Articles

எண்ணங்களின் வலிமை

By  | 

நல்ல சிந்தனையும் நல்லதும் வேண்டுமென திரும்ப திரும்ப வேண்டிக்கொண்டிருக்கையில் கெட்ட சிந்தனையும் கெட்டவையுமே எளிதில் வருகிறது.

பத்திரிகையில் ஊனமுற்ற ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டார் என பெரிதாக அச்சிடப்பட்டு வந்தாலும் கூட அதை வாசிப்பதில் ஊக்கமில்லாமல் போய்விடுகிறது. ஆனால், கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி என்றவுடன் ஆர்வமாய் படிக்க ஆரம்பிக்கிறோம்.

ஒருவரை பயமுறுத்துவது மிக எளிது. அதற்கு பெரிய திறமைகளக் தேவைப்படுவது இல்லை. மாறாக, ஒருவரை மகிழ்விப்பது மிக கடினம். அதற்காக பல திறமைகள் தேவைப்படுகிறது.

உங்கள் ஒஃபீஸில் வெடிகுண்டு உள்ளது என பொய் தகவலை கூறி பதற்றமாக ஓடினால் போதும், உசைன் போல்டை விடவும் வேகமாய் ஓடிய வெளியே நிற்கிறோம்.

அது போல் ஒருவரை கோபப்படுத்துவதும் மிக எளிது. அதை சிறு நுளம்பு அல்லது கொசு கூட செய்யமுடியும்.

கோபம் தான் நமக்கு வேண்டப்படாதவர் பற்றிய சிறிய எண்ணத்தை மிகப்பெரிய பரபரப்பில் கொண்டு சேர்த்துவிடுகிறது.

ஏன் அப்படியெல்லாம் நிகழ்கிறது என்று பார்த்தால், நம் மூளை அப்படித்தான் உருவாகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் நம் முதல் உணர்ச்சி அச்சமாக இருக்கிறது. அதன் பின்னணியில்தான் கோபம் நிகழ்கிறது. அதனால் தான் நம் மூளை அச்சத்தை தேடிப்பிடித்துக் கொள்கிறது. ஓய்வுக்காக என்று டீவி பார்க்கிறோம். உங்கள் குழந்தைகளின் உணவில் போசாக்கு இருக்கிறதா?

உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா? என்றெல்லாம் விளம்பர அடிப்படையில் அச்சத்தை உள்வாங்கிக்கொள்கிறோம். இதுவும் ஒரு வியாபார யுக்திதான்.

அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட எண்ணங்கள் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும்.

வாழ்க்கை என்பது அழகானது. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் தங்கியிருக்கிறது. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை ஒருபோதும் துன்புறுத்துவது கிடையாது. அது பற்றிய எண்ணங்கள் தாம் நம்மை துன்புறுத்துகின்றன.

மூளையும் மனமும் இசைந்து கொடுத்தால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும்.

ஒரு மேடைப்பேச்சுக்கு இருவர் தயாராகின்றார்கள். அதில் ஒருவரின் மனம் படபடப்பாக இருக்கிறது. ‘என்னால் மேடையில் பேச முடியுமா? சொதப்பினா கேவலமாய் போயிடுமே” என்ற எண்ணம் படபடப்பை அவர் மனதில் நிகழ்த்துகிறது. மற்றையவரின் மனம் உற்சாகமாக இருக்கிறது. பேச்சின் கடைசியில் ஜோக் சொல்லி எல்லோரையும் மகிழ்விக்கவேண்டும் என்ற அவருடைய எண்ணம் உற்சாகத்தை கொடுக்கிறது.

எண்ணம் – உணர்வு – செயல் என்ற மூன்றும் ஒன்றையொன்று பாதிக்கக்கூடியன.

‘என்னால் முடியாது” என்ற எண்ணம் பதற்றத்தை உண்டுபண்ணி செயலை நிறுத்திவிடுகிறது. ‘என்னால் முடியும்” என்ற எண்ணம் நிதானத்தை கொடுத்து சிறப்பாக செயலாற்ற உதவுகிறது.

நம் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளிலும் இந்த மூன்று அம்சங்களையும் அலசி ஆராய்ந்து பாருங்கள். பெரும்பாலும் எண்ணம்தான் பிரதான காரணமாக இருந்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘எண்ணம் போல் தான் வாழ்க்கை” என்று . அது நூற்றுக்கு நூறு உண்மை.

அப்படியென்றால், தோல்வி அடைபவர்கள் தோல்வி வேண்டும் என்று எண்ணுகிறார்களா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இல்லவேயில்லை. அவர்கள் ஒருபோதும் அப்படி நினைக்கமாட்டார்கள். மாறாக, அவர்கள் வெற்றி பற்றி யோசிப்பதை விட தோல்வியடையக்கூடாது

என்று அதிகம் யோசித்திருப்பார்கள். அந்த மனநிலையில் இருப்பதால் அதற்கேற்ற நிகழ்வுகள் தான் பின்தொடரும். ஆனால்,  அவர்கள் தோல்வியடைய வேண்டுமென ஒருபோதும் எண்ணியிருக்கமாட்டார்கள்.

உதாரணமாக, அப்பாவுக்கு தன் மகனின் திறமை மீது நம்பிக்கையில்லை. ஒரு முறை வீட்டுக்கு வந்த நண்பரிடம் குறைபடுகிறார். ‘ஒரு வேலையை கூட இவன் சரியா செய்யமாட்டான்…!!” இப்படியிருக்க கடைக்கு போகும் வேலை வருகிறது. ‘நீங்க வேணா பாருங்க. இவன் எப்படி சொதப்புவான்னு” என்று மகனிடம் சில பொருட்கள் வாங்கி வரும்படி கடைக்கு அனுப்புகிறார்.

அப்பாவின் எண்ணமும் மனப்பான்மையுமம் மகனின் தன்னம்பிக்கையை குறைக்கிறது.

அவை பயத்துடன் கூடிய சொதப்பக்கூடாது என்ற எண்ணத்தை வலுவடைய செய்கிறது. அவன் பயந்தது போலவே மீதம் தரப்பட்ட சில்லறையில் ஒரு ரூபாயை குறைத்து வாங்கி வருகின்றான்.

எண்ணிப் பார்த்த அப்பா தன் நண்பரிடம், ‘நான் சொன்னேன்ல சொதப்புவான்னு. சரியாக தானே சொன்னேன். பாருங்க, ஒரு சில்லறைய கூட சரியா எண்ணி வாங்க முடியல! இவன் எல்லாம் என்னதான் பண்ண போறானோ தெரியல…!”

இப்போது மகன் பற்றிய அப்பாவின் எண்ணம், ‘சரிதான், நான் மற்றவர்களை போல சாமர்த்தியம் இல்லாதவன்தான்” என அவனை மெதுவாக நம்ப வைக்கிறது.

இப்படியாகத்தான் பல விடயங்கள் நம் வாழ்க்கையை தெரிந்தோ தெரியாமலோ நடந்த வண்ணமிருக்கிறது.

முன்கூட்டி தீர்மானிக்கும் எண்ணங்கள் தான், நாம் நம்புகின்ற விளைவுகளையும் தந்து, அந்த எண்ணங்களையும் வலுப்படுத்திவிடுகிறது.

– ஏ.  எல். இம்தாத் அஹமட்,
சாய்ந்தமருது.

You must be logged in to post a comment Login