Astrology

ஏழாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்

By  | 

7 , 16,  25 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் குழந்தையாக இருக்கும் பொழுது மொட்டை அடிப்பதற்கும் கூட அழ மாட்டார்கள். அதேபோல் இவர்கள் பால்ய பிராயத்தில் ஏனைய குழந்தைகளைப் போல் சேட்டைகளும் அதிகமாக செய்வதில்லை. மௌனமாக இருந்து சாதிப்பார்கள். பாடசாலையில் கல்வி பயிலும் போது வகுப்பறையில் அமைதியான மாணவி என்ற பெயருக்கு சொந்தக்காரராக இருப்பார்கள். கேள்விகளை கேட்டால் ஆசிரியர்களே ஒருகணம் திகைத்து, அதற்குப் பின்தான் பதிலளிப்பார்கள்.
இவர்களுக்கு காதலில் ஆர்வம் இருப்பதில்லை. ஆனால் மற்றவர்களால் காதலிக்கப்படுவார்கள். இவர்கள் ஏழாம் திகதிகளில் பிறந்த அல்லது பிறந்த திகதி, வருடம் , மாதம் ஆகியவற்றின் கூட்டு எண் 7 ஆக இருப்பவர்களிடம் காதல் வசப்பட்டு, திருமணமும் செய்து கொண்டால்…. வாரிசு விடயங்களில் துல்லியமாக அவதானிக்க முடியாத  அளவிற்கு காலதாமதம் ஏற்படும். ஏனென்றால் கணவன் – மனைவி என இருவருமே பக்குவப்பட்ட மனத்துடன் இருப்பார்கள்.
இந்த ஏழாம் திகதிகளில் பிறந்த பெரும்பாலான பெண்களுக்கு 29 வயதில் திருமணம் நடைபெற்றால், 34 வயதில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அத்துடன் இவர்களுக்கு சற்று தாமதமான திருமணம் தான் வெற்றியளிக்கும். இவர்களுக்கு 2, 11 , 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்த ஆண்களும், பெண்களும் தாமாக முன்வந்து உதவி செய்வார்கள். இவர்களின் நட்பு உங்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் அமைதியாக தனிமையில் இருக்கும்பொழுது, உங்களின் மனதை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ற வகையில் பேசுவார்கள். உங்களை ஆழ்ந்த சிந்தனைக்கு தூண்டுபவர்களாகவும் இந்த எண் காரர்கள் விளங்குவார்கள்.
உங்களது வாழ்க்கை துணையாக இரண்டாம் எண் உடையவர்கள்தான் முதன்மையான தெரிவு. அப்படி அமையவில்லை என்றால் 6,15 ,24 மற்றும் 8 ,17, 26 ஆகிய திகதிகளில்  பிறந்தவர்களை துணையாக தெரிவு செய்தால் வாழ்க்கை முழுவதும் விட்டுக்கொடுத்து வாழ்ந்து விட முடியும். அத்துடன் இல்லற வாழ்க்கையிலும் சந்தோஷம் நீடிக்கும்.
கடந்த ஏப்ரல் மாதங்களில் உங்களுக்கு அறிமுகமானவர்கள் அல்லது உங்களை பெண் பார்த்து சென்ற மாப்பிள்ளை விட்டார்கள், மே ,ஜூன் மாதங்களில் பல கோணங்களில் ஆலோசனை செய்து, இந்த ஜூலை மாதத்தில் நல்லதொரு சாதகமான பதிலை வழங்குவார்கள். அத்துடன் உங்களில் சிலருக்கு வெளிநாடுகளில் வாழும் வாய்ப்பு கிடைக்கும். வேறு சிலருக்கு வெளிநாடுகளில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்.
இந்த திகதியில் பிறந்தவர்கள் யாரும் தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற வேலையை செய்யமாட்டார்கள். அதிலும் குறிப்பாக 25 ஆம் திகதிகளில் பிறந்த பெரும்பாலானவர்கள்,  மருத்துவ படிப்பு படித்திருந்தாலும், மருத்துவராக சேவையாற்றாமல், மருத்துவத்துறை சார்ந்த அல்லது வேறு பணி செய்து வருவாய் ஈட்டுவார்கள்.
பொதுவாகவே இவர்கள் பணத்தின் மீது அதிக அளவு பேராசை கொண்டு செயல்பட மாட்டார்கள். ஆனால் இவர்கள் தங்களுக்கு தேவையான அளவிற்கு பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள்.
இவர்களுக்கு அரிப்பு, வெண்புள்ளி, கரும்புள்ளி போன்ற தோல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். இதற்கு நாட்பட்ட சிகிச்சையை மேற்கொண்டு அதிலிருந்து விடுபடுவார்கள் அல்லது இந்த பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்வார்கள். நீங்கள் உங்களுடைய உள்ளங்கால்களை வாரத்திற்கு ஒரு முறையேனும் கைகளால் தொட்டு தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைத்தால் செவ்வாய்க்கிழமை இரவு நேரங்களில் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சற்று சூடான நீரில் உங்களது பாதத்தை முழுமையாக  அமிழ்த்தி, உள்ளம் பாதங்களின் தசைகளை தளர்வடையச் செய்யும் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அது உங்களுக்கு புத்துணர்வை வழங்கும்.
