General

உறவுகள் ஏன் நிலைப்பதில்லை?

By  | 

உறவுகள் ஏன் நிலைப்பதில்லை, தொடர்வதில்லை, கசந்து போகின்றன என்று பேசலாமா கொஞ்சம்.

– இந்த உறவு இப்படித்தான் இருக்கணும் எனும் முடிவினை எடுத்துவிட்டு தான் நாம் பழகவே ஆரம்பிக்கிறோம். நாம் விடும் முதல் தவறு இது.

– எந்த உறவையும் நாம் அதன் போக்கோடு ஏற்றுக்கொள்வதில்லை. ஆரம்பத்தில் எதெல்லாம் ஈர்த்து, அதன் பால் எம்மை கவர்கிறதோ, அதெல்லாம் அந்த உறவு நமக்கான பின்னே பிடிக்காதது ஆகிப்போகிறது.

– என்ன காரணம் தெரியுமா? அதே ஈர்ப்பு இன்னொருவருக்கும் வந்துவிடலாம் என்ற எமது அச்சம். அதை வெளிப்படுத்தி பேசி தீர்க்காமல், ‘நீ இப்படி இரு, அப்படி இருக்காதே’ என்று கட்டளையிட தொடங்கிவிடுகிறோம்.

– எத்தனை பேர் வந்தாலும் உனக்கு ஈடாகாது என்ற ஒன்றை நாம் எப்போதும் வாயளவில்தான் வைத்துக்கொண்டிருக்கிறோம். கொடுக்க நினைப்பதே இல்லை. நம்மை ஈடு செய்ய முடியாத அளவுக்கான ஓர் உறவை கொடுத்துவிடுவதில் தயக்கம் ஏன்?

– பேசி தீர்க்காமல் எதுவும் சரியாகப் போவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவுக்கவ்வளவு அப்படி பேசியும் தீராமல் போனால், விலகிவிடுதல் நலம் என்பதுவும்.

– தற்காலிக வலிகளை நினைத்தே வாழ்க்கையை வாழாமல் வாழ்ந்து முடிக்கிறோம் என்பதுதான் உண்மை. ஆனால், அந்த வலிகள் காயங்களாகி சீழ் பிடித்து முற்றி வெளிவரும்போதான விளைவுகள் எவ்வளவு பாரதூரமானவை என்பதை நினைத்தே பார்ப்பதில்லை நாம்.

– உறவுகளை எப்போது அதன் இயல்போடு ஏற்று இயல்பாய் வாழ முடிகிறதோ, அப்போது உறவுகள் மீண்டும் மலரும். எனக்கு பிடித்தது தான் உனக்கும் பிடிக்க வேண்டும் என்பதல்ல அன்பு.

– எனக்கு வலிப்பதை, எனக்கு உணர்வதை போல்தானே நீயும் என்று எண்ணி, அவற்றை தவிர்த்து ஒருவரை ஒருவர் சக மனிதனாய் நினைக்க தொடங்கும்போது உறவுகள் நிலை பெறுகின்றன.

இறுதியாய் ஒன்று…

உங்களுக்கு யாரேனும் நம்பிக்கை துரோகமோ ஏதும் தீங்கோ இளைக்கும்போது உங்களின் மனோநிலை என்னவாயிருக்குமோ, அதை பிறருக்கு நீங்கள் கொடுக்கும்போதும் அதேதான்  நடக்கும். எனவே, எம்மிலிருந்து மாற்றம் கொண்டு வர முயற்சிப்போம்…

ஏனெனில், வாழ்க்கை ஒரே ஒரு முறைதான். அதுவும் சில காலம்தான்.

– ப்ரியமுடன் ப்ரியா வெற்றிவேல்.

You must be logged in to post a comment Login