Articles

உன்னை நேசி!

By  | 

ஒவ்வொரு மனிதனுமே ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவன் தான். மனிதர்களுக்குள் அவன் உயர்ந்தவன்| இவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடே கிடையாது. தற்போதைய காலகட்டத்தில் இந்த வேறுபாடுகளுக்கெல்லாம் இடமே இல்லை என்றாகிவிட்டது.

ஒரு மனிதனுக்கு பதில் இன்னொரு மனிதன்| இவனை விட இவன் தகுதியானவன் என்ற பேச்சுக்கே வழியில்லை. எல்லோருமே அவர்களின் தனித்தனி வழியில் பெறுமதியானவர்களே.

அழகான ஒரு பொருளையோ அல்லது உருவத்தில் அழகான ஒருவரையோ பார்க்கும்போது எவ்வளவு ரசிக்கிறோம்| எவ்வளவு பாராட்டுகிறோம்…! அட எவ்வளவு அழகு என்று சில வேளைகளில் மனதுக்குள் பொறாமைப்படுவதும் உண்டு.

பிறரை இவ்வளவு நேசிக்கும், வர்ணிக்கும் நாம், ‘நாமும் அழகுதானே’ என என்றேனும்  யோசித்திருக்கிறோமா? கண்ணாடி முன் நின்று நம்மை நாமே ரசித்திருக்கிறோமா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால், தன்னைத் தானே ரசித்துக்கொள்ள, பாராட்டிக்கொள்ள, நேசிக்க யாருக்கும் நேரமும் இல்லை. யாரும் இதைப் பற்றி சிந்தித்திருக்கவும் மாட்டார்கள். முதலில் நம்மை நாம் நேசித்தால்தானே பிறர் நம்மை நேசிப்பார்கள். பிறரை நேசிக்கத் தெரிந்த நமக்கு, நம்மையே நேசிக்கத் தெரியவில்லை. அதுதான் பிரச்சினை.

உருவத்திலும் சரி, எமக்கு இருப்பதான திறமைகளிலும் சரி, என்ன குறையாக இருக்கிறது என்பதை பார்ப்பதை விட்டுவிட்டு, நம்மில் எது நிறைவாக இருக்கிறது என்று பார்க்கத் தொடங்கிவிட்டாலே போதும்.

‘நான் நன்றாக இருக்கிறேன்… என்னால் முடியாதது என்று எதுவுமில்லை’ என்று நாம் சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே ஒரு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டுவிடும்.

தன்னால் எதுவும் இயலாதென்று தன்னைத்தானே தவறான சுயமதிப்பீடு செய்து, ஒரு வட்டத்துக்குள் வாழ்பவர்கள்தான் ஏராளம். ஏன் அவ்வாறானதொரு சிந்தனை? எமக்குள் எங்கேனும் ஒரு மூலையில் நமக்கான திறமை ஒளிந்துகொண்டிருக்கிறது. அதைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டுவர வேண்டியது நமது பொறுப்பே.

யாரொருவன் தன்னை நேசிக்கிறானோ அவனே வாழ்க்கையில் வெற்றியடைவான் என்பது முற்றிலும் உண்மை.

அவனால் நன்றாக பாடமுடியும், இவனால் நன்றாக நடனமாட முடியும், அவன் நன்றாக நகைச்சுவை செய்வான், அவனுக்கு இது முடியும்… அது முடியும்… என்று மற்றவர்களை பற்றி எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது, சிலருக்கு.

அதை விடுத்து, ‘என்னால் என்ன முடியும்’ என்று எப்போது நாம் சிந்திக்கத் தொடங்குகிறோமோ, அப்போது தான் நாம் முழுமையடைவோம்.

நமக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதை வைத்து சந்தோஷத்துடனும் நேசித்தும் வாழ கற்றுக் கொண்;டால், எந்தப் பிரச்சினையும் இல்லை.

‘நான் உடல் பருமனாக அசிங்கமாக இருக்கிறேன்| என்னால் விருப்பமான ஆடையை அணிய முடிவதில்லை’ என்று கூறும் அனேகரை நாம் பார்த்திருக்கிறோம்.  குண்டாக இருப்பதும் ஒரு வகையில் அழகுதான். அதை நாம் முதலில் உணர வேண்டும். அப்போதுதான் சுற்றியிருப்பவர்களும் அதை புரிந்துகொள்வார்கள்.

மற்றவர்களின் நிறைகளை பார்க்கும்போது எமது குறை பெரிதாக தெரியலாம். உண்மையில், அதெல்லாம் ஒரு குறையே இல்லை… அப்படித்தான் மனதுக்குள் கூறிக்கொள்ள வேண்டும்.

எந்நேரமும் தனக்குள் ஓர் உத்வேகத்தையும் தைரியத்தையும் வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். நீங்கள் கீழே விழும்போது மற்றவர்கள் வந்து தூக்கிவிடுவார்கள் என்று சிந்திக்கக்கூடாது.

உங்கள் மீது நம்பிக்கை வைத்து, உங்கள் கையை ஊன்றி, நீங்களே மேலெழும்ப முயற்சிக்க வேண்டும்.

உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டுமென்றால், முதலில் உங்களை நீங்கள் நேசிக்கவேண்டும். உங்களை நீங்கள் நேசிப்பதுதான் உலகில் மிக உன்னதமான நேசம்!
து.சிந்துஜா

 

You must be logged in to post a comment Login