Interview

ஒரு சின்ன ஆசை… ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாட வேண்டும் – இளம் பாடகர் ஷெமில் க்ளின்சன்

By  | 

அறிமுகம்

நான் பிறந்து, வளர்ந்தது கொழும்பில். நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். கொழும்பு, பம்பலப்பிட்டி புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றுவிட்டு, தற்போது பல்கலைக்கழக தெரிவுக்காக காத்திருக்கிறேன். அதேவேளை நான் விரும்புகிற வகையில், ஒரு பாடகராக ஊடகங்களில் வலம் வருகிறேன் என்பதில் மகிழ்ச்சி.

இசையில் ஈடுபாடு வந்தது எப்படி?

சிறு வயதிலிருந்தே மிக இயல்பாக பாடுவேன். தேவாலயங்களில் கிறித்தவ கரோல் கீதங்கள் பாடியிருக்கிறேன். பாடசாலை விழாக்களில் சங்கீத ஆசிரியை திருமதி. கலாரஞ்சனி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் ஊக்கப்படுத்தலால் பாட ஆரம்பித்தேன். வகுப்பாசிரியை திருமதி. நவரட்ணம் அவர்கள், திருமதி. மதிரூபன் ஆசிரியை அவர்களின் வழிகாட்டலினால் சங்கீத பாடத்தை தெரிவு செய்து கற்க தொடங்கினேன். கற்றுக்கொண்டே போகிறபோது எனக்குள் இருக்கும் இசையார்வத்தை நானே உணர்ந்தேன்.

தொடர்ந்து முறையாக கர்நாடக சங்கீதம் கற்றீர்களா?

பள்ளியில் சங்கீதத்தை ஒரு பாடமாக கற்றது, மூன்று மாதங்கள் திரு. ஆரூரன் அவர்களிடம் இசைப் பயிற்சி எடுத்துக்கொண்டது என்கிற அளவிலேயே சங்கீத ஞானம் இருந்தது. அதன் பிறகு இப்போது தான் சங்கீதத்தின் ஆழம் தேடி கற்கும் முயற்சியில் பயம் கலந்த ஆர்வத்தோடு இறங்கியிருக்கிறேன்.

நீங்கள் பங்குபற்றிய இசைப் போட்டி நிகழ்ச்சிகள்…

ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது மதிரூபன் ஆசிரியை, சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார் சீசன் 3 இசைப் போட்டி நிகழ்ச்சி நிகழவிருப்பதாகவும், அதில் என்னை பங்கேற்குமாறும் கூறினார். மேடை பயம் காரணமாக அதில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. எனினும், ஆசிரியை என்னை வற்புறுத்தி கலந்துகொள்ள வைத்தார். அவ்வாறே நிகழ்ச்சியில் போட்டியாளராக தெரிவாகி, டொப் 10 வரை என்னால் முன்னேற முடிந்தது.

தொடர்ந்து சக்தி நிறுவனத்தில் பணியாற்றிய ரோய் ஜக்ஷன் அண்ணாவின் வழிகாட்டலில் சிரச டிவியின் The Voice of Teen நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். தற்போது சக்தி Chat, சிரச ‘சஜ்ஜாயனா’ நிகழ்ச்சிகளின் ஊடாக எனது இசைப்பயணம் தொடர்கிறது.

அல்பம் அல்லது வேறு பாடல் படைப்புகளை வெளியிட்டுள்ளீர்களா?

அல்பம் ஏதும் வெளியிடவில்லை. விளம்பர பாடலொன்று பாடியுள்ளேன். பாடகி அஷாந்தி டி அல்விஸின் பாடலில் நானும் மாதுவியும் இணைந்து பாடியுள்ளோம். பொருளாதார சிக்கல் காரணமாக சொந்த படைப்புகளை இதுவரை உருவாக்கவில்லை. இசையில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஆர்வமுண்டு என்பதால் சக்தி டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சமராபுரி’ தொடரில் நடித்து வருகிறேன்.

சகோதர மொழி இசைக் கலைஞர்களோடு பயணித்த அனுபவம்….

சகோதர மொழிக் கலைஞர்களிடம் இயல்பாக உள்ள தன்னடக்க குணத்தையும், சக கலைஞர்களை மதிக்கின்ற, அன்பை பகிர்கின்ற பண்பையும், அவர்களோடு பணியாற்றக்கூடிய நாட்களில் நான் கற்றுக்கொண்டேன்.

ஆரம்பத்தில் சிங்கள மொழித் திரைப்படங்கள், படைப்புகள், நடிகர்கள், கலைஞர்களை நான் அறிந்திருக்கவில்லை. சில பாடல்களை கேட்டிருந்த போதும், பாடிய பாடகர்களை பற்றிய விபரங்கள் ஒன்றும் தெரியாது.

‘The Voice of Teen’ குழுவோடு இணைந்துகொண்ட பிறகே சகோதர மொழி கலைஞர்களின் அறிமுகங்களையும், மறக்க முடியாத அனுபவங்களையும் பெற்றுக்கொண்டேன்.

நம் நாட்டு பாடல்களுக்கு இங்குள்ள இசைக் கலைஞர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? நீங்கள் எப்படி?

பொய் சொல்ல விரும்பவில்லை.

