய மாற்றங்கள் நிகழும். இதன் காரணமாக உடல் பருமன், இன்சுலின் செயல்திறன் குறைவதால் (Insulin resistance) குளுக்கோஸ் சத்தை முறையாகப் பயன்படுத்த முடியாத நிலை (Glucose intolerance) ஏற்பட்டு நீரிழிவு நோய் ஏற்பட வழிவகுக்கும்.

காலை சாப்பாட்டை தவிர்ப்பதால் மாணவர்களுக்கு மூளையின் செயல்பாடு குறைதல், ஞாபகமின்மை, கற்றலில் குறைபாடு, இரத்த அழுத்தம், இதய நோய், பித்தப்பையில் கற்கள் ஏற்படுதல், இரைப்பை புண், இரைப்பை புற்றுநோய் போன்ற பல்வேறு பாதிப்பு­­கள் ஏற்படுமென ஆராய்ச்சிகள் தெரி­விக்­கின்றன. இதுவே பணி புரிபவர்கள் என்­றால் ஆர்வத்துடன், சுறுசுறுப்புடன் பணி­­புரிய இயலாமை, நல்ல மனநிலை இல்லாமை, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை­களும் ஏற்படச் சாத்தியம் அதிகம்.

சிறந்த நேரம்

நாள்தோறும், காலை 8.30 மணிக்கு முன்பாக காலை உணவை உட்கொள்கிற­வர்­களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஐரோப்பாவில் விழிப்புணர்வைப் பரவலாக்க, ‘காலை உணவு நாள்’ என்கிற தினமே அனுசரிக்கப்படுகிறது. நம் ஊரில் அப்படித் தனி நாள் எதுவும் அனுசரிக்கப்படாவிட்டாலும் கூட, காலை உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம் பழக்கங்களை சீராக்கிக்கொள்வோம்.

You must be logged in to post a comment Login