Q&A

ஒருநாள் எங்கள் குரல்களுக்கு உலகம் செவி கொடுக்கும்!

By  | 

ஈழநிலா என்ற புனைபெயர் கொண்ட எழுத்தாளர், கவிஞர், சினிமா கலைஞர், சமூக போராளி போன்ற பன்முகம் கொண்ட திருநங்கை ஜெனிஷா கிரிஸ்டியன் உடனான நேர்காணல்…

1: வணக்கம் ஈழநிலா! முதலில் உங்களை பற்றிய சுய அறிமுகம்…

வணக்கம். எனது பெயர் ஈழநிலா. நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள். கல்வி கற்றது, வளர்ந்தது எல்லாமே யாழ்ப்பாணத்தில்தான்.

 

2: உங்களை நீங்கள் இந்த சமூகத்தில் யாராக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?

என்னை நான் ஓர் எழுத்தாளராக, கலைஞராக அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.

 

3: ஜெனிஷா  ஏன் ஈழநிலா ஆனார்?

ஜெனிஷா  ஆங்கிலப்பெயர் என்பதால் ‘ஈழநிலா’ என்ற பெயரை எனக்கான பெயராக தெரிவு செய்தேன். ஈழத்தில் நடந்த போராட்டங்களில் ஈடுபட்ட பெண் போராளிகள் பலருக்கு, இந்த ஈழநிலா என்ற பெயர் இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்துப்போனமையால், அந்த பெயரையே எனது புனைபெயராக சூடிக்கொண்டேன். இப்போது அதுவே என் பெயராகிவிட்டது.

 

4: பன்முக ஆளுமை கொண்ட உங்களை ஒரு முகத்தில் மட்டும் மட்டுப்படுத்தி நேர்காணல் செய்திடமுடியாது. முதலில் உங்களது எழுத்துத்துறை பற்றி பேசுவோம்… ‘மூன்றாம் பாலின் முகம்’ கவிதை நூல் பற்றி சொல்லுங்கள்…

‘மூன்றாம் பாலின் முகம்’ என்பது கவிதை நூல் கிடையாது. அது ஓர் ஆய்வுக் கட்டுரை. திருநம்பிகள், திருநங்கைகள் இரு தரப்பினரையும் மையப்படுத்தி, அவர்களின் உணர்வுகள், பருவ மாற்றம், அவர்கள் தங்களை சமுதாயத்தில் அடையாளப்படுத்தும் விதம் முதலியவற்றை ஆய்வு செய்து, அதை நூல் வடிவமாக மாற்றினேன்.

5: கவிதை அல்லது எழுத்துத்துறையில் உங்களுக்கு எப்போதிலிருந்து ஈடுபாடு ஆரம்பித்தது?

எனக்கு தெரிந்து 12, 13 வயதுகளிலிருந்தே கவிதைகள், எழுத்துக்கள் மீது நிறைய ஆர்வமிருந்தது. பாடசாலைகளில், நூலகங்களில் பல வகையான புத்தகங்களை படிப்பது, கட்டுரைகள் எழுதுவது, கவிதைகள் எழுதுவது என்பவற்றில் அப்போதே ஆர்வம் காட்டினேன்.

 

6: ‘ஈழநிலா’ கவிதையை என்னவாக சமூகத்தின் மீது பிரதிபலிக்கிறாள்?

என் கவிதைகள் பெரும்பாலும் திருநங்கைகள் பற்றியும், அவர்களின் வலிகள் பற்றியும், பெண்ணியம் பற்றியும், சமூகத்தில் பேச மறுக்கின்ற ஒருசில விடயங்களை பற்றியும் பேசுகின்ற கவிதைகளாகவே இருக்கின்றன.

 

7: சமூக பிரச்சினைகளை தைரியமாக எழுதி வருகிறீர்கள். உங்கள் பதிவுகள் விரைவில் ஓர் அதிர்வை ஏற்படுத்திவிடுகின்றன… இந்த தைரியம் எப்படி சாத்தியமானது?

