Articles

ஒவ்வொரு மாதமும் ஒளிவு மறைவு

By  | 

ஒரு தனியார் நிறுவனத்தில் தட்டச்சு வேலை (டைப்பிஸ்ட்) செய்யும் எளிமையான ஊழியர் நிரஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இன்னும் திருமணமாகாத… ஆனால், திருமணம் செய்வதற்கான முழு தகுதியுடைய வயதுதான் அவளுக்கு… (சரியான வயது தெரியாது!)

நிரஜா எப்போதும், எந்த தேவைக்காகவும் சக ஊழியர்களிடம் உதவி என்று போய் நின்றதில்லை.

தனக்கு வேண்டியவற்றை தானே தேடி வைத்துக்கொள்ளும் இயல்புடையவள்….

தான் உண்டு, தன் வேலை உண்டு என நாள் முழுக்க கணினித்திரையில் பார்வையை செலுத்தியபடி கீபோர்ட்டை தட்டிக்கொண்டே இருப்பவள்…

எத்தனை காகிதங்கள் மேசைக்கு வந்தாலும் அத்தனையையும் உரிய நேரத்தில் டைப் செய்து கொடுத்துவிடுபவள்…

அன்றைய தினம் அவளுக்கு வேலை ஓடவேயில்லை. இருப்பு கொள்ளவில்லை. பதற்றமாகவே இருந்தாள்.

கிட்டத்தட்ட இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டவளாக குழப்ப ரேகைகள் முகத்தில் ஓட, கண்களை அங்குமிங்கும் அலைபாய விட்டாள்.

எதையோ தேடினாள்…. முதலில் கைப்பையில் தேடினாள். கிடைக்கவில்லை. பிறகு, மேசையின் இழுப்பறைகள் இரண்டையும் திறந்து தலையை நுழைத்து தேடினாள். அங்கேயும் இருக்கவில்லை.

யாரிடம் கேட்பது…? எப்படி கேட்பது…? ஒரே படபடப்பு. வெட்கம்!

நிரஜா இதுவரை இதைப் பற்றி மற்றவர்களிடம் பேசியதுகூட கிடையாது. அவ்வளவு கூச்ச சுபாவம்!

அப்படியிருக்கும்போது, ‘உங்க கிட்ட இருக்கா?”, ‘மேலதிகமா இருந்தா, ஒன்னு தருவீங்களா?” என்று பக்கத்தில் உள்ள பெண்களிடம் ஒரு பெண் சகஜமாக, கொஞ்சம் மறைமுகமாக கேட்கக்கூடிய அத்தியாவசிய பொருளை கேட்கவும் கூச்சமாக இருந்தது, அவளுக்கு.

(இந்த காலத்தில் இப்படியொரு பெண்ணா?)

மாதமானால் திகதி பார்த்து முன்னேற்பாடுகளோடு வேலைக்கு வருபவள், ஏதோவொரு யோசனையில் ‘அதை” எடுக்காமல் வந்துவிட்டாள்.

எனினும், நேரம் ஆக ஆக பொருளின் தேவையை, நெருக்கடியை உணர்ந்து, அங்கு இருப்பவர்களிலேயே தனக்கு மிக நெருக்கமான தோழியை கூப்பிட்டு, ரகசியமாக கேட்டாள்.

அவளோ, ‘ஐயோ, எங்கிட்ட இல்லயே! எனக்கு முடிஞ்சிட்டதால கொண்டு வரல…” என்றதும், நிரஜாவுக்கு இன்னும் படபடப்பு கூடியது.

‘இப்ப என்ன செய்றது?” என கேட்டாள்.

‘கொஞ்சம் இருங்க… நா போய் யார் கிட்டயாவது கேட்டு வாங்கிட்டு வர்றேன்…” என்றவளிடம், ‘எனக்குன்னு கேக்காதீங்க…. உங்களுக்கு வாங்குற மாதிரி வாங்கிட்டு வாங்க….” என்ற நிரஜாவை பார்த்து யுவதி நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டுப் போனாள்.

