Articles

ஒலி மாசை கட்டுப்படுத்துவோம்!

By  | 

ன்றைய தொழில்நுட்ப மயமான உலகில் எந்த அளவுக்கு அபிவிருத்தி காணப்படுகிறதோ, அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு சுற்று சூழல் மாசும் உடல் நல குறைபாடுகளும் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றால் மிகையாகாது. இவ்வாறு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் ஏற்படும் அளப்பரிய பிரச்சினைகளுள் ஒலி மாசு (இரைச்சல் )மிக முக்கிய இடம் வகிக்கின்றது.
இன்று உலகளாவிய ரீதியில் ஒலி மாசு (Noise Pollution) பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளமை வருந்தத்தக்கது. தேவையற்ற அல்லது அளவுக்கு அதிகமான சத்தம் அனைத்துமே ஒலி மாசு எனப்படுகின்றது. பொதுவாக இந்த அதிக ஒலி, தொழிற்சாலைகள் மற்றும் வாகன போக்குவரத்து, புகை வண்டி, விமானம் மற்றும் குறிப்பிட்ட தொழிலகங்கள் ஆகியவற்றில் இருந்து எழுகின்றது. அதுமட்டுமன்றி கட்டிடங்கள் கட்டும் இடங்களில் இருந்தும் அதிக இரைச்சல் ஏற்படுகின்றது.

மனிதர்களின் ஆரோக்கியதுக்கு இந்த ஒலி மாசு பெரும் கேடாக இருப்பதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. பொதுவாக டெசிபல் என்ற அளவின் மூலம் ஒலி அளக்கப்படுகின்றது. சாதாரணமாக ஒரு மனிதன் 0 தொடக்கம் 140 டெசிபல் வரையான ஒலியை கேட்க முடியும். 120 முதல் 140 டெசிபல் அளவு வரையுள்ள சத்தம் காதுக்கு வலியை தருகின்றது.

ஒரு நூலகத்தில் அனுமதிக்கப்படும் ஒலியின் அளவு 35 டெசிபல். ஒரு பேருந்தோ அல்லது புகை வண்டியோ ஏற்படுத்தும் ஒலி 85 டெசிபல். கட்டிட வேலைகளில் எழுப்பப்படும் ஒலி 105 டெசிபல். தூரம் செல்ல செல்ல ஒலி குறைவடைவதையும் நாம் உணர்கின்றோம்.

80 டெசிபலுக்கு அதிகமாக தொடர்ந்து பல மணிநேரம் அதிக ஒலியை கேட்கும்போது முதலில் செவிப்பறை பாதிக்கப்படுகின்றது, பின்னர் காது கேட்கும் சக்தியை இழக்க நேரிடுகின்றது, இரத்த அழுத்தம் அதிகமாகிறது, மன சோர்வும் தூக்கமின்மையும் ஏற்பட்டு மன நிம்மதியை இழக்க நேரிடுகின்றது. ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்கு கூட இயலாத நிலை ஏற்படுகின்றது. மேலும் அதீத ஒலி இதய கோளாறையும் ஏற்படுத்துகின்றது.

மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் குழந்தைகள் அதிகம் உள்ள இடங்கள், நூலகங்கள் ஆகியவற்றில் மிகக் குறைந்த ஒலி அளவை கடைபிடிப்பது இன்றியமையாதது.

வீடுகளில் வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்களை கூட ஒலி கட்டுப்பாட்டை அனுசரித்து கேட்கும் பழக்கமானது ஆரோக்கியத்தையும் அண்டை அயலாரின் பாராட்டையும் பெற்று தரும். அதீத ஒலி பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் பெரும் பாதிப்பாக அமைகின்றது. சத்தத்தை வைத்து தகவல்கள் பரிமாற்றம் செய்யும் இவை ஒலி மாசு காரணமாக தகவல்களை பரிமாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. மனிதர்களுக்கு பைத்தியம் பிடிப்பது போன்ற நிலையை பறவைகள் அடைகின்றது. கூடுதல் ஒலியின் காரணமாக சில சமயம் உயிரையும் இழக்கின்றன.

இது மட்டுமல்லாமல் கடலில் கப்பல் போக்குவரத்தால் ஏற்படும் கடும் இரைச்சல் காரணமாக ஒலிகளின் மூலமாக தகவல் பரிமாற்றிக்கொள்ளும் திமிங்கிலங்கள், டொல்பின்கள் பெரிதும் பாதிக்கின்றன. கடலில் செல்லும் கப்பல்கள் எழுப்பும் இரைச்சல், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள் எழுப்பும் இரைச்சல் ஆகியவற்றால் இவை தனக்கு இரை தேட முடியாமலும் சந்ததி பெருக்கத்திற்கு தகுந்த துணையிடம் நாட முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்படுகின்றது. மேலும் திசை தெரியாமல் தடுமாறும் திமிங்கிலங்கள் பெரிய கப்பல்கள் மீது மோதி உயிரையும் இழக்கின்றன.