நான் உட்பட இங்கே நிறைய பேர் நம் நாட்டு பாடல்களையோ படைப்புகளையோ பார்ப்பது, கேட்பது, ரசிப்பது மிக குறைவு.

நாம் எப்போதுமே பிரம்மாண்டங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர்கள். மற்றவர்களை சுட்டிக்காட்டுவதற்கு முன் நான் முதலில் என் ரசனை எத்தகையது என்பதை உணரவேண்டும்.

அந்த வகையில் நான் முன்பை விட தற்போதைய சூழலில் நம் நாட்டுப் பாடல்களையும் உள்வாங்கும் இயல்பை வளர்த்துக்கொண்டுள்ளேன். அதற்கான வாய்ப்பினை இப்போது தான் பெற்றிருக்கிறேன்.

இலங்கையில் பாடலோ திரைப்படமோ எதுவொன்று உருவாகவும், அது மக்களின் ஈர்ப்பை பெறவும் பல சிரமங்களை கடக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறான படைப்பாளிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

பாடும் திறமை இருந்தும் பலருக்கு உரிய களம் கிடைப்பதில்லையே, ஏன்? மேடை வாய்ப்பு மறுக்கப்படுவதாலா?

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழல்கள்… சிலருக்கு மேடை பயம் இருக்கும். தயக்கம், தன்னம்பிக்கை இல்லாததும் காரணமாகலாம். அதை தவிர, ஒரு நிகழ்ச்சியில் பாட அழைத்துவிட்டு, சில காரணங்களுக்காக ‘பிறகு பார்க்கலாம்’ என சந்தர்ப்பம் பிற்போடப்படுகிற போதும், வாய்ப்புகளை பலர் இழந்துவிடுகின்றனர். எனினும், தேடி வருகிற வாய்ப்பை தவறவிடுவது நல்லதல்ல.

இந்திய திரையிசை பாடல்களின் இந்நாட்டு ரசிகர்களை ஈழத்துப் பாடல்களின் பக்கம் திசைதிருப்ப என்ன வழி?

முதலில் நம் நாட்டு படைப்புகளின் தரத்தில் நம்பிக்கை வேண்டும். இது இலங்கை படைப்பு – இந்திய படைப்பு என ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறைந்த ஒத்துழைப்பு, உதவியை கொண்டு பாடல்களையோ திரைப்படங்களையோ உருவாக்கும் படைப்பாளிகளுக்கு முடிந்தவரை பொசிட்டிவான கருத்துக்களை பகிர்ந்து, ஊக்கப்படுத்தலாம். மக்கள் ஏற்கக்கூடிய படைப்புகள் உருவாக்கப்படவும் வேண்டும்.

இலங்கை கடந்து, உலக இசை மேடைகளுக்கு செல்லும் உங்கள் கனவு எப்போது நிறைவேறும்?

வாய்ப்புகள் வந்தன. கொரோனா தொற்று காரணமாக கைகூடவில்லை. ஒரு சிறிய இடைவேளையில் நாம் முகம் காட்டாவிட்டால், மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள். அதனால் நாம் ஓயாமல் உழைக்க வேண்டியுள்ளது.

இசைத்துறைக்கு நான் கத்துக்குட்டி. இன்னும் இன்னும் நிறைய முயற்சித்து, ஒரு நாள் சர்வதேச மேடைகளை சந்திப்பேன் என நம்புகிறேன்.

இந்த இளமைக்கால இசைப்பயணத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள்?

பலரை போல் அவமானங்கள், தோல்விகளை நானும் சந்தித்திருக்கிறேன். அவை பின்னாளில் நான் சாதிக்கப்போகிறேன் என்பதற்கான அறிகுறிகளே. ஆம். நான் சாதிப்பேன்.. மக்களின் ஆதரவோடு!

இத்துறையில் உயர துணை நின்றவர்கள்?

வார்த்தைகளால் நம்பிக்கையும் அன்பும் பாய்ச்சக்கூடிய அம்மா, கண்டிப்போடு பிழைகளை சுட்டிக்காட்டும் அப்பா, பாடல் தெரிவுகளில் ஆலோசனை கூறும் அண்ணா, உறவினர்கள், நான் பாடுவதை விமர்சித்து நெறிப்படுத்தும் நண்பர்கள், எனது பள்ளி ஆசிரியர்கள் என பலர்…

உங்களது இலக்கு?

பின்னணி பாடகர், இசைத்துறை பேராசிரியர் ஆக வரவேண்டும், எப்படியாவது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா இசையில் பாடிவிட வேண்டும் என்பது எனது சின்ன சின்ன ஆசைகள். அதற்கு நிறைய உழைப்பும் பயிற்சியும் தேவை. தொடர்ந்து முயற்சிக்கிறேன்.

ரசிகர்களோடு சில வார்த்தைகள்…

இலங்கை மக்கள் நினைத்தால் பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும். அதிலும் கலைத்துறையில் ஒருவரை நம்பர் 1 இடத்துக்கு கொண்டுவரவும் முடியும். அதே நபரை பூஜ்ஜியமாக்கவும் முடியும். எனவே, உங்கள் ஆதரவால் கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். விமர்சிப்பதாயின், வன்மையாக இல்லாமல், மென்மையாக சொல்லுங்கள்.

– மா. உஷாநந்தினி

You must be logged in to post a comment Login