யார், யாரிடமோ கேட்டு ஒரு வேளையாக வாங்கிக்கொண்டு வந்து, நிரஜாவிடம் கொடுத்துவிட்டாள் அவள்.

பொருள் கிடைத்துவிட்டது. இப்போது அதை எடுத்துக்கொண்டு கழிப்பறைக்கு எப்படி செல்வது? நிரஜாவுக்கு அடுத்த பதற்றம் ஆரம்பமானது.

சுற்றிலும் ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் எப்படி எடுத்துச் செல்வது என யோசித்தாள்.

எடுத்துச் செல்லும்போது யாரேனும் கண்டுவிட்டால் அசிங்கமாகப் போய்விடுமே……!

எப்படி மறைத்துக்கொண்டு செல்வது?

எடுத்துச் செல்லும்போது ‘என்ன அது” என நோட்டம் விடுவதற்கென்றே சில ஆண்கள் இருக்கிறார்களே… அவர்களின் பார்வையிலிருந்து எப்படி தப்புவது?

கையில் கொண்டுபோகும்போது கீழே விழுந்துவிட்டால், என்னவாகும்….!

இவையெல்லாம் பெண்களுக்கு எழக்கூடிய அத்துமீறிய பயங்கள்தான். என்றாலும் சில பெண்கள் இதற்கென சில நுட்பங்களை  கையாள்வர்.

நிரஜாவுக்கும் அந்த நுட்பம் தெரியாமல் இல்லை. எப்படியோ எடுத்துச் சென்று,  கழிப்பறைக்குள் நுழைந்துவிட்டாள்.

அது, நான்கு அறைகள் கொண்ட பெண்கள் கழிப்பறை.

உள்ளே சென்றவள், மறைத்து வைத்திருந்ததை கையில் எடுத்தாள்.

‘என்ன பிரச்சினை? எதுக்கு இவ்வளவு பதற்றம்?”  என நிரஜாவை பார்த்து கேட்டாள், கண்ணாடியை பார்த்து தலை சீவி பின்னிக்கொண்டிருந்த இன்னொரு யுவதி.

‘ஒன்னுமில்ல, விமென்ஸ் ப்ரோப்ளம்…”

‘ஓ…. மென்சஸ்! அதுக்கா இந்த பாடு!”

‘மறைச்சி எடுத்துட்டு வரவேணாமா….? யாரும் பாத்துட்டா?”

‘இப்படியெல்லாம் பயந்தா எதுவும் நம்மால செய்ய முடியாது… நானுன்னா, பேட் எடுப்பே… ஒரு பேப்பர்ல சுத்துவே… எம்பாட்டுக்கு எடுத்துட்டு வந்துருவே…. ஒளிச்சு மறைச்சு பயந்தெல்லா கொண்டுவர மாட்டே…

இந்த காலத்துல வெட்ட வெளிச்சமா பொம்பளங்க என்னவெல்லாமோ செய்றாங்க… எப்படி எப்படியோ பேசுறாங்க… நீங்க என்னன்னா இன்னும் அந்த காலத்து ஆளாவே இருக்கீங்க…” என அந்த யுவதி கூறியதற்கு,

‘நமக்கிருக்கும் அவசரத்தில் இவளிடம் வாய் கொடுப்பானேன்” என மனதுக்குள் நினைத்து, ‘ம்… அது சரி…” என்று மட்டும் சொல்லி சிரித்துவிட்டு, கழிவறைக்குள் புகுந்துவிட்டாள், நிரஜா.

அதன் பிறகு அந்த சம்பாஷணையை மறந்துவிட்ட நிரஜா, ஒரு கட்டத்தில், யதேச்சையாக என்னிடம் அந்த நாள் அனுபவத்தை பற்றி வாய் திறந்தாள்.