உள்ளதை உள்ளபடி எழுதினால், அதில் ஓர்  அதிர்வு கண்டிப்பாக இருக்கும். இந்த சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதை, மற்றவர்கள் அறிந்துகொள்ள மறுக்கின்ற ஒரு சில விடயங்களை, பிறர் ‘இது என்ன’ என உற்றுப் பார்க்கும் சில விடயங்களை, மற்றவர்கள் பேச பயப்படும் அல்லது எழுத பயப்படும் விடயங்களை நான் பொதுவெளியில் பகிரங்கமாக எழுதுவதே இதற்கு காரணம்.

8: தமிழ் மொழி, இனம் மீது உங்களுக்குள்ள பற்றை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இந்த பற்று எப்படி வந்தது?

சாதாரணமாக தமிழர்கள் என்றாலே அந்த உணர்வு எழவேண்டும். எனக்கும் அவ்வாறுதான். ~நான் தமிழச்சி| என்பதால் தமிழ் உணர்வும் தமிழ் மொழி மீதான பற்றும் எனக்கு இயற்கையாகவே தோன்றிய ஒன்று.

 

9: ஈழநிலா ஒரு திருநங்கை என்று நீங்களாக சொன்னாலே தவிர, யாராலும் நம்ப இயலாது. அந்தளவுக்கு பெண்ணாகவே வாழ்கிற ஜெனிஷாவை திருநங்கை என்ற சொல் கூட காயப்படுத்துவதாக உணர்கிறீர்களா?

இல்லை. இன்னும் என்னை ஒரு திருநங்கையாக அடையாளப்படுத்துவதில், எனக்கு எந்த காயமும் ஏற்பட்டதாக நான் உணரவில்லை. எனது அடையாளத்தை, என் சார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்துவதில் எனக்கேதும் தயக்கமில்லை.

 

10: ஆண் – பெண் பாலின சமத்துவமே இல்லாத உலகில் மூன்றாம் பாலினத்தை இந்த உலகம் வழிநடத்தும் விதம் பற்றி அன்றாடம் செய்திகளில் படிக்கிறோம். திருநங்கைகள் போலவே திருநம்பிகளும் பல்வேறு அடிப்படை மனித உரிமை மீறல்களை சந்திக்கின்றனர். சொல்லுங்கள்… இப்படியான சந்தர்ப்பத்தில் எப்படியான சமாதான வார்த்தைகளால் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்கிறீர்கள்?

பெண் சமத்துவக்கான போராட்டங்களும் நீதி கோரிக்கைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் மூன்றாம் பாலினத்தவர் என்று நாம் ஒரு கொடியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வந்தோமேயானால், சமூகம் எம்மை திரும்பிப் பார்ப்பதற்கு கொஞ்ச நாள் எடுக்கும். இருந்தாலும் தட்டினால்தான் திறக்கப்படும், கேட்டால்தான் கிடைக்கும் என்ற கொள்கைக்கு இணங்க மீண்டும் மீண்டும் தட்டுகிறோம்… மீண்டும் மீண்டும் கேட்கின்றோம்… எங்களுக்கான நீதியும், எங்களுக்கான உரிமைகளும் ஒருநாள் திறக்கப்படும். இந்த உலகம் ஒரு நாள் எங்கள் குரல்களுக்கும் செவி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

 

11: ஈழநிலாவின் கவிதைகளை படிப்பவர்களுக்கு நிச்சயம் திருநங்கைகளின் வலி புரியும். உங்களைப் போன்றோர் உங்களைப் பற்றிய புரிதல்களை மென்மேலும் அதிகமாய் சமூகத்துக்கு வலியுறுத்த வேண்டியுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

என்னைப் போன்ற ஒருசில திருநங்கைகள் தைரியமாக முன்வந்து திருநங்கைகளின் பிரச்சினைகளையும் மற்றைய பால், புதுமை மக்களின் பிரச்சினைகளையும் எழுதுவதாக எனக்கு தோன்றுகின்றது. மற்றவர்கள் ஏனோ தானோ என்று சமூகத்தில் ஓர் அங்கமாக இருந்துவிட்டுப் போகவே எத்தனிக்கிறார்கள். அவ்வாறிராமல், எல்லோரும் தத்தமது  உரிமைகளுக்கான நீதியை நிலைநாட்ட எவ்வாறாயினும் முயற்சி செய்யவேண்டும்.

