General

கடன் வாங்கும்போது கவனியுங்க!

By  | 

இஷ்டத்திற்கு கடன் வாங்கி கஷ்டப்படுவதை தவிர்ப்பது எப்படி எனக் கூறும், நிதி ஆலோசகர் சதீஷ்குமார்:

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், குடும்பத்தின் தேவைகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, அதிக பணம் தேவைப்படுகிறது. இதை நிறைவேற்ற, தயங்காமல் கடன் வாங்கும் மனநிலைக்கு நம்மில் பலரும் உள்ளோம். நம் ஆசையை புரிந்து கொண்டுள்ள சில தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, நம்மை காலாகாலத்திற்கும் கடனாளியாக வைத்துஇருக்கின்றன. உடனடி கடன், ‘அப்’ மூலம் கடன் என, கவர்ச்சிகரமான முறைகளில், ஐந்து நிமிடங்களில் கடன் தொகையை, நம் வங்கிக் கணக்குக்கு மாற்றி விடுகின்றன. எனினும், தகுதிக்கு மீறிய கடன் வாங்கக் கூடாது.

உங்களால் மாதம் எவ்வளவு தொகையை, மாத தவணைகளாக கஷ்டமில்லாமல் செலுத்த முடியும் என்பதை கணக்கிட்டு, அந்த அளவுக்குள் மட்டுமே கடன் வாங்க வேண்டும். கிடைக்கிறது அல்லது கொடுக்கின்றனர் என்பதற்காக கடனை அதிக அளவில் வாங்கக் கூடாது.

வாழ்க்கை முறை ஆசைகளை பூர்த்தி செய்ய நுகர்வோர் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்கும் போது, உங்களின் மாத சம்பளத்தில், 10 சதவீதத்திற்கு மேல், போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்கள் பலர், தங்களின் மாத சம்பளத்தில், 40 சதவீதத்திற்கும் அதிகமாக, செலுத்துவதை பார்க்க முடிகிறது; இது ஆபத்தில் தான் முடியும்.

வீட்டுக்கடன் நல்ல கடன் தான் என்பதுடன், அது நீண்ட கால கடன் என்பதால், சம்பளத்தில், 30 சதவீதம் வரை, இருக்கலாம்.

நாம் குடியிருக்கும் வீட்டிற்காக வாங்கும் கடனுக்கு தான், இந்த அளவு. முதல் வீடு வாங்கி விட்டோம்; இரண்டாவது வீட்டை முதலீட்டிற்காக வாங்குகிறோம்,  எனினும் நீண்ட காலத்திற்கு கடனை இழுத்தடிக்கக் கூடாது. எந்த கடனாக இருந்தாலும், குறுகிய காலத்திற்கு வாங்க வேண்டும்; குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே திருப்பிச் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

மேலும் சிலர், முதலீடு செய்ய கடன் வாங்குகின்றனர்; அதுவும் தவறு. பெரும்பாலானோர், வட்டியை கணக்கிடுவதே இல்லை. நமக்கு கடன் கிடைப்பதே பெரிது என எண்ணி விட்டு விடுகின்றனர். எங்கு குறைந்த வட்டி, எத்தனை மாதத்திற்கு குறைந்த வட்டி என்பதை பார்த்து கடன் வாங்க வேண்டும். முக்கியமாக, கடன் வழங்கும் நிறுவனத்தின் விதிமுறைகளை கவனமாக படித்து, அதில் உங்களுக்கு ஒத்துவராத அம்சங்களை விலக்கித் தர கேட்கலாம். இப்படி கடன் வாங்கினால், கடனால் சுமை ஏற்படாது; சுகமான அனுபவமே ஏற்படும்!

 

You must be logged in to post a comment Login