நிரஜாவின் அன்றைய மனநிலையை உணர்த்தவே, நான் மேலே ‘மாதவிடாய்” என்றோ ‘நெப்கின்” என்றோ சொல்வதை தவிர்த்தேன்.

பொதுவாக, பூப்படைந்த பெண்கள் மெனோபாஸ் காலம் வரையில் மாதாமாதம் வரக்கூடிய உதிரப்போக்கான மாதவிடாய் அல்லது மாதவிலக்கை ஒவ்வொரு மாதமும் சந்தித்து வருகின்றனர்.

இது, பெண்களுக்கு பழகிப்போன ஒன்று என்றாலும், ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்கள் வந்துவிட்டால், எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களும் இயல்பற்ற தன்மையும் புதிய அனுபவங்களை பெறும் புதியவர்களாக பல பெண்களை ஆக்கிவிடுகின்றது. இதை முதலில் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கே ஒரு விடயத்தை சரிபாருங்கள்.

நிரஜாவுக்கு அறிவுரை கூறிய அந்த யுவதி, புதிய சிந்தனைகளை தன் எண்ணத்தில் உலாவவிடக்கூடிய நாகரிக பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவள் பேச்சில் புலப்படுகிறது.

அந்த யுவதி கூறியதில் உண்மை இருக்கிறது…

இன்றைக்கு மாதவிடாய் பற்றி எல்லோரும் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். மாதவிடாயை பற்றி பேசக்கூடிய நிறைய திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன.

விளம்பரங்களில் கூட மாதவிடாய் காலத்தில் பெண்கள் அணியக்கூடிய நெப்கின்களின் பிரயோகங்கள் பற்றி ஏராளமாக பேசி வருகிறார்கள்.

விளம்பர காட்சிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. மாதவிடாய்க்கு உட்பட்ட பெண்கள் பற்றிய காட்சிகளை உள்ளது உள்ளவாறு எடுத்துக்காட்ட தொடங்கிவிட்டனர்.

இத்தனை மாறுதல்கள் காலத்தால் நிகழ்ந்திருப்பினும், ஒன்று மட்டும் நம் சமூகத்தில் இதுவரை நிகழ்ந்ததே இல்லை.

ஒரு பெண் தன்னுடைய கணவன், நாடிச் செல்லும் ஆண் மருத்துவர் என்கிற இரண்டு ஆண்களை தவிர வேறு எந்த ஆணிடமும் மாதவிடாயை பற்றி பேசமாட்டாள்.

தந்தை, சகோதரன், மகன், நண்பன், உறவுக்கார ஆண்கள், ஆசிரியர் என தனக்கு தெரிந்த எந்தவொரு ஆணிடத்திலும், ‘எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது….” என்று சொல்வதில்லை.

கடமையின் நிமித்தம் ஆண் – பெண் இருபாலார் குழுமியுள்ள இடத்தில் மாதவிடாய் பற்றிய பொதுவான கருத்துக்களை பெண்கள் பரிமாறிக்கொண்டாலும், தன்னை முன்னிறுத்தி எந்த பெண்ணும் ஆண்களிடத்தில் மாதவிடாய் விடயங்களை பகர்வதில்லை.

இத்தகைய மனநிலையால்தான் மாதாந்திர சுழற்சிக் காலத்தில் ஒளிவு மறைவுகள் பெண்களிடத்தில் காணப்படுகின்றன.

அந்த நாகரிக யுவதியை போல நம் பெண்கள் என்னதான் முற்போக்காக, விதிவிலக்காக சிந்தித்தாலும், வெளிப்படைத்தன்மையோடு செயற்பட எத்தனித்தாலும், அவர்கள்,  வரையறைகளுக்குட்பட்டு வாழும் நிரஜா போன்றோரின் வட்டத்துக்குள் தான் நிற்கின்றனர், இன்னமும்…!

– உருத்திரா

You must be logged in to post a comment Login