 

12: மூன்றாம் பாலினம் குறித்து ஒவ்வொரு தனிமனிதரும் அறிந்து வைத்திருப்பதின் அவசியம் என்ன?

ஒவ்வொரு தனிமனிதரும் மூன்றாம் பாலின மக்கள் குறித்தான அறிவை பெற்றிருப்பது மிக மிக அவசியம். காரணம், நமது வீட்டில், நமது தெருவில், நமது சமூகத்தில், நமது ஊரில், நமது பாடசாலையில், நாம் வேலை பயிலும் இடத்தில் என்றவாறு நம்மோடு யாரேனுமொரு மூன்றாம் பாலின நபர் இருக்கக்கூடும். அவர், தனக்கு ஏதாவது ஆபத்து நேரிடும், தான் ஏதாவது அசிங்கப்பட நேரிடும், கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட நேரிடும், புறக்கணிக்கப்பட நேரிடும் என்ற பயத்தினால் தன்னை வெளிப்படுத்தாமல் கூட இருக்கலாம். ஆனால், நாம் அவர்களை புரிந்துகொண்டு அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களை கேலி கிண்டல் செய்யாமல் இருப்பதற்காக அவர்கள் பற்றியதான அறிவை பெற்றிருப்பது மிக மிக அவசியம்.

 

13: பொதுவாக எல்லா இடங்களிலும் மூன்றாம் பாலினம் குறித்தான பார்வைகள் வேறுபடுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் சக பாலின சமத்துவத்துக்குள் உள்வாங்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில் மூன்றாம் பாலினம் குறித்த தெளிவு இருக்கிறதா?

ஐரோப்பா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் திருநர்கள் பற்றிய பார்வை முற்றுமுழுதாக வேறுபடுகின்றது. அவர்கள் சரிசமனாக அங்கே மதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஆசியாவை பொருத்தமட்டில், திருநர்கள் தமது உரிமைகளுக்காக மிகவும் போராடவேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலை மாறவேண்டும். அனைத்து மக்களும் சமம் என்ற உணர்வு எல்லோருக்கும் வரவேண்டும். நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வு பெற்றிருந்தாலே போதும்.

 

14: இலங்கையில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடத்தப்படும் விதம், உங்கள் அனுபவத்தில்…

இலங்கையில் மூன்றாம் பாலின மக்கள் மிகவும் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாகவே எனக்கு தோன்றுகின்றது. அதுவும் பருவ மாற்றத்தில் இருக்கக்கூடியவர்கள் அதாவது ஒரு திருநம்பி பெண் தோற்றத்தில் இருந்தாலும், ஒரு திருநங்கை ஆண் தோற்றத்தில் இருந்தாலும், மிகவும் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு ஒடுக்குமுறைகளை சந்திக்கின்ற சூழ்நிலைகள் மிக அதிகம். ஆனால், ஒரு திருநம்பியின் பருவ மாற்றம் கடந்த, ஹோர்மோன் சிகிச்சைகளுக்கு பின்னரான தோற்றமும், ஒரு திருநங்கையின் ஹோர்மோன் சிகிச்சைகளுக்கு பின்னரான தோற்றமும் சமூகத்தில் எந்தவொரு இழிநிலைக்கும் இதுவரை பேசப்படவில்லை.

 

15: முதன்முதலில் நீங்கள் உங்களை ஒரு பெண்ணாக உணர்ந்த காலம் நினைவில் உள்ளதா? அதை யாரிடம் முதலில் வெளிப்படுத்தினீர்கள்?

எனக்கு ஆறு வயதிருக்கும்… அந்த வயதில் எனக்கான அறிவும் தெளிவும் மிக குறைவாக இருந்ததால், அதனை முதன்முதலில் யாருக்கும் சொல்லவில்லை. ஆனால், எனது பருவ மாற்றம், என்னுள் தோன்றும் உணர்வுகள் குறித்து முதன்முதலில் எனது தோழிகளிடம்தான் பகிர்ந்துகொண்டேன்.

