General

கடல் இறந்துவிட்டது!

By  | 

கடல் வற்றிப் பார்த்திருக்கிறீர்களா!

உண்மையில் ஒரு கடலே வற்றி காணாமல் போயுள்ளது.

முந்தைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியான கஜகஸ்தான்- உஸ்பெகிஸ்தான் ஏரல் என்றொரு கடல் அமைந்திருந்தது. ஆனால், இப்போது இல்லை… இறந்துவிட்டது. ஆம், அந்தக் கடல் காணாமல் போய் 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

உண்மையில், இது கடலல்ல. கடலளவு பெரிதான ஏரி. உலகிலேயே நான்காவது மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியை அண்டி 1100 குட்டித்தீவுகள்…

அத்தனை தீவுகளையும் உள்ளடக்கிய பெருந்தீவுக்குள் ஆழமான நீர்ப்பரப்பாக ஏரல் இருந்ததாலேயே இது கடல் என்கிற அந்தஸ்தை பெற்றது.

இன்றைக்கு கடல்நீர் காணாமல் வற்றிப்போய் மொட்டை பாலைவனமாய் ஆகியுள்ள இந்நிலப்பரப்பு, ஒரு காலத்தில் நீர்வளம் நிரம்பியதாக இருந்தது.

1960இல் இதன் பரப்பளவு 68 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள்.

அதிலிருந்து கிளைத்த சிற்றேரிகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் 5.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்தன.

இக்கடலுக்கு தெற்கிலிருந்து பாயும் அமுர் தாரியா, கிழக்கிலிருந்து பாயும் சிர் தாரியா ஆகிய நதிகள் கிளை பரப்பி நீரை பகிர்ந்தளித்தன.

முன்னாள் சோவியத் யூனியனில் இடம்பெற்ற 15 நாடுகள் இந்த கடலை நம்பியிருந்தன.

இந்நிலையிலேயே சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் மத்திய ஆசியாவின் வறண்ட நிலப்பரப்பை வளமாக்கி அப்பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். திட்டம் என்னவோ சிறந்ததாக இருப்பினும் அது ஏரலுக்கே எமனாக வந்துவிட்டது, பின்னாளில்.

அவர்களின் திட்டப்படி 61ஆம் ஆண்டு ஏரல் கடலை சுற்றி அதிகளவு பருத்தி உற்பத்தி செய்யப்பட்டன. 1980களில் கிட்டத்தட்ட 70 லட்சம் ஹெக்டேயரளவு பருத்தி பயிரிடப்பட்டன.

அதை தொடர்ந்து கடலை சுற்றி மக்கள் தொகை 2.7 கோடியாக உயர்ந்தது. இதனால் மனிதர்களுக்கு நீர் அதிகம் தேவைப்பட்டது. அதில் தண்ணீர் நிறைய செலவானது.

அத்தோடு பருத்தி நிலம் நிறைய தண்ணீர் குடிக்கும் என்பதால் விவசாயத்துக்கு 90மூ தண்ணீர் உறிஞ்சப்பட்டது.

பருத்தி விளைச்சலை அமோகமாக்க வேதி உரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. இதனால் மேலதிக நீர்வளம் தேவைப்பட்டதால் ஏரல் கடலுக்கே படியளக்கும் சிர் தாரியா அமுதர்யா ஆகிய ஆறுகளை (1986, 89களில்) விவசாய நிலத்துக்கு திருப்பினர்.

அதற்காக குறுக்கு நெடுக்காக கால்வாய்களை வெட்டினர். கழிவு நீரை தேங்கச் செய்தனர். உப்பேற்றமும் அதிகரித்தது. மறுபுறம் விவசாயத்தால் பூச்சிகொல்லி, உரங்களால் நிலப்பரப்பு மாசடைந்தது. 40மூ வயல்கள் பாதிக்கப்பட்டன.

60களில் எப்போது பருத்தி பயிரிடப்பட ஆரம்பித்ததோ அப்போதிருந்தே ஏரல் கடலின் அழிவும் ஆரம்பமாகிவிட்டது. கடல் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றிக்கொண்டே வந்தது. 50 பாசன ஏரிகள் வறண்டுபோயின.

இக்கடல் நீரின் கனிமச்சத்து 4 மடங்கு குறைந்துபோனது. கனிமச்சத்து குறைந்ததால் மீன்கள் செத்து மடிந்தன. கூடவே, மற்ற உயிரினங்களும் கொத்து கொத்தாய் அழிந்தன.

மீன்கள் இல்லாததால் 1982ஆம் ஆண்டோடு மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. ஒரு காலத்தில் ஏரல் ஏரியில் ஆண்டுதோறும் 40 லட்சம் கிலோ அளவில் மீன்கள் பிடிக்கப்பட்டன. அப்படி மீன் வாடையில் ஊறிக்கிடந்த கடற்பரப்பு பிற்காலத்தில் ஓய்ந்துபோனது, இயற்கைக்கே நேர்ந்த கொடுமை.

1988ஆம் ஆண்டு முதன்முறையாக ஏரல் கடலின் அழிவை இயற்கைப் பேரழிவாக அன்றைய ரஷ்யா அறிவித்தது.

1990களில் ஏரல் கடலை அண்டிய 95மூ சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் ஈரமிழந்து வெடிக்கத் தொடங்கின.

ஏரல் கடல் சுருங்கிப்போனதால் அதன் சுற்றுச்சூழலில் தட்பவெப்பம் நிலை தலைகீழானது. கடும் வெப்பம், கோடை மழை, பனிப்பொழிவு, நீண்ட குளிர் என மாறி மாறி பருவங்கள் அழையா விருந்தாளியாய் அடிக்கடி எட்டிப்பார்த்தன.

பருத்தி விவசாயத்தினால் விளையப்போகும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆசைப்பட்டு அன்றைக்கு நதிகள் வளைக்கப்பட்டன.

எனினும், 15 வருடங்களுக்குப் பிறகு பருத்தி உற்பத்தியில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதோடு பொருளாதாரம் இன்றி, வளமான சூழலும் குன்றி ஏரல் கடல் யாருக்கும் பயனின்றி போய்விட்டது.

காலப்போக்கில் அந்த ஏரல் கடலானது நீர்வளமிழந்து சுருங்கிவந்ததை 1964, 1985, 2003 ஆகிய ஆண்டுகளில் செய்மதியிலிருந்து (செயற்கைக்கோள்) எடுக்கப்பட்ட படங்களை பொக்கிஷங்களாக வைத்து பராமரித்துவருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன் அக்கடற்பரப்பை அண்டி வசிக்கும் மக்கள் இறந்துபோன கடலை மீட்கமுடியாவிட்டாலும் உயிரோடிருக்கும் தம் மக்களின் உடல்நலத்தை காக்கவென அந்த காய்ந்த மணல்வெளியில் சாக்சல் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

 

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login