Articles

உழைப்பாளர் தினம்

By  | 

மே மாதத்தின் முதலாம் திகதி – மே தினம் இது உழைப்பாளர்களுக்கான தினம்.

ஒவ்வொரு வருடமும் உழைப்பாளர் தினம் அரசியல்வாதிகளின் ஊர்வலங்கள் கூட்டங்கள் அதற்கும் அப்பால் சில அரசியல்வாதிகள் மக்களை தலைநகருக்கு அழைத்து வந்து இதுதான் மக்கள் சக்தி என அரசியல் செய்துவி்ட்டு போவார்கள்.

ஆனால் இம்முறை அவை அனைத்திற்கும் வாய்ப்பின்றி போய்விட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அரசியல்வாதிகள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை வீட்டுக்குள் முடங்கிவிட்டனர்.

அதனால் கூட்டங்கள் ஊர்வலங்கள் இன்னும் சில கொண்டாட்டங்களுக்கும் வாய்ப்பின்றி போய்விட்டது.

இந்த உழைப்பாளர் தினமானது ஒவ்வொரு உழைக்கும் தனி மனிதனுக்கும் சொந்தமானது.

இன்று பெரும்பாலானோர் வேலையின்றி வீட்டில் இருக்கின்றனர். அவர்கள் வேலை செய்கிறோம் என்றாலும் கூடஅதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இந்த நெருக்கடியான சூழலிலும் சிலர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் இந்த அர்ப்பணிப்புக்கு நாம் தலை வணங்குவோம்.

மே தினம்

1886 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சிகாகோ நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். ஐவர் படுகாயமடைந்தனர்.

இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜோன்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர்.

சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. அப்போது திடீரென்று காவல்துறையினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 1886ஆம் ஆண்டு மே முதலாம் திகதி கைது செய்யப் பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, 1887ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேற்கண்ட நான்கு தோழர்களுடன் அடால்ப் பிட்சர், மைக்கேல் ஸ்வார்ப், சாமுவெல் பீல்டன், லூயிஸ் லிங்க் மற்றும் ஆஸ்கர் நீப் ஆகிய தோழர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் ஆஸ்கர் நீப் என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக ஸ்வார்ப் மற்றும் பீல்டன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜோர்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர், ஆகியோர் 1887ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

1887ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும் தான் இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்…..
1889ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
இந்த அறை கூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கொண்டாட வழிவகுத்தது.

You must be logged in to post a comment Login