மேலும் அதிக ஒலியால் நாம் பாதிக்கப்படும்போது புற்று நோயுடன் தொடர்புடைய D.N.A பாதிக்கப்படுவத்துடன் உயர் இரத்த அழுத்தமும் ஏற்படுகின்றது. அதிக ஒலி காதுகளுக்கு நல்லதல்ல. அதிக ஒலியால் நிரந்தரமாகக் கூட காது கேட்கும் திறனை இழக்க நேரிடலாம்.
மனிதன் மட்டுமல்லாமல் விலங்குகளும் கூட இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. சத்தம் அல்லது இரைச்சல் காரணமாக விலங்குகள் தங்கள் குரலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இதனை லம்பார்ட் வோகல் ரெஸ்போன்ஸ் என்பர். கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல்களை வேவு பார்க்கும் மின்விசைகள் செயற்படும்போது கடல் திமிங்கிலங்கள் எழுப்பும் ஒலிகள் நீளம் கொண்டவையாக இருப்பதை விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விலங்குகள் உரத்த குரலை எழுப்பவில்லை எனில், அவைகள் எழுப்பிய சைகைகள் ஒலி மாசு காரணமாக மறைக்கப்பட்டு இணை விலங்குக்கு போய் சேர்வதில்லை. இதனால் எல்லா விலங்குகளும் உரக்க குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

போக்குவரத்தின் இரைச்சலுக்கு ஆளாகும் வரிக்குதிரைகள், குதிரைகள், சிட்டுக் குருவிகள் என்பன இந்த ஒலி மாசு காரணமாக தமது இணையிடம் இருந்து பிரிந்துவிடும் நிலை ஏற்படுகின்றது. இதனால் உயிரினங்களின் சாதாரண வாழ்க்கை முறை பெரிதும் பாதிக்கப்பட்டு மிகுந்த உயிரியல் மற்றும் உருவாக்கம் சார்ந்த வாழ்க்கை வழிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

மிகையான சத்தம் காரணமாக இதய நரம்புகள் சார்ந்த இதய பாதிப்புகள் ஏற்படும். மேலும் எட்டு மணி நேரத்துக்கு மேல் சத்தம் கூடிய சூழலில் இருந்தால் இரத்த அழுத்தம் கணிசமாக அதிகரிப்பதுடன் நரம்புகள் இறுக்கமடைந்து இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படுகின்றது. மேலும் ஒலி மாசு, மனிதர்களை உளவியல் ரீதியாக பெரிதும் பாதிப்பதுடன் எரிச்சலடைய செய்யவும் கோபத்தை ஏற்படுத்தவும் காரணமாகின்றது என ஆய்வுகள் குறிப்பிடுகிறது.
இவ்வாறு உலகையே ஆட்டிப்படைக்கும் ஒலி மாசை கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல எம் ஒவ்வொருவரினதும் கடமையும் கூட. சாலைகளில் இரைச்சலை தடுப்பதற்கு இரைச்சலை தடுக்கும் கருவிகளை பயன்படுத்தல், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தல், சாலைகளின் மேல் பாகத்தை மாற்றியமைத்தல், கனரக வண்டிகளை வரையறுத்தல், வண்டிகளின் சக்கரங்களை மாற்றியமைத்தல் போன்ற வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நகர் புறங்களில் பாரியளவு ஒலி மாசை கட்டுப்படுத்தலாம்.

மேலும் எம்மால் இயன்றவரை வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றையும் பாடல்கள் கேட்கும் கருவிகளையும் ஒலி கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தல் வேண்டும். எம்மால் முடிந்தவரை தேவையற்ற சத்தங்களை எழுப்பாமல் இருப்பதால் நமது உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி எம்மை சூழ உள்ள விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் என அனைத்தையும் பாதுகாக்க முடியும். இந்த பூமி எமக்கு மட்டும் சொந்தம் அல்ல இதில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது என்பதை பகுத்தறிவு படைத்த மனிதன் உணர்ந்தால் மட்டுமே பூமியை காப்பது சாத்தியம்.

-எஸ். வினோஜா

You must be logged in to post a comment Login