General

உலக புத்தக தினம்

By  | 

‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்துவைத்துள்ளன.
அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் திகதியன்று உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

எழுத்தாளர் தினம்…
புத்தக தின வரலாறு ..!
ஸ்பெயினிலுள்ள காட்டலோனியா (Catalonia) என்ற ஊரில் 1436ஆம் ஆண்டில், ஏப்ரல் 23 , செயின்ட் ஜோர்ஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அது ரோஜாவின் தினம் என்றும் சொல்லப்படுகிறது. அன்று தன் இதயம் கவர்ந்தவர்களுக்கும், விருப்பமானவர்களுக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் புத்தகத்துடன் ரோஜாவைப் பகிர்ந்து கொண்டனர். அன்றுதான் உலக இலக்கிய தினமாக கருதப்பட்டு, ஒவ்வொரு புத்தகம் விற்கும்போதும், அதனுடன் ஒரு ரோஜாப் பூவினை அன்பளிப்பாகத் தந்தனராம். அன்று எல்லோரும் புத்தகம் வாங்க வேண்டுமாம். இப்படித்தான் புத்தக தினத்துக்கான கரு, காட்டலோனியாவில் ஏப்ரல் 23ல் உருவானது.
அது போல, புத்தக தினத்தில் அனைவரும் புத்தகம் வாங்க வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். உலக புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம் கொண்டாட வேண்டும் என்பதன் வெற்றி என்பது புத்தக எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள், மனித நேயமிக்க தன்னார்வல நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவர்களால்தான் சாத்தியமாகின்றது.
“மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே..!” என 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியான அல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.
‘புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்பார் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில் மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற வேண்டும்!

உலகின் முதல் நூலகம்..!
இதுவரை கண்டறிந்ததில் உலகின் மிகப் பழமையான முதல் நூலகம் சிரியாவிலுள்ள எப்லா (Ebla) என்ற நகரில்தான் இருந்திருக்கிறது. அங்கு குயூநிபாரம் எழுத்துக்களால் எழுதப்பட்ட சுமார் 20,000 சுட்ட களிமண் (20,000 cuneiform tablets) பலகைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றின் வயது சுமார் கி.மு. 2250 ஆண்டுகள். அவை சுமேரிய எழுத்து வடிவத்தில் எப்லைட் மொழியில் (Eblaite language)செமிடிக் மற்றும் அக்காடியன் மொழி (Semitic language and closely elated Akkadian) கலந்தது. இப்போது அவை சிரியாவின் அலெப்போ, டாமாஸ்கஸ் மறறும் இட்லிப் (Syrian museums of Aleppo, Damascus, and Idlib) அருங்காட்சியகத்தில் உள்ளன.

முதல் புத்தகம்/முதல் காகித பணம்!
காகிதம்(Paper) பாரம்பரியமாக சீனாவில் காய்லூன் காலத்தில் கி.பி. 105இல் உருவானது. மல்பரி இலை மற்றும் வேறு சில சணல் கழிவுகளைக் கொண்டு காகிதம் தயாரித்தனர். பின் கி.பி. 3ஆம் நூற்றாண்டில்தான் இது எழுத பயன்பட்டது. அங்கு தான் முதன் முதலில் கி.பி. 1000த்தில் முதல் காகித பணத்தை சீன சங் வம்சம் அச்சடித்தது. 9ஆம் நூற்றாண்டில், டையமண்ட் சூத்திரங்கள் (Diamond suthra) என்ற 868 சூத்திரங்கள் அடங்கிய முதல் அச்சுப் புத்தகம் உருவாக்கப்பட்டது.

அறிஞர்கள் சொன்னவை…
ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தருபவனே மனித குலத்தின் உண்மையான விடிவெள்ளி  – ஜோன் மில்டன்.
ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம்  – ‍ சேர் ஐசக் நியூட்டன்.
உலக நாயகனான சார்லி சாப்ளின், ஒவ்வொரு புதிய படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், அதன் முன் பணத்தில் முதல் 100 டொலருக்கு புத்தகம் வாங்குவாராம்.
“வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே” – மார்க் ட்வைன்
“ஒரு நல்ல வாசகனைக் கொண்டே, ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப் படுகிறது” – ஜார்ஜ் பெர்னாட்ஷா
“ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்” – ஜேம்ஸ் ரஸ்ஸல்
“ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்; அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்” – அரேபியப் பழமொழி.
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகம் உறங்குகிறது என்று –  பெட்ரண்ட் ரஸ்ஸல்
புத்தகங்களும், நூலகங்களும் இல்லாத நாடு சிறைச் சாலைக்கு ஒப்பாகும்  – நெப்போலியன்
மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்குமிடம் புத்தகம் – தோமஸ் கார்லைல்
வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர்
ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது – பைபிள்

  • அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..!
  • குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் புத்தகங்களை பரிசளியுங்கள்…!

 

You must be logged in to post a comment Login