Articles

எதுவும் செய்வார்கள்!

By  | 

ஒரு புராண காலத்து கதையை சொல்கிறேன். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே ஒரு மாபெரும் நடனப்போட்டி நிகழவிருந்தது. முன்னேற்பாடுகள் தடல்புடலாக இருந்தன.

போட்டி நிகழும் நாளும் வந்தது. விசாலமான மண்டபம் அலங்காரத்தால் நிரம்பி வழிந்தது. கோடான கோடி பேர் எதிர்பார்த்திருந்த அந்தப் போட்டியை கண்டுகளிக்க அத்தனை சோடிக்கண்களும் மண்டபத்தில் தவம் கிடந்தன.

நடனமாடப்போகும் நாயகனும் நாயகியும் மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள். நாயகனினதும் நாயகியினதும் நடனக்கோலத்தை பார்த்து சபையினர் மனம் நெகிழ்ந்தனர். இப்படியொரு நாட்டியத்தை இதுவரையும் இனியும் யாரும் காணப்போவதில்லை என வாய்பிளக்குமளவுக்கு போட்டி கலைகட்டப்போகிறது என்பதை உணர்ந்தார்கள்.

போட்டியாளர்களான நாயகனும் நாயகியும் மண்டபத்தின் எதிரெதிர் பக்கங்களில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளுக்கு சென்றார்கள்.

ஆணுக்கே உரிய தாண்டவ பாவத்தோடு நின்றான், அந்த நாயகன். நாயகி பெண்ணுக்குரிய நளினத்தன்மையோடும் நாட்டிய பாவத்தோடும் நின்றாள்.

வெகுசிலரை தவிர மற்ற எல்லோர் பார்வையும் நாயகியின் மீதே குவிந்தது. காரணம், அவள் ஆட ஆரம்பித்தால் அவளுக்கு முன்னால் வேறு எந்த நடனக்காரரும் தாக்குப்பிடிக்க மாட்டார்களாம். அவ்வளவு பெரிய நடனத்திறமை கொண்டவள்.

நாயகனும் சளைத்தவன் அல்ல என்பதால் போட்டி கடினத்தன்மையோடு ஆரம்பமானது.

இருவரும் எதிரெதிர் மேடையில் ஒருவரையொருவர் பார்த்தபடி ஆடினார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆடியதால் யார் முன்னே, யார் பின்னே என்று யுகிக்க முடியாமல் சபை திண்டாடிவிட்டது.

எனினும், ஒரு கட்டத்தில் நாயகி இன்னும் சிறப்பாக ஆடி, தனது கலைத்திறமையை நிருபித்துக்கொண்டே போனாள். நாயகனும் விடுவதாக இல்லை. ஈடுகொடுத்து ஆடினார். இருவரும் சமநிலையில் இருந்தனர்.

இருவருக்கிடையிலும் நீயா நானா என்கிற போட்டி மறைந்து, ஆண் ஜெயிப்பதா, பெண் ஜெயிப்பதா என்கிற பாலின பிரிவினை உருவாகி ஆவேசம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் நாயகியை கவிழ்க்க நாயகன் ஒரு நுட்பத்தை கையாண்டார்.

தனது ஒரு காலை மெல்ல மெல்ல உயர்த்தினான். தொடையளவு, இடுப்பளவு என்று அவனது கால் உயர்ந்துகொண்டே போவதை நாயகி பார்க்கிறாள். ஆனால், ஓரளவுக்கு மேல் அவளால் அவனை பார்க்க முடியவில்லை. தயங்கினாள். வெட்கப்பட்டாள். அதனால் தன்னையே அறியாமல் தன் ஆட்டத்தையும் ஆவேசத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டாள்.

அவன் கால் தலைக்கு மேல் உயர்ந்தது. அவனுடைய அந்தரங்க உடலை அவளால் பார்க்க முடியாமல் அப்படியே கூனி குறுகி நின்றுவிட்டாள். பிறகு, அவன் இரண்டு கால்களையும் மேலே உயர்த்தி தலையை தரையோடு தாழ்த்தி கீழே கையை ஊன்றிய நிலையை காட்டினான்.