16: திருநங்கைகளுக்கான தனியான சமூக, குடும்ப அந்தஸ்து இலங்கையில் மனிதர்களிடையே கிடைக்கின்றதா?

இலங்கையில் பெரும்பாலும் சமூகப் புறக்கணிப்பு இருக்கிறதே தவிர, குடும்ப புறக்கணிப்புகள் என்பது மிக மிகக் குறைவு. பெரும்பாலும் திருநங்கைகள், திருநம்பிகள் அவர்களது சொந்த வீடுகளில் தாய், தந்தையுடன்தான் வசிக்கின்றார்கள். ஒரு சிலர் மாத்திரமே குடும்பத்தை விட்டு தனியாக வசிக்கின்றார்கள்.

 

17: எப்போதாவது ‘நான் என் பெண்மையை உணராமல் அல்லது வெளிப்படுத்தாமல் அப்படியே இருந்திருக்கலாமோ’ என்ற எண்ணம் தோன்றியிருக்கிறதா?

நிச்சயமாக அவ்வாறு தோன்றியதே கிடையாது.

 

18: திருநங்கைகளுக்கென விசேட சலுகைகள் ஏதேனும் அளிக்கப்படுகிறதா, இலங்கையில்?

திருநங்கைகள், திருநம்பிகள் பிறப்புச் சான்றிதழில் பெயரை மாற்றக்கூடிய வசதிகள் உண்டு. அவர்கள் பாலினத்தை கூட மாற்றக்கூடிய வசதிகள் உண்டு. ஆனால், தனிப்பட்ட ரீதியாக அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சலுகையும் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு கிடையாது. ஆனால், திருநங்கைகள், திருநம்பிகள் தொடர்பான தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒரு சில உதவிகளை செய்து வருகின்றன.

 

19: மூன்றாம் பாலினத்தவர்களின் அடிப்படை மனித உரிமைகளை, சமூக பொருளாதார பிரச்சினைகளை, அதன் அவசியத்தை அரசாங்கத்திடம் தெரிவித்திருக்கிறீர்களா? அதற்கான முயற்சிகள் ஏதேனும் நடக்கிறதா?

திருநம்பிகள், திருநங்கைகள் தொடர்பான சமூக தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் செயற்பட்டு வருகின்றன. அந்நிறுவனங்கள் மூலமாக எமக்கான தேவைகள், சட்டவாக்கங்கள் மற்றும் உரிமைகள் போன்ற விடயங்கள் அரசாங்கத்திடம் கொண்டுசென்றுதான் இருக்கின்றன. அதற்கான பேச்சுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

20: இலங்கையில் அன்னளவாக எவ்வளவு மூன்றாம் பாலினத்தவர்கள் இருக்கிறார்கள் என்ற விபரங்கள் ஏதும் தெரியுமா? இலங்கையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கென ஓர் அமைப்பு ரீதியான சமூகம் உள்ளதா?

அன்னளவாக எவ்வளவு என்று சொல்ல முடியவில்லை. ஆனால், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள திருநங்கைகள் சமூக அமைப்பைப் போல இங்கே சமூக அமைப்புகள் திருநங்கைகளுக்கு என்று தனியாக கிடையாது.

 

21: உலகளவில் உங்களைப் போன்ற மூன்றாம் பாலினத்தவர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் அதேவேளை இன்றும் பல்வேறு இடங்களில் ஒரு சாரார் பல்வேறு தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் காணமுடிகிறதே… இது எதனால்?

ஆண்களும்தான் பல வகையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக ஆண்கள் தவறு செய்யவில்லையா? பெண்களும்தான் தனியாக சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தவறு செய்யவில்லையா?

தவறுகள் என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட விடயம். அதை ஒரு சமூகத்தோடு உற்றுப் பார்ப்பது என்பது மிக மிக தவறானது. ஓர் ஆண் தவறு செய்தால் எல்லா ஆண்களுமே தவறு செய்கின்றார்கள் என்று ஆகிவிடுமா? அல்லது ஒரு பெண் தவறு செய்கின்றார் என்றால், எல்லா பெண்களும் தவறு செய்கின்றார்கள் என்றாகிவிடுமா? அதேபோல்தான் திருநங்கைகளும். ஒரு சிலர் செய்கின்ற தவறால் எல்லாத் திருநங்கைகளும் அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவார்கள் என்றல்ல.

