தோட்டக்கலை

உட்புறச் செடிகள் வளர்ப்பதன் பலன்கள்

By  | 

ரு நாளின் பெரும்பாலான நேரத்தை வீட்டுக்குள்தான் செலவிடுகிறோம். வீட்டுச்சூழல் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு தருவதாக அமைய வேண்டும். வீட்டுக்குள் செடிகளை வளர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், மன நலனையும் பேணலாம்.
வீட்டுக்குள் செடிகளை ஏன் அவசியம் வளர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.

* 1980களில் நாசா நடத்திய ஆய்வில், வீட்டு தாவரங்களின் வேர்கள், மண் ஆகியவை காற்றில் கலந்திருக்கும் கரிம சேர்மங்களின் செறிவைக் கணிசமாக குறைப்பது கண்டறியப்பட்டது. கார்பெட்டுகள், ஜன்னல் பகுதிகளில் நச்சுக் கலந்த கரிய சேர்மங்கள் அதிகம் சேரும்.
‘இங்கிலீஷ் ஐவி’, ‘அஸ்பாரகஸ் பெர்ன்’ போன்ற செடிகள் வளர்ப்பது நச்சுக்களின் வீரியத்தை குறைக்க உதவும்.

* தாவரங்கள், மரம், செடி, கொடிகள் கார்பன் டை ஒக்ஸைட் வாயுவை உட்கொண்டு ஒட்சிசனை வெளியிடுகின்றன. வீட்டில் உட்புறத்தில் செடிகளை வளர்ப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் வாயுவில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

*உட்புறச் செடிகள் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு நிம்மதிக்கும் வித்திடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இது தொடர்பான ஆய்வுக்கு வீட்டில் செடிகளை வளர்ப்பவர்கள், வளர்க்காதவர்கள் என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களின் இரத்த அழுத்தம், இதய துடிப்பு, மன அழுத்த நிலை போன்றவை பதிவு செய்யப்பட்டன.
வீட்டில் செடி வளர்ப்பவர்கள் எந்தவொரு மன நெருக்கடிக்கும் ஆளாகாமல் நிதானமாக இருப்பது தெரியவந்தது. ஆனால், செடி வளர்க்காதவர்களிடம் மேற்கொண்ட பரிசோதனையில் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் உயர்ந்திருந்தது.

* செடிகள் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதால் இயல்பாகவே மனநிலை மேம்படும். அதிலும் பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகள் சட்டென்று மனநிலையை உயர்த்தக்கூடியவை. மன அழுத்தம், பதற்றம் போன்ற மனநலப் பிரச்சினை கொண்டவர்களுக்கு ‘தோட்டக்கலை சிகிச்சை’ பரிந்துரைக்கப்படுகிறது.

* வீட்டில் தாவரங்கள் வளர்ப்பது உற்பத்தித்திறன், செயல்திறனை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

* குளிர்காலத்தில் சருமம் உலர்வடைந்து பாதிப்படையக்கூடும். சளி பிடிக்கும் வாய்ப்பும் அதிகம். ‘ஸ்பைடர் ப்ளான்ட்’ போன்ற செடி வகைகள் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவும். வறட்சி தொடர்பான பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் தரும்.

* வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளில் சில நச்சுத்தன்மை கொண்டவை. அவை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். சில செடிகளில் பூக்கும் பூக்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் உள்ளறை செடிகள் வாங்கும்போது கவனம் தேவை.

You must be logged in to post a comment Login