உங்களின் ஆழ்ந்த அறிவு மற்றும் நினைவுத்திறன் அதிகம் இருப்பதால் உங்களால், உங்களின் தோழிகள் கைபேசி எண்ணை ஒரு முறை கவனித்தால் போதும். அதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வீர்கள்.  விவாதங்களில் நீங்கள் பங்குபற்றினால் உங்களுடைய விசாலமான அறிவுத்திறன் வெளிப்படும். அதே தருணத்தில் உங்களுடைய எல்லையற்ற அணுகுமுறையை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாததால் உங்களை மறுத்துப் பேச முற்படும்போது உங்களிடத்தில் கட்டற்ற கோபம் உண்டாகும். இதனை கட்டுப்படுத்திக் கொண்டால் வெற்றி பெறுவதுடன், நட்பையும் ஆரோக்கியத்துடன் பேணலாம்.
ஆழ்ந்த சிந்தனை உங்களுக்கு இயல்பிலேயே கைவரப் பெற்றிருப்பதால் புத்தகங்களின் வாசிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிலும் குறிப்பாக வரலாறு, தொல்லியல், பாரம்பரிய கலாச்சாரம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். இவற்றை அடுத்த தலைமுறையினரும் காப்பாற்ற வேண்டுமென்று விரும்புவீர்கள்.
உங்களுக்கு தாய்மொழியான தமிழை தவிர சிங்களம், ஆங்கிலம், மாண்டரீன், மலாய், பிரெஞ்சு, ஜேர்மன், அரபிக் போன்ற வேறு மொழிகளை கற்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் நீங்கள் சாதித்துக் காட்டுவீர்கள். இந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்களிடமிருந்து உங்களுக்கு உதவியும், சரியான தருணத்தில் வழிகாட்டலும் கிடைக்கும்.
அதேபோல் நீங்கள் இந்து சமயத்தை நேசிப்பதை போல், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் என பல்வேறு  மதங்களையும், அதற்குரிய  முக்கியத்துவத்துடன் நேசிப்பீர்கள். உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகம் இருப்பதால், இவை எல்லாம் சாத்தியம். அதே தருணத்தில் உங்களது வாழ்க்கையில் எந்தப் பகுதியிலாவது வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டால், நீங்கள் ஆலயங்கள், தேவாலயங்கள், ஆன்மீக மையங்கள் போன்றவற்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். இது உங்களுக்கு விருப்பமானதாகவும் இருக்கும். சிலருக்கு இந்து கடவுள் படங்கள் மற்றும்ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கலாம் அல்லது இதுபோன்ற ஆன்மீகம் சார்ந்த வணிகங்களில் ஈடுபட்டு வெற்றியும் பெறலாம். ஒரு சில ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள். வேறு சிலர் ஆன்மீக சுற்றுலா வழிகாட்டியாகவும், வேறு சிலர் துப்பறியும் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
உங்களுக்கு ஏதேனும் நினைத்த காரியம் கைகூட வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமையன்று விநாயகப் பெருமானை 21 முறை வலம் வந்து வணங்கினால், நினைத்த காரியம் நடக்கும். சில தருணங்களில் விநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காய்  வழிபாடு மேற்கொண்டால் சாதகமான விடயம் நடைபெறும். சிலர் செவ்வாய்க்கிழமைகளில் கொள்ளு தானியத்தால் செய்யப்பட்ட கொழுக்கட்டையை விநாயகப் பெருமானுக்கு படைத்துவிட்டு, அதனை சாப்பிட்டு வந்தால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
மேலும் உங்களது வாழ்க்கை வளம் பெற நீங்கள் சம்பாதிக்கும் வருவாயில் 9 வீதத்தை தானமாக வழங்கி வாருங்கள்.  திங்கட்கிழமைகளில் பச்சரிசியால் செய்யப்பட்ட  சாதத்தை அன்னதானமாக வழங்கினால் நிம்மதி, சந்தோஷம், மகிழ்ச்சி, அங்கீகாரம், புகழ் ஆகியவை கிடைக்கும்.
-அஸ்வினி பிரியன்.

You must be logged in to post a comment Login