 

22:  சமூக பொருளாதார கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் காலம் வரும் வரை அவர்களின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பில்லை. உங்கள் அனுபவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஆண், பெண் பாலின சமத்துவமடைய ஆசிய நாடுகளில் குறிப்பாக, இலங்கை, இந்திய நாடுகளில் முட்டுக்கட்டையாக இருப்பவை எவை? அவற்றை உடைத்து சாதிக்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?

பெரும்பாலும் மதங்கள் ரீதியான ஒடுக்குமுறை திருநம்பிகள், திருநங்கைகளுக்கு அதிகம். அவை தவிர சமூகத்தில் உள்ள பல புத்திஜீவிகள், அறிவுஜீவிகள் திருநங்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இன்று இலங்கையில் பல துறைகளிலும் திருநங்கைகள் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சினிமா, மொடலிங், இலக்கியம் முதலிய துறைகளில் திருநங்கைகளின் சாதனை அதிகமாகத்தான் காணப்படுகின்றது.

 

23:  இன்று மூன்றாம் பாலினத்தவர்களையும் திருமணம் முடித்து, இல்லற வாழ்வில் இணையும் நிகழ்வுகளும் நடக்கின்றன. ஆனால், அது எல்லா மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சாத்தியப்படுவதில்லையே, ஏன்?

ஒரு திருநங்கை என்றால், அவளை முழுமையாக அறிந்த ஓர் ஆண் அவளை ஏற்றுக்கொண்டால் திருமணம் நடக்கின்றது. ஒரு திருநம்பியாக இருந்தால், அவனை முழுமையாக ஒரு பெண்  ஏற்றுக்கொண்டால் திருமணம் நடக்கின்றது. இங்கே ஏற்றுக்கொள்ளல்தான் அடிப்படை. ஏற்றுக்கொண்டால் யாரும் யாரையும் திருமணம் செய்யலாம்.

 

24: ஈழநிலாவின் அடுத்த படைப்பு என்ன? எப்போது வெளிவரும்? அதில் என்னென்ன சிறப்புகள் இருக்கும்?

எனது அடுத்த படைப்பு இலக்கியம் சார்ந்தது போன்றுள்ளது. சினிமா சார்ந்த ஒரு படைப்பும் உள்ளது.

சினிமா சார்ந்த படைப்பு எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி வெளிவரவுள்ளது. ~வெண்பா| எனும் இப்படைப்பு திருநங்கைகள் தொடர்பான ஒரு குறுந்திரைப்படம். அதாவது இலங்கையில் முதன்முதலாக ஒரு திருநங்கை இயக்கியிருக்கும் திருநங்கைகள் தொடர்பான குறுந்திரைப்படம். அடுத்து ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அது மிக விரைவில் வெளியிடப்படும்.

 

25: குறுகிய காலத்தில் உங்களிடமிருந்து சொற்ப விடயங்களையே எங்களால் பெற முடிந்தது. நிச்சயம் உங்கள் ஆக்கங்களுக்கான களம் தர மித்திரன் எப்போதும் தயாராகவே இருக்கிறது. உங்களைப் பற்றிய மேலதிக விடயங்களை அடுத்த படைப்பின் பின்னரான நேர்காணலில் வெளிக்கொண்டு வருவோம் நிலா.

இறுதியாக, நீங்கள் உங்கள் வாழ்வில் நன்றி சொல்ல யாருக்கேனும் கடமைப்பட்டிருந்தால், அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் சொல்லலாம்…

என்னுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் காரணமாக பலர் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் பெயரை தனியாக சொல்ல எனக்கு விருப்பமில்லை என்பதால் பொதுவாக எல்லோருக்கும் நன்றியை கூறி முடிக்கின்றேன்.

இந்த நேர்காணலுக்கு என்னை அழைத்தமைக்கு உங்களுக்கும் நன்றி!

ப. கனகேஸ்வரன் (கேஜி)

 

 

You must be logged in to post a comment Login