Stories

உண்மை உறங்கிவிட்டது!

By  | 

தென்மராட்சியிலே தென்னஞ்சோலைகள் நிரம்பிய அந்த அழகிய கிராமத்தில் அழுகுரல்களுக்கு அளவே இல்லை. அந்த மரண வீட்டில் மக்கள் அணை கடந்த வெள்ளம் போல கூடி நின்றனர். அனைத்து உறவுகள் மத்தியிலே என்ன செய்வது என தெரியாமல்  யோசித்தவண்ணம் இருந்தாள் திவ்யா. இறந்தவர் அவளின் பெரியப்பா.

இன்னும் அரை மணித்தியாலத்தில் அவரின் உடல் தீயில் சங்கமிக்கப்போகிறது.

அந்த கிராமத்திலேயே வாட்டசாட்டமான மனிதன் வீரசிங்கம். அவர் நாற்பது வருடங்களுக்கு முன்னர் லட்சுமியைக் கரம்பிடித்தார். அவர்களின் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக பத்து வருடங்கள் கழித்தே குழந்தை பிறந்தது. அந்த பத்து வருடங்களில் லட்சுமி பட்ட அவமானங்கள் சொல்லில் அடங்காதவை. குழந்தையை வளர்த்து வரும் காலத்தில் பணத்தேவைகள் அதிகரித்தன.

வீரசிங்கம் தூர இடங்களுக்கு வேலை தேடிச் சென்றார். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சென்றவர் சென்றதுதான். திரும்பி வரவில்லை. லட்சுமியும் தேடாத இடமில்லை. பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை தானே ஏற்றாள். பல கஷ்டங்களுக்கு மத்தியிலே பிள்ளையை வளர்க்கும்போது எப்போதேனும், தான் மலடியாகவே இருந்திருக்கலாம் என தோன்றும்.

பத்து வருடங்கள் பிள்ளையில்லாமல் பட்ட அவமானத்தை விட, கணவன் இல்லாமல் பிள்ளையை வளர்க்க அவள் எதிர்கொள்ளும் சிரமங்கள் அதை விட மனதை ரணமாக்கியது. இப்படியாக கஷ்டப்பட்டு பிள்ளையை வளர்த்து திருமணம் செய்துவைக்கும் பருவமும் வந்தது.

ஒரு நாள் திடீரென வீரசிங்கம் வீட்டு முற்றத்தில் வந்து நின்றார். அவளால் தன் கணவரை உடனே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருந்தது. அந்தளவு நிலைகுலைந்து போன தோற்றத்தில்தான் வந்து நின்றார்.

கடைசிக்காலம் தம்மோடு வந்து சேர்ந்துவிட்டார் என்ற சந்தோஷம் அவளுக்கு. அதன் பின்னரும் ஒற்றுமையாக இன்பமாகத்தான் இருவரும் வாழ்ந்தனர்.

அவர் தன் கடந்த கால வாழ்க்கையின் உண்மையை லட்சுமியிடம் முழுமையாகச் சொல்லவில்லை.

இப்படியாக வாழ்ந்த காலத்தில் வீரசிங்கம் தன் தம்பி மகளான திவ்யாவிடம் சில உண்மைகளைச் சொன்னார். அதுவும் தான் இறந்த பின்தான் சொல்லவேண்டும் என சத்தியமும் பெற்றார்.

லட்சுமிக்கு துரோகம் செய்ததன் அடையாளமாக தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், தான் இறந்தால் அவனிடம் அறிவிக்கும்படியும் சொன்னார்.

லட்சுமியிடம் இதைப் பற்றி சொல்ல தைரியமில்லை என்பதால் தன்னிடம் ரகசியத்தை சொன்ன பெரியப்பாவின் கடைசி ஆசையை இன்றளவிலும் திவ்யா மறக்கவில்லை.

வீரசிங்கத்தின் உயிரற்ற பூதவுடல் வீட்டைத் தாண்டி வெளியில் சென்றுவிட்டது. அவளுக்கு என்ன செய்வதென விளங்கவில்லை.

பெரியப்பா தந்த தொலைப்பேசி எண்ணை கையில் வைத்திருக்கிறாள். இருந்தும் அவரது மகனுக்கு தகவல் சொல்லவில்லை. இனி சொல்லியும் பயனில்லை.

“பெரியப்பா என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் சொல்ல முடியவில்லை… உங்கள் துரோகம் இனி யார் நிம்மதியையும் கொன்றுவிடக்கூடாது…”

மனதிலே நினைத்துக்கொண்டவள், உண்மைகளை தனக்குள்ளேயே பூட்டி மறைத்துவிட்டாள்.

வீரசிங்கத்தின் ஆத்மா தன் பிள்ளை வராததை நினைத்து அழும், துடிக்கும்… என்றாலும், அவளுக்கு ஏதும் செய்ய தோன்றவில்லை!

துரோகம் இழைத்தவர் நிறைவேறாத ஆசையோடு போய் சேர்ந்தார்.

-கோகிலன் மதனா,
வவுனியா.

 

 

 

You must be logged in to post a comment Login