Articles

ஒரு பைத்தியக்காரனின் மலை மாளிகை!

By  | 

பவேரியா நாட்டின் மன்னன் லுட்விக்-2 (1845-1886) மிகச்சிறந்த ரசிகன். 19ஆம் நூற்றாண்டில் இவனைப் போல் கற்பனைவாதி யாருமில்லை என்று பெயர் எடுத்தவன்.

அவனது காலத்தில் வாழ்ந்த ரிச்சர்ட் வாக்னர் என்ற கவிஞன் ‘மலை மீது மாளிகை’ என்ற இலக்கிய நயம் மிகுந்த ஒரு கவிதையைப் படைத்தார். லுட்விக்குக்கு அந்தக் கவிதை மிகவும் பிடித்துப் போனது. கவிதையில் வருவதைப் போலவே ஒரு மலை மாளிகை அமைக்கத் தீர்மானித்தான். அதன் பயனாக எழுந்ததுதான் நியூஷ்வாஸ்டைன் என்னும் மலை மாளிகை.

இந்த மாளிகையின் மர வேலைப்பாடுகள் அபாரமானவை. காரணம், லுட்விக்-2 பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளை சுற்றியவன்.

அந்நாடுகளில் இருக்கும் எல்லா அரண்மனைகளையும் கண்டு களித்தவன். அந்த அரண்மனைகளின் மர வேலைப்பாடுகளை அறிந்தவன். அந்த நுட்பங்கள் அத்தனையையும் தான் கட்டிய மாளிகையில் பயன்படுத்திக் கொண்டான். இந்த மாளிகையில் 200 அறைகள் இருந்தன. குளியல் அறையில் குளிர்ந்த நீரும் வெந்நீரும் வருவதைப் போல் குழாய்களை அமைத்திருந்தான். இது அந்நாளில் புதியது.

 

மேலும், மாளிகையின் முக்கிய அறையில் தொலைப்பேசி இணைப்புகளை வைத்திருந்தான். தற்போதுள்ள இன்டர்கொம் வசதியைப் போன்றவை. அந்நாளில் அது வெகு அட்வான்ஸ்ட் டெக்னாலஜி.

இதுதவிர பிரமாண்டமான நீச்சல்குளம் மற்றும் பூங்காக்களையும் அமைத்திருந்தான்.

லுட்விக்-2 மற்ற மன்னர்களைப் போல அரசு கஜானாவைச் சுரண்டி தனக்கான இந்த மாளிகையை அமைக்கவில்லை. தன் சொந்தப் பணத்தில் கட்டத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் பணம் போதாமல் கடன் வாங்கினானே தவிர, நாட்டின் கஜானாவிலிருந்து ஒரு பைசாவைக் கூடத் தொடவில்லை.

லுட்விக்கின் அமைச்சர்கள், மன்னனைக் கண்டித்தார்கள். ‘இது வேண்டாத வேலை’ என்று எச்சரித்தார்கள். ஆனால், எதையும் மன்னன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதனால் லுட்விக்கை ‘பைத்தியக்காரன்’ என்று கூட திட்டினார்கள். ஆனால், அரசன் அசரவே இல்லை.

சூரியன் உதயமாகும் நேரத்தில் ஆல்பைன் பள்ளத்தாக்கில் இருந்து இந்தக் கோட்டையைப் பார்த்தால் மாளிகை காற்றில் பறப்பதைப் போல் தோன்றும்.

இந்தக் கோட்டையில் இருந்தபடி லுட்விக்-2 ஆட்சி செய்தான் என்கிறது வரலாறு.

இந்தக் கோட்டை போன்ற பிரமாண்டமான அரண்மனை அப்போதே நவ நாகரிகமாக அமைந்திருந்தது. மலை உச்சியில் இப்படி ஒரு வியக்கத்தக்க பிரமாண்டத்தை நிர்மாணிக்க அசாத்திய துணிச்சல் வேண்டும்.

பைத்தியக்காரனைப் போன்ற மனநிலை – யாரிடமும் கலகலப்பாக பேசாதவன் என்று பலராலும் சொல்லப்பட்ட லுட்விக், சுமார் 120 வருடங்களுக்கு முன்பாக இப்படி ஒரு வியக்கத்தக்க அரண்மனையை – அதுவும் மலையின் உச்சியில் நிர்மாணித்தான் என்பதை யாரும் எளிதில் நம்ப மாட்டார்கள். ஆனாலும், இன்னமும் அந்த மாளிகை கொஞ்சமும் அழகு குறையாமல் புத்தம் புதிய கட்டடம் போல் காட்சியளிக்கிறது.

மழை, புயல் என எந்த விதமான தட்ப வெப்பநிலையாலும் மாளிகையை அசைக்க முடியவில்லை.

“மலையின் உச்சியில் இருக்கிறது. அதனால் ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் அது நிச்சயம் இடிந்து விழத்தான் போகிறது” என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை.

இந்தக் கோட்டையைப் பார்த்து அசந்துபோன வேல்ட் டிஸ்னி, தனது ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ என்ற படத்தில் இந்த அரண்மனையைப் போல் செட் போட்டு படம் எடுத்தார்.

இவ்வளவு பெரிய மாளிகையை தனக்காக அமைத்த லுட்விக், இதில் வாழ்ந்தது வெறும் 182 நாட்கள் மட்டுமே!

மாளிகையின் கட்டுமானப்பணி நிறைவடைவதற்கு முன்பே அவன் இங்கு குடியேறிவிட்டான். 14 அறைகளுக்கு மட்டுமே உள் அலங்காரம் பூர்த்தியான நிலையில் அவன் இறந்துவிட, அதன் பின் மற்ற அறைகள் அலங்கரிக்கப்படாமலே விடப்பட்டன.

அவன் இறந்த அடுத்த நாளே இது சுற்றுலாத் தலம் ஆக்கப்பட்டது. இந்த மாளிகையை ஆண்டுக்கு 14 மில்லியன் மக்கள் பார்வையிடுகின்றனர்.

கோடை விடுமுறையின்போது ஒரு நாளைக்கு சுமார் 6,000 பேர் இந்த மாளிகையைச் சுற்றிப் பார்க்கின்றனர். இன்றும் காலத்தால் அழியாத கலைப் பொக்கிஷமாக இம்மலை மாளிகை திகழ்கிறது.

இதைப் பார்க்கும்போது லுட்விக்கை பைத்தியம் என்று சொன்னவர்களின் மனநிலைதான் கேள்விக்கு உள்ளாகிறது!

You must be logged in to post a comment Login