அதுவரை அவனுடைய நடன அசைவுகளுக்கு இணையாக ஆடியவள், கால்களை உயர்த்தி அவன் காட்டிய ஆட்ட வித்தையை தன்னால் செய்து காட்ட முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள்.

தொடர்ந்து ஆட இயலாமல் ஆட்டத்தை நிறைவு செய்துகொண்டாள். நாயகனின் நடனத்துக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாதவளாக கருதப்பட்டாள். அவள் தோற்றுப்போனவள் என்கிற தீர்மானம் அங்கே முன்வைக்கப்பட்டது.

அந்த வித்தையொன்றும் அவளுக்கு கடினமானதல்ல. எப்படி வேண்டுமானாலும் உடலை வளைத்து, நீட்டி, நௌித்து ஆடுவதற்கான ஆற்றல் அத்தனையும் அவளிடம் இருந்தது. ஆனாலும் அவள் அதை செய்யவில்லை.

உடலின் மறைவான பாகங்கள் வௌியே தெரியும்படியாக ஆடுவதற்கு அந்த நாயகியின் பெண்மைக்குணம் இடந்தரவில்லை.

ஆண் செய்தான் என்பதற்காக தானும் அதையே திருப்பிச் செய்ய அவள் உடல் இணங்கினாலும் உடை அவளுடன் ஒத்துழைக்கவில்லை.

ஒரு பெண்ணை தோற்கடிக்க ஆண் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வான் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

ஆனால், நம் சமுதாயம் இந்த தந்திரத்தனத்தை மறைத்துவிட்டு பெண்கள் காலை தூக்கி ஆடக்கூடாது, அது அவர்களின் கர்ப்பப்பைக்கு ஆபத்தை உண்டாக்கும் என எச்சரிக்கிறது.

(இது ஆண்களுக்கும் உடல் ரீதியான சில பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

அந்த அபாய குரல்களையெல்லாம் தாண்டி இன்றைக்கு நடனம், ஜிம்னாஸ்டிக், யோகா போன்றவற்றில் அதிகமான பெண்கள் வீரதீர சாகசங்களையும் சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார்கள் என்பது பெருமையளிக்கிறது.

தன்னை எதிர்த்து நிற்கும் பெண் தோற்க வேண்டுமானால், தன்னை கடந்து முன்னேறும் பெண்ணை பின்தள்ள வேண்டுமானால், தன்னை பற்றியும் தன் எதிர்காலத்தை பற்றியும் கவலைப்படாமல் அந்த ஆண் எதுவும் செய்வான்…

அவள் திறமையை பற்றி பேசாமல் அவள் குலத்தை பற்றி பேசுவான், தகாத முறையில் சென்றே இந்த  உயர் நிலையை அடைந்ததாக நா கூசாமல் பழி போடுவான், குடும்பத்தை பற்றி இழிவாக பேசுவான், அவள் உடலை பற்றி கொடூரமாக வர்ணிப்பான், தொடக்கூடாத இடத்தில் பலர் மத்தியில் தொட்டும் அவமானப்படுத்துவான், தள்ளி கீழே வீழ்த்துவான், முகத்தில் அசிட் வீசுவான், ஆடையை விலக்கச் செய்வான், அவளுடைய அந்தரங்க விடயங்களை பலர் அறிய பகிரங்கப்படுத்துவான், அவளை முன், பின் அறியாவிட்டாலும் அவள் நடத்தை குறித்து விமர்சிப்பான்…

இதுதான் காலகாலமாக நடந்துவருகிறது… இவற்றில் சில வழிகளில் ஆண்கள் மட்டும் என்றல்லாமல் சில பெண்களே கூட பெண்களை எதிர்க்க துணிந்துவிட்டார்கள் என்பதுதான் வேதனையான விடயம்!

– உருத்திரா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login